Published:Updated:

Corona Live Updates: சென்னையில் 50 ஆயிரத்தை கடந்த பாதிப்பு... தமிழகத்தில் 1,000 -ஐ கடந்த பலி எண்ணிக்கை

கொரோனா | Covid-19
கொரோனா | Covid-19

27.6.2020 | கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

27 Jun 2020 6 PM

தமிழகத்தில் கொரோனா நிலவரம்!

தமிழகத்தில், இதுவரை இல்லாத அளவாக இன்று மட்டும் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,335-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1,939 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,699-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனா
கொரோனா

தமிழகத்தில், கொரோனா நோய்த் தொற்றால் ஒரே நாளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 1025 -ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,737 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 44,094.

27 Jun 2020 12 PM

அச்சம் வேண்டாம்!

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ``கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைக் கண்டு அஞ்ச வேண்டாம். இதுவரை 56% பேர் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால்தான் கொரோனா வேகமாகப் பரவுகிறது. கொரோனாவைத் தடுக்க, நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான உணவுகளைச் சாப்பிடுவது அவசியம்” என்றார்.

27 Jun 2020 12 PM

தி.மு.க எம்.எல்.ஏவுக்குக் கொரோனா!

இந்தியாவிலும் தமிழகத்திலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தி.மு.க எம்.எல்.ஏ ஆர்.டி.அரசுக்குக் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. முன்னதாக தி.மு.கவின் ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

27 Jun 2020 11 AM

நீலகிரி நிலவரம்!

வைரஸ் பரவல் கட்டுக்குள் இருந்த நீலகிரி மாவட்டத்தில், தற்போது தொற்று வேகமாகப் பரவிவருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு 14ஆக இருந்த தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை, நேற்று முன்தினம் 49ஆக உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். பொதுமுடக்கத் தளர்வும், அதனைப் பயன்படுத்தி தேவையற்ற பயணங்களை மக்கள் மேற்கொண்டதுமே பரவல் வேகத்திற்குக் காரணம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், நேற்று மேலும் 7 பேருக்குப் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நீலகிரியில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 56 -ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.

- சதீஷ்

27 Jun 2020 9 AM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,90,401 லிருந்து 5,08,953 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 18,552 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் முதல் ஒரு லட்சம் பாதிப்பு ஏற்பட 139 நாள்கள் எடுத்துக்கொண்ட நிலையில், ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் பாதிப்பு 16 நாள்களில் ஏற்பட்டது. பின்னர் 2 லட்சம் டு 3 லட்சம் 11 நாள்களிலும், 3 லட்சம் டு 4 லட்சம் 9 நாள்களிலும் ஏற்பட்டன. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 லட்சம் முதல் 5 லட்சம் பாதிப்பு வெறும் ஆறே நாள்களில் ஏற்பட்டுள்ளது.

கொரோனா
கொரோனா

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 384 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,301 லிருந்து 15,685 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,95,881 ஆகவும் உயர்ந்துள்ளது.

உலகளவில் கொரோனா!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 99,04,963 ஆக உயர்ந்திருக்கிறது. தொற்று பாதிப்பிலிருந்து 53,57,840பேர் குணமடைந்திருக்கிறார்கள். உலக அளவில் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,96,866ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு