Published:Updated:

அடுத்த ஆண்டு முதல் டென்னிஸில் இருந்து ஓய்வு - லியாண்டர் பயஸ்! #NowAtVikatan

25.12.2019 இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

லியாண்டர் பயஸ்
லியாண்டர் பயஸ்
25 Dec 2019 9 PM

டென்னிஸில் இருந்து ஓய்வு

டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக லியாண்டர் பயஸ் அறிவித்துள்ளார். 2020-ஆம் ஆண்டு வரை மட்டுமே டென்னிஸ் விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார். டென்னிஸ் விளையாட்டில் 7 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ஒரே வீரர் பயஸ் ஆவார்.

25 Dec 2019 6 PM

பிரசாரம் ஓய்ந்தது!

தமிழகத்தில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து வெளியாட்கள் உடனடியாக வெளியேற மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

25 Dec 2019 5 PM

இனி ஒரே மொழியில் மட்டுமே தேசிய கீதம்!

இலங்கையில் இனி ஒரே மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்று அந்நாட்டு அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அறிவித்துள்ளார். சுதந்திர தின விழாவில் இனி தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது என்றும், சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அமைச்சர் பண்டார, ``இந்தியாவில் பல மொழிகள் இருந்தாலும் ஒரே மொழியில் தானே தேசிய கீதம் இசைக்கப்படுகிறது" எனக் கூறியுள்ளார்.

25 Dec 2019 8 AM

லக்ஷ்மன் ஸ்ருதி ராமன் தற்கொலை!

பிரபல ஆர்கஸ்டிரா நிறுவனமான லக்ஷ்மன் ஸ்ருதியின் நிர்வாக இயக்குநர் வே. ராமன்(54) நேற்று இரவு தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவருக்கு நிர்மலா ராமன் என்ற மனைவியும், மனோஜ் குமார் என்ற மகனும் உள்ளனர். அசோக் நகர் போலீஸார் தற்கொலை வழக்காகப் பதிவு செய்து இதை விசாரித்து வருகின்றனர். கடந்த சில நாள்கள்களாகவே ராமன் உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

25 Dec 2019 8 AM

10 விநாடிகளில் முடிந்த கதை!

சீனாவில் கடந்த 23 -ம் தேதி இரவு, ஹுனான் பகுதியில் கைவிடப்பட்ட 19 மாடிகள் கொண்ட கட்டடம் ஒன்று வெடி வைத்து தகர்க்கப்பட்டது. அடுத்தடுத்து வானுயர்ந்த கட்டடங்கள் அந்தப் பகுதியில் இருந்ததால், இதை தரைமட்டமாக்குவது சவாலானதாக இருந்தது என்கிறார்கள் இந்தப் பணியில் ஈடுபட்டவர்கள். இறுதியில் 23 -ம் தேதி இரவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பின்னர் கட்டடம் வெடி மூலம் தகர்க்கப்பட்டது. அதன் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. வெறும் பத்தே விநாடிகளில் கட்டடம் தகர்ந்து விழும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது.

25 Dec 2019 7 AM

இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்!

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி வரும் 27-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தப் பகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. அதன் பின்னர் அந்தப் பகுதிகளில் இருக்கும் வாக்காளர்கள் அல்லாத மற்றவர்கள் வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று மாநிலத் தேர்தல் ஆணையத்தில் தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இது உள்ளாட்சித் தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிப்பது தொடர்பாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக விவாதிக்கப்பட்டது.