Published:Updated:

மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு - தமிழக சமூகசேவகர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது! #NowAtVikatan

25.1.2020 - இன்றைய முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

25 Jan 2020 7 PM

மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு!

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சமூக சேவகர் முகமது ஷெரீஃப் என்பவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் உறவினர்கள் அல்லாத 25ஆயிரத்துக்கும் மேற்பட்ட சடலங்களுக்கு இறுதிச்சடங்குகள் செய்துள்ளார்.

அதேபோல், தமிழகத்தை சேர்ந்த அமர்சேவா சங்கத்தின் மாற்றுத்திறனாளி சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சமூக சேவகர் ஜகதீஷ் லால் அவுஜாவுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ், ஜார்ஜ் பெர்னான்டஸ், ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்-க்கு பத்ம விபூஷண், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் டிவிஎஸ் வேணு சீனிவாசனுக்கு பத்ம பூஷன் விருது அறிவிப்பு.

25 Jan 2020 2 PM

காவலர் தேர்விலும் முறைகேடு?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடந்த தேர்வில் வேலூர் மாவட்டத்தில் இருந்த ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் பலர் தேர்வானதாக கூறப்படுகிறது. குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து இந்த புகார் வெளிவந்துள்ளது.

25 Jan 2020 12 PM

கச்சத் தீவு செல்லும் படகுகளுக்கு இலவச டீசல் - நாட்டுப்படகு மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை!

பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள்
பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள்
உ.பாண்டி

நாட்டுப்படகுகள் மூலம் கச்சத் தீவு திருவிழாவிற்கு செல்லும் பாரம்பரிய மீனவர்கள் ஆலோசனை கூட்டம் பாம்பனில் சகாயம் தலைமையில் நடந்தது. நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர்கள் எஸ்.பி.ராயப்பன், அருள், சின்னத்தம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், வரும் கச்சத்தீவு திருவிழாவிற்கு 30 நாட்டுப்படகுகளில் மீனவர்கள் தங்கள் குடும்பத்துடன் செல்வது எனவும், இதற்கான உரிய அனுமதியையும், நாட்டுப்படகுகளுக்கான டீசலை அரசு இலவசமாக வழங்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் உயர்நீதிமன்ற வழிகாட்டுதல் படி கச்சதீவு திருவிழாவிற்கு விசைப்படகுகளில் செல்லும் பயணிகளிடம் கட்டணம் வசூல் செய்வதை தடை செய்வதுடன், அரசே பயணிகளுக்கான படகுகளில் பக்தர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

25 Jan 2020 7 AM

கே.சி.பழனிசாமி திடீர் கைது

அ.தி.மு.க முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது செய்யப்பட்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவித்தார் கே.சி.பழனிசாமி. இதையடுத்து அவர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி கடந்த 2018-ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எனினும் நீக்கப்பட்ட பின் தொடர்ந்து கட்சியில் இருப்பதாக கூறிவந்தார்.

இதற்கிடையே, இன்று அதிகாலை முதல் அவரது வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின் தான் தொடர்ந்து அதிமுகவில் இருப்பதாக கூறி ஏமாற்றியதாகவும், அ.தி.மு.க பெயரில் போலி இணையதளம் நடத்தியதாகவும் புகார் கூறி அவரை போலீஸார் கைது சூலூர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த விவகாரம் அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

25 Jan 2020 11 AM

நிர்பயா குற்றவாளிகள் மனு தள்ளுபடி!

சீராய்வு மனுக்களை தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள் திகார் சிறை நிர்வாகம் மறுப்பதாக கூறி நிர்பயா குற்றவாளிகள் பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இதுதொடர்பான விசாரணையில் சிறை நிர்வாகம் ஆவணங்களை அளித்துவிட்டதாக பதிலளிக்க நிர்பயா வழக்கு குற்றவாளிகள் அக்ஷய் குமார் சிங், பவன்குமார் சிங்கின் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

25 Jan 2020 11 AM

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு! - 10 பேரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக இரண்டு வட்டாட்சியர்கள் உள்பட மொத்தம் பத்து பேரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் சென்னையில் விசாரணை நடத்தி வருகின்றனர். கீழக்கரை வட்டாட்சியர் வீரராஜிடம் நேற்று இரவு முழுவதும் விசாரணை நடைபெற்ற நிலையில் கடலூரைச் சேர்ந்த மேலும் ஒருவர் இடைத்தரகரைக் கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

25 Jan 2020 11 AM

குறைபாடு உடைய மின்கம்பமா வாட்ஸ் அப் பண்ணுங்க!

மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு - தமிழக சமூகசேவகர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது!   #NowAtVikatan

திருச்சி மாவட்டத்தில், திருச்சி சத்திரப்பட்டியைச் சேர்ந்த ராமமூர்த்தி, ஒப்பாயி, குணசேகரன், பெரம்பலூர் மாவட்டம், திருவாலந்துறை கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், திருச்சி மாவட்டம் பெருகமணியில் படித்துவந்த தர்மபுரியைச் சேர்ந்த மாணவர் அஜீத்குமார் உள்ளிட்டோர் அறுந்துகிடந்த மின்கம்பியை அகற்றியபோது ஏற்பட்ட மின்விபத்தில், கடந்த சில மாதங்களில் 8பேர் பலியாகி உள்ளனர்.

இப்படியான சூழலில்தான் தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழகம் முழுவதும் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்கள், மின் தடங்கள் குறித்த ஆய்வைத் துவங்கியுள்ளது. அந்தவகையில் உங்க ஏரியாவில், ஏதாவது பழுதான மின்கம்பி மற்றும் கம்பங்கள் சேதமடைந்திருந்தாலோ, அல்லது பாதுகாப்பற்ற முறையில் மின்கம்பிகள் தாழ்வாக தொங்கிக்கொண்டிருந்தாலோ உடனடியாக 1912 என்கிற எண்ணுக்குத் தகவல் கூறலாம்.

இந்த எண்களுக்குச் சேதமடைந்த மற்றும் பாதுகாப்பற்ற மின்கம்பங்கள் மற்றும் மின் வழித்தடங்கள் குறித்து வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பினால் அவற்றை உடனடியாக சரி செய்ய முயற்சி எடுக்கப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு