Published:Updated:

Corona Live Updates: தமிழகத்தில் ஒரே நாளில் 3,645 பேருக்கு தொற்று; சென்னையில் 50 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு!

கொரோனா
கொரோனா

26.6.2020 | கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

26 Jun 2020 6 PM

தமிழகத்தில் கொரோனா நிலவரம்!

Corona Live Updates: தமிழகத்தில்  ஒரே நாளில் 3,645 பேருக்கு தொற்று; சென்னையில் 50 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு!

தமிழகத்தில், இதுவரை இல்லாத அளவாக இன்று மட்டும் 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,622 -ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1,957 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,690 -ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

கொரோனா
கொரோனா

தமிழகத்தில், கொரோனா நோய்த் தொற்றால் ஒரே நாளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 957 -ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,358 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 41,357.

26 Jun 2020 5 PM

15-ம் தேதி வரை வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து!

ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா விமானம்

இந்தியாவிலிருந்து வெளிநாட்டு விமான சேவைகள் வரும் ஜூலை 15-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து தொடர்ந்து செயல்படாமல் இருக்கிறது. எனினும் வந்தே பாரத் திட்டம் மூலம் வெளிநாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

26 Jun 2020 2 PM

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஜூன் 29-க்குப் பிறகு முடிவு!

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே முடிவெடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் முடிவைப் பொறுத்து தமிழகத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா பாதிப்புகள் குறித்துப் பேசிய அவர், ``கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் உயிர்ச்சேதம் குறைக்கப்பட்டுள்ளது. இது மருத்துவத் துறை சார்ந்த பிரச்னை என்பதால், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கான தேவை ஏற்படவில்லை’’ என்றும் முதல்வர் தெரிவித்தார்.

26 Jun 2020 1 PM

ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாருக்குக் கொரோனா பாதிப்பு!

சென்னைக் காவல்துறையில் 1,005 போலீஸாருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 410 பேர் குணமடைந்து பணிக்குத் திரும்பியிருக்கிறார்கள்.

சென்னை போலீஸ்
சென்னை போலீஸ்

விசாரணைக் கைதிகள் உள்ளிட்டோருக்கு முகக் கவசம் அணிவிக்க வேண்டும் எனவும் போலீஸார் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும் எனவும் டி.ஜி.பி திரிபாதி அறிவுறுத்தியிருந்தார்.

26 Jun 2020 10 AM

இந்தியாவில் 4.90 லட்சம் பேருக்குப் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,73,105லிருந்து 4,90,401 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 17,296 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

Corona
Corona

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 418 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,894லிருந்து 15,301 அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,85,637 ஆகவும் உயர்ந்துள்ளது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 96,99,575 ஆக உயர்ந்திருக்கிறது. தொற்று பாதிப்பிலிருந்து 52,53,089 பேர் குணமடைந்திருக்கிறார்கள். உலக அளவில் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,90,935ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து... இந்தியாவுக்கு எப்போது கிடைக்கவரும்? #Covid19FAQ
அடுத்த கட்டுரைக்கு