Published:Updated:

சபாஷ் நண்பரே.. அப்படி வாங்க!- ரஜினி கருத்துக்கு கமல்ஹாசன் வரவேற்பு #NowAtVikatan

ரஜினி - கமல்
ரஜினி - கமல்

26-02-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...

26 Feb 2020 8 PM

கமல்ஹாசன் வரவேற்பு!

`சபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை. வருக, வாழ்த்துக்கள்.' என்று ரஜினிகாந்த் பேட்டி குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்து டுவீட் பதிவிட்டுள்ளார்.

26 Feb 2020 7 PM

உளவுத்துறையின் தோல்வியே காரணம்! - ரஜினி

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். ``சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக முதல் ஆளாக நிற்பேன் எனக் கூறியிருந்தேன். டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம். போராட்டங்களை மத்திய அரசு இரும்பு கரம்கொண்டு அடக்கியிருக்க வேண்டும். சில கட்சிகள் மதத்தை வைத்து போராட்டங்களை தூண்டுகின்றன. நான் பா.ஜ.கவின் ஊதுக்குழல், பா.ஜ.க எனக்கு பின்னால் இருப்பதாக கூறுவது வருத்தமளிக்கிறது" என்றார்.

26 Feb 2020 4 PM

570 நாள்களுக்குப் பின் முதலிடத்தை இழந்த கோலி!

சபாஷ் நண்பரே.. அப்படி வாங்க!- ரஜினி கருத்துக்கு கமல்ஹாசன் வரவேற்பு #NowAtVikatan

ஐசிசி-யின் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நியூஸிலாந்து அணிக்கு எதிராக முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் கோலி தலா 2 மற்றும் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் இன்று வெளியான டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் கோலி தனது முதலாவது இடத்தினை இழந்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தைப் பிடித்துள்ளார். கோலி 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 5 -ம் தேதி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் ஸ்மித்தை முந்தி முதலிடம் பிடித்தார். அதாவது 570 நாள்களுக்குப் பின்னர் கோலியை வீழ்த்தி ஸ்மித் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

26 Feb 2020 2 PM

`அமைதியும் நல்லிணக்கமுமே நமது பண்பாட்டின் அடையாளம்!'

அமைதியும் நல்லிணக்கமுமே நமது பண்பாட்டின் அடையாளம் என பிரதமர் மோடி குறிப்பிட்டிருக்கிறார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

டெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 20-ஐத் தாண்டியிருக்கும் நிலையில், அந்தப் பகுதிகளில் அமைதி திரும்ப மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வன்முறைச் சம்பவங்கள் நடந்த பகுதியை நேரில் ஆய்வு செய்தார். அதன்பின்னர், பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் சூழ்நிலை குறித்து விளக்கினார்.

`கெஞ்சினேன்... விடவில்லை; தொடர்ந்து அடித்தார்கள்!'-திக்திக் நிமிடங்களை விவரித்த தொழிலாளி #Delhiriots

இந்தநிலையில், இதுகுறித்து பிரதமர் மோடி முதல்முறையாகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள மோடி, ``அமைதியும் நல்லிணக்கமுமே நமது பண்பாட்டின் அடையாளம். டெல்லியில் வாழும் சகோதர, சகோதரிகளே அமைதியை நிலைநாட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். விரைவில் அந்தப் பகுதிகளில் அமைதி திரும்ப வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

டெல்லி பல்வேறு பகுதிகளில் நிலவும் சூழல் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போலீஸார் உள்ளிட்டோர் அந்தப் பகுதிகளில் அமைதி திரும்பத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்'' என்று பிரதமர் மோடி குறிப்பிட்டிருக்கிறார்.

26 Feb 2020 11 AM

டெல்லி போலிஸின் மெத்தனமே பிரச்னை பெரிதாகக் காரணம்!

டெல்லியில் குடியுரிமை சட்டத்திருத்த ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த கலவத்தில் காயமடைந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 -யை தொட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் தலைநகரில் நடந்த இந்த பிரச்னை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

டெல்லி ஷாகின் பாக் போராட்டக்காரர்களை இடம் மாற்ற கோரிய வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வரும் மார்ச் 23-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துத் தீர்ப்பு வழங்கினர்.

தொடர்ந்து டெல்லி கலவரம் பற்றி கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள், வடகிழக்கு பகுதியில் நடந்தது எல்லாம் துரதிர்ஷ்டவசமானது. டெல்லி போலீஸின் மெத்தனப் போக்குதான் பிரச்னை இந்த அளவுக்குப் பெரிதாகக் காரணம். வன்முறை நடக்கும் போது உடனடி நடவடிக்கை எடுக்காமல் எதற்காகக் காத்திருக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பிய அவர்கள் இதில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணவும் போலீஸுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

26 Feb 2020 10 AM

என்.எஸ்.ஏ அஜித் தோவல் நேரில் ஆய்வு!

டெல்லியில் வன்முறை ஏற்பட்ட இடங்களில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் வெடித்த வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில், டெல்லியில் அமைதி திரும்பத் தேவையான நடவடிக்கைகள் மற்றும் மேற்பார்வையிடும் பொறுப்பு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக, மத்திய அரசு வட்டாரங்களில் கூறப்படுகிறது.

`நீ இந்துவா... முஸ்லிமா; ஆடையைக் கழற்று..!'- டெல்லி வன்முறையில் பத்திரிகையாளரின் `திகில்' அனுபவம்
அஜித் தோவல்
அஜித் தோவல்
ANI

வன்முறை ஏற்பட்ட ஜாஃப்ராபாத், சீலாம்பூர் உள்ளிட்ட பகுதிகளை நேற்று இரவு பார்வையிட்ட அஜித் தோவல், இன்று காலையும் டெல்லியில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன், மத்திய உள்துறை மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் இருந்தனர். அந்தப் பகுதியைச் சார்ந்த பல்வேறு சமுதாயத் தலைவர்களுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் அமைச்சரவைக்கு, இன்று அவர் நேரில் விளக்கமளிக்க இருப்பதாகவும் தெரிகிறது. அதேபோல், டெல்லியில் மூடப்பட்டிருந்த மெட்ரோ ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. டெல்லியில் வன்முறை ஏற்பட்ட பகுதிகளில், இன்று காலை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடு காணப்படுகின்றன. அதேபோல், பாதுகாப்புப் பணிக்காக ரிசர்வ் போலீஸார் மற்றும் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு