Published:Updated:

ஓபிசி இடஒதுக்கீடு: `வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்கிறேன்!’ - முதல்வர் பழனிசாமி #NowAtVikatan

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

27.7.2020 |இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

27 Jul 2020 8 PM

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்கிறேன்!

ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில், ``அரசு எடுத்த சட்ட ரீதியான நடவடிக்கையால், மருத்துவ படிப்பில் OBC மாணவர்களின் சேர்க்கைக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வரவேற்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ``மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அறிந்து வரவேற்று மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

27 Jul 2020 4 PM

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படத் தடையில்லை!

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இதில், தமிழகத்தில் மதுக் கடைகளை மூட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்தநிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் செயல்படத் தடையில்லை என்று கூறிய நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான இடைக்காலத் தடை தொடரும் என்று உத்தரவிட்டது.

சென்னையில் கண்துடைப்பு டாஸ்மாக் மூடலும், கள்ள விற்பனையும்! - ஜூ.வி. ஆக்‌ஷன்
27 Jul 2020 11 AM

ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம்:

தமிழகத்தில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவிகித இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவிகித இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. இப்படி மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனத் தமிழக அரசு, தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, ம.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வாசிக்கப்பட்டு வருகிறது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவது பற்றி உச்ச நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் வாதத்தை ஏற்க முடியாது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்றும் மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவுக்கு 50% இடஒதுக்கீடு வழங்குது பற்றி 3 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு