Published:Updated:

`முற்றிலும் நிர்வாக ரீதியிலான நடவடிக்கையே..!' - காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் பொதுப்பணித்துறை விளக்கம் #NowAtVikatan

காவிரி
காவிரி

29.4.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

29 Apr 2020 10 PM

வெளிமாநிலத் தொழிலாளர்களை அனுப்ப ஏற்பாடு!

வெளிமாநிலத் தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ``உரிய கட்டுப்பாடுகளை பின்பற்றி வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை அழைத்துக் கொள்ளலாம். இருமாநிலங்களுக்கும் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டும் திரும்ப அழைத்துக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். வெளிமாநிலத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள், மாணவர்களை அழைத்துக் கொள்ளலாம். இதற்காக மாநில அரசுகள் சிறப்பு அதிகாரிகளை நியமித்து நடவடிக்கை எடுக்கலாம். அழைத்துச் செல்ல பயன்படுத்தப்படும் பேருந்துகளில் கிருமிநாசினி தெளிப்பு, தனிநபர் இடைவெளி அவசியம்" எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ஊரடங்கால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.

29 Apr 2020 8 PM

நிர்வாக ரீதியிலான நடவடிக்கையே..!

காவிரி மேலாண்மை ஆணையம் ஜல்சக்தி துறையின் கீழ் கொண்டுவரப்பட்ட விவகாரத்தில் தமிழக பொதுப்பணித்துறை சார்பில் விளக்கம் வெளியாகியுள்ளது. அதில், ``காவிரி மேலாண்மை ஆணையம் ஜல்சக்தி துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது முற்றிலும் நிர்வாக ரீதியிலான நடவடிக்கையே. இதனால் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் நடவடிக்கைகள் மற்றும் அதிகாரங்களில் எந்த மாற்றமும் இல்லை. காவிரி நதிநீரை நம்பியிருக்கும் விவசாயிகளின் நலன்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படாது" என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

29 Apr 2020 7 PM

மேலும் 104 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2162 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 767 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1210 ஆக உள்ளது.

29 Apr 2020 4 PM

தமிழகத்தில் மே 2-ம் தேதி அமைச்சரவைக் கூட்டம்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் மே 2-ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. மே 3-ம் தேதி முடிவடையும் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பான விவாதங்கள் நடைபெறும் என கூறப்படுகிறது.

29 Apr 2020 11 AM

சென்னை, கோவை, மதுரை மாநகர மக்களுக்கு...!

`முற்றிலும் நிர்வாக ரீதியிலான நடவடிக்கையே..!' - காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் பொதுப்பணித்துறை விளக்கம் #NowAtVikatan

சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதியில் இன்று இரவு வரை அமலில் இருக்கும் முழு ஊரடங்கு முடிவடையும் நிலையில் நாளை முதல் முன்பு இருந்த ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டிருகிறது.

நாளை மட்டும் மக்கள் அத்தியாவசியப் பொருள்களான காய்கறிகள், மளிகைப் பொருள்கள் வாங்க ஏதுவாக கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து இருக்கும் எனவும் வெள்ளிக்கிழமை முதல் அத்தியாவசியப் பொருள்கள் விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அவசரம் காட்டாமல் பொறுமையாக சமூச விலகலைக் கடைப்பிடித்து பொருள்களை வாங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. .

29 Apr 2020 10 AM

நீட்டிக்கப்படுமா ஊரடங்கு?

இந்தியாவில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வரும் மே 3-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் கடந்த திங்கள்கிழமை அன்று மோடி ஆலோசனை மேற்கொண்டார். இதில் பலரும் சில தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவை பிரதமரிடம் கோரிக்கையாக முன்வைத்தனர். இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார். தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது தொடர்பாக இதில் ஆலோசிக்கப்பட உள்ளது. கூட்டத்தில் முதல்வர் சென்னையைத்தவிர மாநிலத்தின் மற்ற பகுதிகளில் கொரோனா கட்டுக்குள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

29 Apr 2020 8 AM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,000-த்தைக் கடந்திருக்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,974-லிருந்து 31,332 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனாவால் ஏற்பட்ட பலி எண்ணிக்கையும் ஆயிரத்தைக் கடந்திருக்கிறது. இதுவரை 1,007 பேர் பலியாகியுள்ளனர். நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 9,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவிலிருந்து 7,696 பேர் மீண்டு வந்திருக்கிறார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு