Published:Updated:

கொரோனா: `மே 2-ம் தேதி வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தடை!’ - தேர்தல் ஆணையம் அதிரடி #NowAtVikatan

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

26-04-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

27 Apr 2021 10 AM

`மே 2-ம் தேதி வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை!’

இந்தியத் தேர்தல் ஆணையம்
இந்தியத் தேர்தல் ஆணையம்

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வரும் மே மாதம் 2-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில், வாக்கு எண்ணிக்கையின் போதும், வெற்றிபெற்ற பின்னரும், கட்சியினரின் கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

26 Apr 2021 7 PM

தமிழகத்தில் கொரோனா நிலவரம்!

கொரோனா
கொரோனா

இன்று தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,684 -ஆகப் பதிவாகியிருக்கிறது. 94 பேர் பலியாகியிருக்கின்றனர். தமிழகத்தில் மொத்தமாக இன்றுவரை 13,651 மரணங்கள் கொரோனா காரணமாகப் பதிவாகியிருக்கின்றன.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 4,250 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 1,15,642 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

26 Apr 2021 4 PM

`மே 1, 2-ம் தேதிகளில் தமிழகத்தில் முழுஊரடங்கை அமல்படுத்தலாம்..!’ 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் மே மாதம் 2 -ம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான வழக்கு விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது.

அப்போது நீதிமன்றம், ``தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலுக்குத் தேர்தல் ஆணையமே காரணம். அரசியல் கட்சிகளும் இஷ்டம்போல் பிரசாரம் செய்ததே கொரோனா பரவலுக்கான காரணம். நீதிமன்றம் எவ்வளவு அறிவுறுத்தியும் தேர்தல் ஆணையம் காதில் வாங்கவில்லை. பிரசாரம் நடந்தபோதெல்லாம் வேற்று கிரகத்தில் இருந்தீர்களா? கொரோனா தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்றாவிட்டால், வாக்கு எண்ணிக்கைக்குத் தடைவிதிக்க நேரிடும். வாக்கு எண்ணிக்கை நாளன்று அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருக்க வேண்டும்” என்றது காட்டமாக.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இந்தநிலையில் தற்போது `வரும் மே 1, 2 தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தலாம்’ என நீதிமன்றம் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறது. ``வாக்கு எண்ணிக்கையில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவே இந்தப் பரிந்துரைகளை வழங்குகிறோம். மக்களை பாதிக்காதவாறு முழு ஊரடங்கு அறிவிப்பை ஏப்.28-ல் வெளியிட வேண்டும். மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது, தேர்தல் பணியில் ஈடுபடுவோரை மட்டும் அனுமதிக்கலாம்” என்றது நீதிமன்றம்.

26 Apr 2021 10 AM

`ஆக்ஸிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதிக்கலாம்?!’

ஆக்ஸிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருக்கிறார்கள். தி.மு.க உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள், `தேவையைக் கருத்தில் கொண்டு ஆக்ஸிஜன் உற்பத்திக்கு மட்டும், தமிழக அரசின் உச்சகட்ட கண்காணிப்பில் அனுமதி அளிக்கலாம்’ எனக் கருத்துத் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆக்ஸிஜன் உற்பத்தி தவிர அங்கு வேறு எந்தப் பணியும் நடக்கக் கூடாது எனவும் பெரும்பாலான கட்சிகள் கருத்து தெரிவித்துளளதாகவும் தகவல்!

26 Apr 2021 10 AM

இந்தியாவுக்கு உதவும் கூகுள், மைக்ரோசாஃப்ட்!

``இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு அதிர்ச்சி அளிக்கும்விதமாக இருக்கிறது. கூகுள் நிறுவனமும், நிறுவன ஊழியர்களும் இந்தியாவுக்கு ரூ.135 கோடி மதிப்பிலான உதவிகளை வழங்விருக்கிறோம்” என்று கூறியிருக்கிறா சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை | Sundar Pichai
சுந்தர் பிச்சை | Sundar Pichai

மேலும், மைக்ரோசாஃப்ட் நிறுவன சி.இ.ஓ சத்யா நாதெள்ளா, ``இந்தியாவின் தற்போதைய சூழ்நிலையால் மனமுடைந்திருக்கிறேன். அமெரிக்க அரசு இந்தியாவுக்கு உதவ முன்வந்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மைக்ரோசாஃப்ட் தனது வளங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை நிவாரண முயற்சிகளுக்கு உதவுவதற்கும், முக்கியமான ஆக்ஸிஜன் செறிவு சாதனங்களை வாங்குவதற்கும் தொடர்ந்து பயன்படுத்தும்” என்றார்.

26 Apr 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்..!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 3,52,991 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1,73,13,163 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கொரோனா
கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,812 . இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,95,123 -ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,43,04,382-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 28,13,658 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 14,19,11,223 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

26 Apr 2021 9 AM

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு அறுவை சிகிச்சை!

சரத் பவார்
சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சரத்பவாருக்கு சமீபத்தில் மும்பையிலுள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் பித்தப்பையில் ஆபரேஷன் செய்யப்பட்டது.ஆபரேஷனுக்குப் பிந்தைய சிகிச்சைக்காக சரத் பவார் அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று வந்தார். அப்படிச் சென்று வந்தபோது வாயில் கட்டி இருப்பது தெரியவந்தது. புண் போன்று இருந்த அந்தக் கட்டியை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர். அது, தற்போது ஆபரேஷன் செய்து அகற்றப்பட்டது. ஆபரேஷனுக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுத்துவருவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

26 Apr 2021 9 AM

திறக்கப்படுமா ஸ்டெர்லைட்! - இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை முன்னெப்போதும் இல்லாத தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் பாதிப்பு அதிக அளவில் இருப்பதால், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஆக்ஸிஜன் தேவையும் அதிகரித்து காணப்படுகிறது. நாடு முழுவதும் பல இடங்களில் மருத்துவ ஆக்ஸிஜனுக்குத் தட்டுப்பாடும் நிலவுகிறது. தமிழகத்திலும் வரும் நாள்களில் ஆக்ஸிஜனின் தேவை அதிகரிக்கும். இந்தநிலையில், வேதாந்தா நிறுவனம், மூடிக்கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தை நாடியது. இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றமும் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக அனுமதிக்கலாமா என தமிழக அரசிடம் பதில் கேட்டிருந்தது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில், ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக அரசே கையகப்படுத்தி ஆக்ஸிஜன் தயாரிக்கலாம் என்று யோசனை வழங்கியது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் இதே கருத்தை வலியுறுத்தினார்.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

தமிழகத்தில், குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஆக்ஸிஜன் பெயரில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கடும் எதிர்ப்பு நிலவியது. இந்தநிலையில், தமிழக முதல்வர் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காலை நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். முதல்வர் இன்று அவசர ஆலோசனை நடத்தவிருக்கும் சூழலில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்டெர்லைட் ஆலைப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு