Published:Updated:

13 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை! #NowAtVikatan

28.12.2019 - இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

தமிழக மீனவர்கள்
தமிழக மீனவர்கள் ( file photo )
28 Dec 2019 8 PM

மீனவர்கள் கைது!

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி இவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 13 மீனவர்களும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். தற்போது இவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

28 Dec 2019 1 PM

சென்னையில் பேரணி!

நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்து அதனை நிறைவேற்றி, குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமாக்கியது. அன்று முதலே இந்த சட்ட திருத்ததுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இன்று சென்னை ஆலந்தூரில் இஸ்லாமியர்கள் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தினர்.

28 Dec 2019 12 PM

ஒலிம்பிக் போட்டிக்கு மேரி கோம் தகுதி!

2020 ஒலிம்பிக் போட்டிக்கான குத்துச்சண்டை தகுதிச் சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் 51 கிலோ எடைப் பிரிவில் 36 வயதான மோரி கோம், 23 வயதான நிஹாத் ஸ்ரின் மோதினர். இந்த ஆட்டத்தில் மேரி கோம் தனது அனுபவத்தால் வென்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்றார். இந்தப் போட்டிய மேரி கோம் 9-1 என்றக் கணக்கில் வென்றார். முன்னதாக மேரி கோம் -ஐ ஒலிம்பிக் தொடருக்கு நேரடியாக அனுப்ப நிஹாத் ஸ்ரின் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

28 Dec 2019 11 AM

கட்டாயம் கிடையாது! - முதல்வர் விளக்கம்

தமிழகத்தில் பொங்கல் தினம் ஜனவரி மாதம் 15 தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த நாளான மாட்டு பொங்கல் தினமும் அரசு விடுமுறை தினம் தான். ஆனால் அன்றைய தினம் பிரதமர் மோடியின் உரையை கேட்க 9-ம் வகுப்பு முதல் 12 - வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும், மாணவர்களின் வருகையை மாவட்ட நிர்வாகம் உறுதிபடுத்த வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கை அனுப்பியதாக செய்திகள் வெளியானது. `விடுமுறை தினத்தில் மாணவர்களை பள்ளிக்கு வர சொல்வதா?’ என இது சர்ச்சை ஆனது. இந்நிலையில் சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என சொல்லவில்லை. வீட்டில் டி.வி இல்லாத மாணவர்கள் பள்ளியில் வந்து பிரதமரின் உரையை கேட்கலாம் என்று தான் சொல்லப்பட்டது. மற்றபடி பள்ளிக்கு அன்றைய தினம் வருவது கட்டாயம் கிடையாது” என்றார்.

28 Dec 2019 9 AM

குளிரில் தவிக்கும் வடமாநிலங்கள்!

வடமாநிலங்களில் வாட்டிவதைக்கும் குளிரால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். டெல்லியில் இன்று காலை 6.10 மணியளவில் குறைந்தபட்சமாக 2.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

அதேபோல், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, வடக்கு ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.

28 Dec 2019 7 AM

76.1 சதவிகித வாக்குகள் பதிவு!

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 என இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக 45,336 ஊரக உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வன்முறைகள் ஏதுமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடந்து முடிந்தது.

வாக்குப் பதிவு
வாக்குப் பதிவு

இந்தத் தேர்தலில் பரிசோதனை முயற்சியாக கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஒன்றியத்தில் மட்டும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்தநிலையில், அதில் 76.1 சதவிகித வாக்குகள் பதிவானதாக மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் திங்கள்கிழமை (டிசம்பர் 30) நடைபெறுகிறது. அந்தப் பகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜனவரி 2ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.