Published:Updated:

`குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி?!'- போலீஸ் விசாரணை #NowAtVikatan

குருமூர்த்தி வீடு
குருமூர்த்தி வீடு

26.1.2020 - இன்றைய முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு!

26 Jan 2020 9 PM

குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி?

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை சுமார் 03.15 மணி அளவில் இரு சக்கர வாகனங்களில் வந்த 6 நபர்கள் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் மர்ம நபர்களை துரத்தவே, அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட தற்போது விசாரணை நடைபெற்றுவருகிறது.

26 Jan 2020 5 PM

மாஸ்டர் படத்தின் வைரல் போஸ்டர்!

விஜய் - விஜய் சேதுபதி நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒரு நட்சத்திர பட்டாளாமே நடித்துள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் தற்போது படத்தின் 3வது லுக் வெளியாகியுள்ளது. விஜய் - விஜய் சேதுபதி இருவரும் சண்டையிடுவது போல் வெளியாகியுள்ள போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

26 Jan 2020 5 PM

`ஆட்சியின் மரபை மீறி உளறல்!'

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூரில் நடந்த எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், ``ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் மாற்றி ஓட்டு போட்டதால்தான் தி.மு.க சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இப்ப சத்தியமங்கலத்துல தி.மு.க சேர்மன் வந்துட்டாங்க. அவங்களால என்ன செய்ய முடியும். அவங்க ஜெயிச்சாலும் நாமதான் ஆளுங்கட்சி, நாம பண உதவி கொடுத்தாத்தான் அவங்க வேலை செய்ய முடியும். நாம பணம் கொடுக்கலைன்னா அவங்க எப்படி வேலை செய்வாங்க.

சத்தி ஒன்றியத்துல என்ன அடிப்படை வசதிகள் வரும். எதுவுமே வராதே. தி.மு.க-வில் வெற்றி பெற்ற சேர்மன்களிடம் பணம் கம்மியாகத்தான் கொடுப்போம்” எனக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கிடையே, அமைச்சர் கருப்பணன் பேச்ச குறித்து தி.மு.க பொருளாளர் துரைமுருகன் தமிழக ஆளுநருக்கு “ஆட்சியின் மரபை மீறி, ஒரு அமைச்சரின் உளறல்!” என புகார் மனு அனுப்பியுள்ளார்.

`தி.மு.க ஜெயிச்சா போதுமா, நிதியை நாங்க தானே ஒதுக்கணும்!’- அமைச்சர் கருப்பணன் சர்ச்சைப் பேச்சு
26 Jan 2020 3 PM

இந்தியா அபார வெற்றி!

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்து மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது.

இந்தியா தரப்பில் ஜடேஜா 2 விக்கெட்டுகளும் ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி மற்றும் துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து களமிறக்கிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கே.எல்.ராகுல் அரைசதம் அடித்து அசத்தினார்.

26 Jan 2020 2 PM

இந்திய அணிக்கு 133 ரன்கள் இலக்கு! #NZvIND

இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது.

ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. போட்டியின் தொடக்கம் முதலே சிறப்பாகப் பந்துவீசிய இந்திய பந்துவீச்சாளர்கள் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன்குவிப்பைக் கட்டுப்படுத்தினர். நியூஸிலாந்து அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, செய்ஃப்ரெட், மார்டின் கப்தில் ஆகியோர் தலா 33 ரன்கள் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா 2 விக்கெட்டுகளும் ஸ்ரதுல் தாகுர், முகமது ஷமி மற்றும் துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். நியூசிலாந்து அணி கடைசி 10 ஓவர்களில் 59 ரன்கள் மட்டுமே எடுத்தது.

26 Jan 2020 12 PM

2வது டி20 போட்டியில் நியூஸிலாந்து பேட்டிங்! #NZvIND

இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் பேட்டிங் தேர்வு செய்தார். முதல் போட்டி நடைபெற்ற அதே ஆக்லாந்து மைதானத்திலேயே இந்தப் போட்டியும் நடக்கிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல் போட்டியில் களமிறங்கிய பிளேயிங் லெவனில் எந்த மாற்றத்தையும் இரு அணிகளும் செய்யவில்லை.

26 Jan 2020 10 AM

டெல்லியில் குடியரசு தின விழாக் கொண்டாட்டம்!

நாட்டின் 71வது குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடியை ஏற்றிவைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக, புதிதாக அமைக்கப்பட்டுள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மரியாதை செலுத்தினர். இந்தக் குடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சொனாரோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டுள்ளார்.

26 Jan 2020 10 AM

முதல் குடியரசு தின விழா!

26 Jan 2020 9 AM

நாடு முழுவதும் குடியரசு தினவிழா கோலாகலம்!

நாட்டின் 71வது குடியரசு தினவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை மெரினாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியேற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையும் அவர் ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். விழாவில், பல்வேறு துறைகளுக்கான விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மேலும், அஸ்ஸாம், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களின் பாரம்பர்ய நடனங்களோடு கலை நிகழ்ச்சிகள் மாணவர்களால் நடத்தப்பட்டன. லடாக்கில் 17,000 அடி உயரத்தில் இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தேசியக்கொடியேற்றி குடியரசு தினத்தைக் கொண்டாடினர்.

26 Jan 2020 8 AM

கே.என்.நேருவுக்கு தி.மு.கவில் புதிய பதவி!

தி.மு.கவின் முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலுவுக்குப் பதிலாக கே.என்.நேரு நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அன்பில் மகேஷ் - கே.என்.நேரு
அன்பில் மகேஷ் - கே.என்.நேரு

தி.மு.கவின் தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் பதவியில் இருக்கும் டி.ஆர்.பாலு நாடாளுமன்ற குழுத்தலைவராகவும் எம்.பி-யாகவும் இருக்கிறார். ஒருவரிடமே இரு பதவிகள் இருப்பதால். டி.ஆர்.பாலு இருக்கும் இடத்தில் கே.என்.நேரு அமர்த்தப்படலாம் என்ற பேச்சு ஏற்கெனவே அடிபட்டது.

`மா.செ ஆகும் அன்பில் மகேஷ்; முக்கிய பொறுப்பில் கே.என்.நேரு!'- திருச்சிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் ஸ்டாலின்

இந்தநிலையில், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் இன்று வெளியிட்டிருக்கிறார். முரசொலியில் வெளியாகியிருக்கும் அந்த அறிவிப்பில், `தி.மு.க முதன்மைச் செயலாளராகப் பொறுப்பு வகித்துவரும் டி.ஆர்.பாலு, தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருவதால், அவருக்குப் பதிலாக கே.என்.நேரு எம்.எல்.ஏ நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தி.மு.க அறிவிப்பு
தி.மு.க அறிவிப்பு

இதனால், கே.என்.நேரு வகித்துவந்த மாவட்டச் செயலாளர் பதவி அன்பில் மகேஷ்பொய்யாமொழி எம்.எல்.ஏவுக்கு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு