Published:Updated:

முதற்கட்ட வாக்குப் பதிவு நிறைவு! - வாக்குப் பெட்டிகளுக்கு சீல் #TNLocalBodyElection2019 #NowAtVikatan

வாக்குப் பதிவு
வாக்குப் பதிவு

27.12.2019 - இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

27 Dec 2019 5 PM

வாக்குப் பெட்டிகளுக்கு சீல்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 9 மணிக்குத் தொடங்கி 5 மணிக்கு முடிவடைந்தது. இதையடுத்து வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைக்கும் பணி நடந்துவருகிறது.

27 Dec 2019 3 PM

கொதித்த கனிமொழி எம்.பி.

கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு மரண தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள கனிமொழி எம்.பி, ``கோவை அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்தோஷ் என்பவர் குற்றவாளி என உறுதியாகியுள்ளது. ஆனால் பிரேத பரிசோதனையில் மேலும் ஒரு நபரின் டி.என்.ஏ இருப்பது தெரியவந்துள்ள நிலையில், அந்நபரையும் கைது செய்யவேண்டும் என்று சிறுமியின் தாய் மனு அளித்துள்ளார். மற்றொரு குற்றவாளியின் மீது, காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது. பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டியதுபோல் அல்லாமல், இதில் உடனே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

27 Dec 2019 3 PM

குற்றவாளிக்கு மரண தண்டனை!

கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு மரண தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை பன்னிமடையில் கடந்த மார்ச் மாதத்தில் 7 வயதுச் சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தோஷ் குமாரைக் குற்றவாளி என போக்சோ நீதிமன்றம் அறிவித்திருந்தது. போக்சோ சட்டத்தின் கீழ் அவருக்கு ஆயுள் தண்டனையும், பிரிவு 302-ன் கீழ் தூக்கு தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

27 Dec 2019 2 PM

முடிவுகளை அறிவிக்கக்கூடாது!

நகர்ப்புறங்களுக்குத் தேர்தல் நடத்தும் வரை ஊரக உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமன்றம், நாடாளுமன்றத்துக்குப் பல கட்டமாகத் தேர்தல் நடந்தாலும் ஒரே நாளில் தான் முடிவு அறிவிக்கப்படுகிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி இந்த மனுவை விசாரிக்கிறது உயர் நீதிமன்றம்.

27 Dec 2019 1 PM

வாக்களித்த முதல்வர்!

முதற்கட்ட வாக்குப் பதிவு நிறைவு! - வாக்குப் பெட்டிகளுக்கு சீல் #TNLocalBodyElection2019
#NowAtVikatan

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்து உட்பட்ட சிலுவம்பாளையம் கிராமத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். அவருடன் அவரது குடும்பத்தாரும் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

27 Dec 2019 11 AM

கோவை வழக்கு - சந்தோஷ் குமார் குற்றவாளி!

கோவை பன்னிமடையில் 7 வயதுச் சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ் குமார் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது கோவை போக்ஸோ நீதிமன்றம். குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சந்தோஷ் குமாருக்கு இன்று மதியம் 3 மணிக்கு தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும்!

27 Dec 2019 10 AM

அதிரவைத்த மதுரை சுயேச்சை வேட்பாளர்!

மதுரை மாவட்டம், ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தை சுயேச்சை வேட்பாளர் அதிரடியாகப் பூட்டியதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. தி.மு.க, அ.தி.மு.க வேட்பாளர்கள் வாக்குச்சாவடி மையத்தில் நின்று வாக்கு கேட்டதால் ஆவேசமடைந்த சுயேச்சை வேட்பாளர் முத்துகிருஷ்ணன் மையத்தைப் பூட்டினார். இவர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.

27 Dec 2019 10 AM

சிறப்பு வகுப்புகள்?

முதற்கட்ட வாக்குப் பதிவு நிறைவு! - வாக்குப் பெட்டிகளுக்கு சீல் #TNLocalBodyElection2019
#NowAtVikatan
ம.அரவிந்த்

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட வாக்கு இன்று பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக அரசு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் உள்ளிட்ட ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு வாக்கு பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் இன்றும் தஞ்சாவூர் கீழ வீதியில் உள்ள மகளிர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு வகுப்புக்கு மாணவிகள் வரவழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், ஆசிரியர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் வகுப்புகள் உள்ளதா எனத் தெரியாமல் மாணவிகள் குழப்பத்தில் தவித்தனர்.

27 Dec 2019 9 AM

விமான நிலைய கட்டடத்தில் மோதிய விமானம்!

கஜகஸ்தான் நாட்டில் உள்ள அல்மேட்டி விமான நிலையத்தில் 5 ஊழியர்கள் உட்பட 100 பேருடன் புறப்படத் தயாரான விமானம், கட்டுப்பாடை இழந்து விமான நிலையத்தில் உள்ள இரண்டு மாடி கட்டடத்தில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் கட்டடத்தில் இருந்தவர்களும் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

27 Dec 2019 7 AM

தொடங்கியது வாக்குப்பதிவு!

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவ மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்கின்றனர். வீடியோ.உ.பாண்டி

Posted by Vikatan EMagazine on Thursday, December 26, 2019

தமிழகத்தில் புதியதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 27 மாவட்டங்களில் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 91,975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில் 2,31,890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 27 மாவட்டங்களிலும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு