Published:Updated:

CoronaVirus: தமிழகத்தில் 4 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு! - புதிதாக 5,958 பேருக்குத் தொற்று! #NowAtVikatan

corona
corona

26-08-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

26 Aug 2020 7 PM

தமிழகத்தில் புதிதாக 5,958 பேருக்குத் தொற்று!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,958 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,97,261-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,606 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,38,060-ஆக அதிகரித்தது. தமிழகத்தில் கொரோனாநோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 118 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 6,839-ஆக அதிகரித்துள்ளது.

Corona
Corona

சென்னையில் மேலும் 1,290 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 1,290 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,29,247-ஆக அதிகரித்துள்ளது.

26 Aug 2020 5 PM

நீட், ஜே.இ.இ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!

நீட், ஜே.இ.இ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் 7 மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.

சோனியா காந்தி
சோனியா காந்தி

காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி ஆட்சி நடைபெறும் மாநில முதல்வர்களுடன் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, காணொலிக் காட்சி வாயிலாக இன்று ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்குப் பின்னர் நீட் மற்றும் ஜே.இ.இ ஆகிய தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய பஞ்சாப், ராஜஸ்தான், புதுச்சேரி, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, மேற்குவங்கம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 7 மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.

நீட், ஜே.இ.இ தேர்வுகளைத் தள்ளிவைக்க முடியாது!- உச்சநீதிமன்றம்... மக்கள் கருத்து? #VikatanPollResults
26 Aug 2020 4 PM

ரேண்டம் எண் வெளியீடு!

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டது. இதனை உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்திய 1,31,436 பேருக்கு இந்த ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.

26 Aug 2020 4 PM

தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி சோதனை!

கொரோனாவுக்கு எதிராக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசி ஆய்வு இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில் அந்த ஆய்வை தமிழகத்தில் நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தடுப்பூசி
தடுப்பூசி

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா ஆகிய மருத்துவமனைகளில் இந்த கொரோனா தடுப்பூசி சோதனை நடைபெற உள்ளது எனவும் முதல்வர் அறிவித்துள்ளார். சென்னையில் சுமார் 300 பேருக்கு இந்த தடுப்பு மருந்து செலுத்தப்படவுள்ளது.

26 Aug 2020 2 PM

`தேவைப்பட்டால் அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் கொரோனா பரிசோதனை!’

தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்ட தொடர் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த கூட்டத் தொடரை சமூக இடைவெளியுடன் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடத்தவும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தத சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், `கூட்டத்தொடர் நடைபெறும் வேளையில் தேவைப்பட்டால் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படலாம்” என்றார்.

26 Aug 2020 1 PM

தமிழகத்தில் 450 டாஸ்மாக் பணியாளர்கள் பணியிட மாற்றம்!

தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளர்கள் 450 பேர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை

பணி நேரக் குறைப்பு உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் பணியாளர்கள் நேற்று இரண்டு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 450 பேரை பணியிட மாற்றம் செய்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது. இது டாஸ்மாக் பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

26 Aug 2020 12 PM

`மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!'

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

கடன் இ.எம்.ஐ செலுத்துவது தொடர்பான வழக்கில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யாததற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ``வங்கிக் கடன் விவகாரங்களில் ரிசர்வ் வங்கியின் பின்னால் ஒளிந்துகொள்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள்’’ என்று குறிப்பிட்டிருக்கும் உச்ச நீதிமன்றம், ``உங்கள் வேலையைச் செய்யும் நேரம் இதுவல்ல; தேவையான நிவாரணத்தை வழங்க வேண்டியது அவசியம்” எனறு குறிப்பிட்டிருக்கிறது.

26 Aug 2020 12 PM

உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை  மேல்முறையீடு!

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

`தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது செல்லும்’ என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் தரப்பு நிர்வாகம் முறையீடு செய்திருக்கிறது. `ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது செல்லும்’ என உயர் நீதிமன்றத் தீர்ப்பை தூத்துக்குடியிலுள்ள மக்கள் பலர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

26 Aug 2020 10 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 32,34,475 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 67,151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கோவிட்-19 பரிசோதனை
கோவிட்-19 பரிசோதனை

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 1,059 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 59,449-ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24,67,759-ஆகவும் உயர்ந்துள்ளது.

26 Aug 2020 9 AM

காங்கிரஸ் முதல்வர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை!

சோனியா காந்தி
சோனியா காந்தி

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்தவிருக்கிறார். இந்தக் கூட்டத்தில் ஜி.எஸ்.டி மற்றும் நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் ஆலோசிக்கப்படவுள்ளன.

26 Aug 2020 9 AM

அறிவிக்கப்பட்ட தேதிகளில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள்!

நீட் தேர்வு
நீட் தேர்வு

தேசிய தேர்வு முகமை, ` ஏற்கெனவே அறிவித்தபடி, ஜேஇஇ மற்றும் நீட் தேர்வு நடைபெறும்’ என அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், ஜேஇஇ மெயின் தேர்வுக்கு நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுவிட்டதாகவும், நீட் தேர்வுக்கு விரைவில் நுழைவுச்சீட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு