Published:Updated:

`துக்டே துக்டே கேங்கை தண்டிக்க தகுந்த நேரம் இது'- டெல்லியில் ஆவேசமான அமித் ஷா! #NowAtVikatan

26.12.2019 - இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

அமித் ஷா
அமித் ஷா
26 Dec 2019 8 PM

ஆவேசமான அமித் ஷா!

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ``குடியுரிமை சட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு தவறான கருத்துக்களை தெரிவித்து டெல்லியில் எதிர்க்கட்சிகள் வன்முறையை தூண்டி வருகின்றன. இதுபோன்ற துக்டே துக்டே கேங்கை (லெட்டர் பேட் குழுக்கள்) தண்டிக்க தகுந்த நேரம் இது.

அவர்களுக்கு உரிய பாடம் கற்பிக்கப்படும். இவர்களுக்கு காங்கிரஸ் தான் வழிகாட்டியாக உள்ளது. சட்டத் திருத்தம் பற்றி நாடாளுமன்றத்திற்குள் விவாதிக்கப்பட்ட போது எதிர்க்கட்சிகள் சரியாகவே பேசவில்லை. ஆனால் நாடாளுமன்றத்துக்கு வெளியே வந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்" என்று ஆவேசமாக பேசினார்.

26 Dec 2019 7 PM

ஸ்டாலின் ட்வீட்!

இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில், தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பில், ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டினாலும், காவல்துறை தீவிர கவனம் செலுத்த வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

26 Dec 2019 12 PM

பேரணியில் கலந்துகொண்டது 5,000 பேரா... 8,000 பேரா..?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த்துக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ``கடந்த 23-ம் தேதி குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சென்னையில் பேரணி நடத்தியது. அதில் கலந்துகொண்ட 8,000 பேர் மீது தமிழ்நாடு அரசு வழக்கு பதிவுசெய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், அமைச்சர்கள் சிலர் போராட்டத்தில் 5,000 பேர் மட்டுமே கலந்துகொண்டதாக கூறினர். அப்படியானால் எது உண்மை?

ஸ்டாலின்
ஸ்டாலின்

லட்சக்கணக்கானோர் பேரணியில் கலந்துகொண்டதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன. மத்திய, மாநில உளவுத் துறையினர் அரசுக்கு கொடுக்கும் அறிக்கையில் எதிர்க்கட்சிகள் நடத்தும் பேரணி என்றால் எண்ணிக்கையை குறைவாகச் சொல்வதும், ஆளுங்கட்சி நடத்தும் பேரணி என்றால் எண்ணிக்கையை அதிகமாக சொல்வதும் வழக்கமானதாகிவிட்டது” என்றார்.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், ``தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் சென்னையில் நடைபெற்ற பேரணியில் 5,000 முதல் 8,000 பேர் தான் கலந்துகொண்டனர். முன்னதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் 50,000 பேருக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறியதால், 15,000 காவலர்களை பாதுகாப்புக்கு அனுப்பியிருந்தோம். காவல்துறையின் மனித சக்தி இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்” என விமர்சித்தார்.

26 Dec 2019 11 AM

சூரிய கிரகணம் குறித்து பிரதமர் மோடி!

இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. குறிப்பாக, தென் மாநிலங்களில் தெளிவாகத் தெரிந்தது. இதை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.

பிரதமர் மோடியும் சூரிய கிரகணத்தைப் பார்க்க ஆவலுடன் சூரிய கண்ணாடியுடன் தயாராக இருந்தார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ``பல இந்தியர்களைப் போலவே, நானும் சூரிய கிரகணத்தைப் பார்க்க ஆர்வமாக இருந்தேன். துரதிர்ஷ்டவசமாக, மேகங்கள் மறைத்து நின்றதால் என்னால் சூரியனைப் பார்க்க முடியவில்லை. ஆனால், கோழிக்கோடு மற்றும் பிற பகுதிகளில் எடுக்கப்பட்ட கிரகணத்தின் காட்சிகளைப் பார்த்தேன். இதுதொடர்பாக, வல்லுநர்களிடம் பேசி என்னுடைய அறிவையும் வளர்த்துக்கொண்டேன்” என்று புகைப்படங்களுடன் பதிவிட்டிருக்கிறார்.

26 Dec 2019 10 AM

15வது ஆண்டு சுனாமி நினைவு தினம்!

இன்று 15வது ஆண்டு சுனாமி தினம் அனுசரிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மீனவர்கள் மெழுகுவத்தி ஏந்தியும் கடலில் மலர் தூவியும் பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

26 Dec 2019 9 AM

தமிழகத்தில் தென்பட்டது! 

தமிழகத்தில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரிய ஆரம்பித்துள்ளது. ஊட்டியில் முதலில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தென்பட்டது. இது 3 நிமிடங்கள் வரை நீடித்தது. தற்போது தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் இந்த அரிய நிகழ்வு தெரியத் தொடங்கியுள்ளது!

26 Dec 2019 9 AM

தமிழகத்தில் முதலில் எங்கு தெரியும்?

தமிழகத்தில் தற்போது சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியுள்ளது. சவுதி மற்றும் துபாய் பகுதிகளில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தென்படத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் முதலில் ஊட்டியில்தான் தெரியும். 9.26 முதல் 9.29 வரை தெரியும். அதன் பின்னர் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் தெரியும்!

26 Dec 2019 9 AM

தமிழகம் முழுவதும் சூரிய கிரகணம்!

தமிழகம் முழுவதும் தற்போது சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த அரிய நிகழ்வைக் கண்டு ரசித்து வருகிறார்கள். வெறும் கண்ணால் கிரகணத்தைப் பார்க்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

26 Dec 2019 8 AM

சூரிய கிரகணத்தை ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் சோலார் கண்ணாடி மூலம் சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர் வீடியோ.உ.பாண்டி

Posted by Vikatan EMagazine on Wednesday, December 25, 2019
26 Dec 2019 8 AM

சூரிய கிரகணத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் சூரியக் கண்ணாடி (solar filter) உதவியுடன் சூரிய கிரகணத்தைப் பார்த்து ரசித்தனர்.

26 Dec 2019 8 AM

நெருப்பு வளைய சூரிய கிரகணம்!

பூமி சூரியனை நீள் வட்டப் பாதையில்தான் சுற்றி வருகிறது. சந்திரனும் பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில்தான் சுற்றி வருகிறது. பூமி, சூரியனிடமிருந்து தொலைவில் இருக்கும்போது அது பார்ப்பதற்குச் சின்னதாக இருக்கும். அந்த நேரத்தில் சூரிய கிரகணம் நிகழ்ந்தால் சந்திரனால் சூரியனை முழுமையாக மறைக்க முடியும். அதுதான் முழு சூரிய கிரகணம். இன்றைய சூரிய கிரகணத்தின்போது பூமி சூரியனுக்கு அருகில் வரும். எனவே, சந்திரனால் சூரியனை முழுமையாக மறைக்க முடியாது. அதனால்தான் இன்றைய சூரிய கிரகணம் பார்ப்பதற்கு நெருப்பு வளையத்தைப் போலிருக்கும். இதை நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்கிறோம்.

தமிழகம் உள்ளிட்ட சில பகுதிகளில் சூரிய கிரகணம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஊட்டி மற்றும் சவுதியில் இந்தக் கிரகணம் தற்போது தொடங்கியுள்ளது. இன்னும் சில நிமிடங்களில் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் இந்த சூரிய கிரகணம் தொடங்கிவிடும். 30 ஆண்டுகளுக்குப் பின்னர் நெருப்பு சூரிய கிரகணம் தற்போது தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

`சூரியக் கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாமா?' - அறிவியலாளர் விளக்கம்!
26 Dec 2019 7 AM

இட்ஸ் `பாக்ஸிங் டே!’

மெல்போர்ன் மைதானம்
மெல்போர்ன் மைதானம்

உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் நாளின் அடுத்த நாள் `பாக்ஸிங் டே’ என்று அழைக்கப்படும். பல நாடுகளில் பாக்ஸிங் டே நாளும் விடுமுறை நாள் என்பதால் பல்வேறு நிகழ்ச்சிகள் களைகட்டும். பிரட்டனில் தொடங்கிய இந்த `பாக்ஸிங் டே’ தற்போது உலகின் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இதில் மகிழ்ச்சியான விஷயம் இருக்கிறது. ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த நாள் தொடங்கும் டெஸ்ட் போட்டி `பாக்ஸிங் டே டெஸ்ட்’ என்று அழைக்கப்படும். மிகவும் பிரபலமான `பாக்ஸிங் டே’ நாளில் இன்று இரு டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இன்று காலை ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகள் மோதும் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதே போன்று செஞ்சூரியனிலும் இன்று இந்திய நேரப்படி மதியம் தொடங்கும் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. விடுமுறை தினத்தில் வரும் கிரிக்கெட் போட்டி என்றாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகம்தான். `பாக்ஸிங் டே’ என்றால் சொல்லவா வேண்டும்? கொண்டாட்டம்தான்!