Published:Updated:

காவிரிப் பிரச்னை குறித்து பேரவையில் விவாதிக்க ஜெயலலிதா தயாரா?: கருணாநிதி

Vikatan Correspondent
காவிரிப் பிரச்னை குறித்து பேரவையில் விவாதிக்க ஜெயலலிதா தயாரா?: கருணாநிதி
காவிரிப் பிரச்னை குறித்து பேரவையில் விவாதிக்க ஜெயலலிதா தயாரா?: கருணாநிதி
காவிரிப் பிரச்னை குறித்து பேரவையில் விவாதிக்க ஜெயலலிதா தயாரா?: கருணாநிதி

திருவாரூர்: காவிரிப் பிரச்னை குறித்து பேரவையில் விவாதிக்க ஜெயலலிதா தயாரா? என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.எஸ்.விஜயனை ஆதரித்து திருவாரூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, ''முதல்வர் ஜெயலலிதா எதைக் கற்றாரோ இல்லையோ எதிர்க்கட்சித் தலைவர்களை தாக்கி பேச கற்றுள்ளார் என்பதுடன், என்னைத் தாக்கிப் பேசுவதென்றால் அவருக்கு தனி சுவை. நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. போட்டியிடும் காரணத்தால் அதை தன்னுடைய எதிரியாக கருதி தாம் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்று இந்தியப் பிரதமராகப் போய் அமருவதை தடுக்கிறார்கள் என்று எங்கள் மீது கோபம் கொள்கிறார்.

கருணாநிதி காவிரிப் பிரச்னையில் ஒரு துரும்பைக்கூட அள்ளிப் போடவில்லை என்று ஜெயலலிதா பேசியதை அறிந்து வியந்து போனேன். துரும்பைக் கிள்ளிப்போட்டால் காவிரிப் பிரச்னை தீர்ந்துவிடும் என்று கருதியுள்ளார். சட்டப்படி பெரிய, பெரியத் தூண்களை அள்ளிப் போட்டோம். சட்டத்தின், கர்நாடகத்தின் பிடிகளால் அது இன்றும் நிறைவேறவில்லை.

காவிரிப் பிரச்னை ஒப்பந்தம் பேசப்பட்டு அதற்கு ஒரு வழி காண தமிழக விஞ்ஞானர்கள், அரசியல்வாதிகளெல்லாம் முயற்சி மேற்கொண்டார்கள். அதில் யார் மேல், கீழ் என்று கிடையாது. காவிரிப் பிரச்னை என்பது பொதுவான பிரச்னை. இதில் தீர்க்கப்படுவது தமிழ்நாட்டு மக்களுக்கானது. தீர்வு விரைவில், எளிதாக உச்ச நீதிமன்றத்தின் ஆணையால், மத்திய அரசிடம் போராடி பெற வேண்டுமென்பது தி.மு.க.வின் கொள்கை.

இதை தி.மு.க., அ.தி.மு.க. செய்ய வேண்டுமென்பது பிரச்னை இல்லை. இருவரும் ஒன்றாக இருந்து கூட தீர்க்கலாம். வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும்போது அருகில் இருப்பவர்கள் நீ அணைக்கிறாயா, நான் அணைக்கட்டுமா என்று கேட்பதை தவிர்த்து யாரோ ஒருவர் அணைக்க வேண்டும்.

காவிரி தி.மு.க.வின் கட்சிப் பிரச்னை இல்லை. அது தமிழக மக்களின் பிரச்னையாக கருதுவதால் வெற்றிப் பெறுவது ஜெயலலிதாவா?, கருணாநிதியா? என்பது பொருட்டல்ல. தமிழகத்தில் இருக்கும் எல்லோருக்குமான வெற்றியாக கருதவேண்டும். யார் பெற்றுத்தந்தார்கள் என்பது முக்கியமல்ல என்பதை ஜெயலலிதா எண்ணிப் பார்க்க வேண்டும்.

காவிரிப் பிரச்னையில் எனக்கு பங்கு உண்டு, ஏனெனில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நான், காவிரி தண்ணீரை குடித்தவன். காவிரிப் பிரச்னையில் என்னென்ன தவறுகள் செய்தோம் என்பதை ஜெயலலிதா சுட்டிக்காட்டினால் சட்டமன்றம் நடக்கும்போது நான் வருகிறேன் அல்லது துரைமுருகன் வரட்டும் இரண்டு பேரும் வாதம் செய்ய நேரம் ஒதுக்கலாம்.

அதில் யார் தவறு செய்தார்கள், நியாயத்துக்காக, உரிமைப்பெற முயற்சித்தார்கள் என்று நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளட்டும். அதுவரையில் ஜெயலலிதா காவிரிப் பிரச்னைப் பற்றி பேசாமல் இருந்தால் நாட்டுக்கு, ஏன் காவிரிக்கூட நல்லது.

இலங்கைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்ற துணிவு இருந்ததா என்றும், பயத்தின், தன்னலத்தின் காரணமாக அதை செய்யவில்லையென்று கூறியுள்ளார். 1956ல் அண்ணா உயிருடன் இருக்கும்போது சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கு ழுவில் இலங்கைக்கு ஆதரவாக நிறைவேற்றியத் தீர்மானத்தை முன்மொழிந்தவன் இந்த கருணாநிதி.

இலங்கைக்காக எத்தனைப் போராட்டங்கள் என் தலைமையில் நடந்துள்ளது. மத்திய அரசுக்கு எத்தனைக் கடிதம் எழுதினேன். மனித சங்கிலிப் போராட்டம், சிறைச்சாலைக்குச் சென்றுள்ளேன். ஈழத் தமிழர்களுக்காக சட்டப்பேரவையில் குரல் கொடுக்கவில்லை என்கிறார். கருணாநிதி காலத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா? இல்லையா என்பது கடந்த கால அ.தி.மு.க., கம்யூனிஸ்ட், காங்கிரஸ்கார்களுக்குத் தெரியும்.

பொய் சொல்லி தி.மு.க.வை வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. மக்களிடத்தில் ஈழத்தமிழர்களுக்காக யார் போராடினார்கள் என்ற உண்மையை கேட்போம். ஈழத்தமிழர்களுக்காக ஜெயலலிதா என்ன செய்தார். நான் மூன்று முறை சிறை சென்றுள்ளேன். ஜெயலலிதா ஒரு முறையாவது சிறை சென்றிருப்பாரா.

தமிழ்நாட்டில் அவர் சேர்த்த சொத்துக்காக சிறை செல்வார். ஜெயலலிதாவின் 5 ஆண்டு கால ஆட்சியில் பலகோடி சொத்துசேர்த்துள்ளார். இவர் மற்றவர்களைப்பற்றி பேச தகுதியில்லை" என்று பேசினார்.