Published:Updated:

தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு! #NowAtVikatan

ஊரடங்கு
ஊரடங்கு

28-05-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

28 May 2021 6 PM

தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு!

பொது மக்கள் நலன் கருதி, 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையில் 'மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு 7-6-2021 காலை 6-00 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன்.

பொதுமக்கள் அத்தியாவசிய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில், அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி / பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும். மேலும், மளிகைப் பொருட்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்யவும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7-00 மணி முதல் மாலை 6-00 மணிவரை அனுமதிக்கப்படுகிறது.

இது தவிர, பொது மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம், வரும் ஜூன் மாதம் முதல் வழங்கிட, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் அறிவித்துள்ளார்

28 May 2021 1 PM

பத்திரிகையாளர் இரா.ஜவஹர்   காலமானார்

மூத்த பத்திரிகையாளர் இரா.ஜவஹர் கொரோனா தொற்றால் காலமானார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கம்யூனிஸம் இன்று-நேற்று-நாளை என்ற புத்தகத்தை படைத்திருக்கிறார். இடதுசாரி சிந்தையாளரான அவரது பேனா ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும், சுரண்டப்பட்டவர்களுக்காகவும் இயங்கியது. அதிகாரத்துக்கு எதிராக இறுதி வரை உரக்கப் பேசியது.

இரா.ஜவஹர்
இரா.ஜவஹர்
28 May 2021 12 PM

ஒரு மாதகால பரோலில் பேரறிவாளன்!

பேரறிவாளன்
பேரறிவாளன்

சிறைகளில் பரவும் கொரோனா பெருந்தொற்று காரணமாக ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார் அவரின் தாயார் அற்புதம் அம்மாள். அதனைத்தொடர்ந்து பேரறிவாளனுக்கு ஒரு மாதகாலம் பரோல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று அவர் பரோலில் வெளிவந்துள்ளார்.

28 May 2021 10 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 1,86,364 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. 2 நாள்களுக்கு பிறகு இந்தியாவில் ஒரு நாள் பாதிப்பு மீண்டும் 2 லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களில் இல்லத அளவுக்கு தினசரி பாதிப்பு இன்று குறைந்திருக்குறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,75,55,457 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,660. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,18,895 -ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,48,93,410-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 23,43,152 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 2,59,459 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 20,57,20,660 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

28 May 2021 9 AM

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்!

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கிறது. வழக்கமாக 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய இந்த கூட்டம், கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக நடைபெறவில்லை. இந்நிலையில் 8 மாதங்களுக்கு பின்னர் இன்று காலை 11 மணிக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடக்கிறது. இது ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 43-வது கூட்டம் ஆகும்.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொளி காட்சி மூலம் நடத்தும் இந்த கூட்டத்தில், நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர், மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். தமிழகத்தின் சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதல்முறையாக இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார். கொரோனா தடுப்பு மருந்துகள், தடுப்பூசி, மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றின் மீது விரிவிலக்கு வழங்குவது தொடர்பான கோரிக்கைகள் இன்று வைக்கப்படும் எனத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு