Published:Updated:

மீண்டும் 6 ஆயிரத்தைக் கடந்த `ஒருநாள்’ பாதிப்பு எண்ணிக்கை! - தமிழகத்தில் கொரோனா நிலவரம் #NowAtVikatan

கொரோனா
கொரோனா

29-08-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

29 Aug 2020 6 PM

தமிழகத்தில் புதிதாக 6,352 பேருக்குத் தொற்று!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,15,590-ஆக உயர்ந்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட்டிருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 87 -ஆக அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 7,137 ஆக அதிகரித்துள்ளது.

கோவிட்-19
கோவிட்-19

சென்னையில் மேலும் 1,285 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 1,285 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 5,067 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது.

29 Aug 2020 5 PM

`அரசின் ஆலோசனைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்!’ - பழனிசாமி

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இரண்டு ஆலோசனைகளும் நிறைவடைந்த நிலையில், பேசிய முதல்வர் பழனிசாமி, ``கொரோனா தொடர்பான அரசின் ஆலோசனைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். அரசின் அறிவுரைகளை பின்பற்றினால் தான் நோய் பரவலை குறைக்க முடியும்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா காலத்திலும் அரசு அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளது. திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டுவருகின்றன. தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைந்துள்ளது” என்றார்.

29 Aug 2020 5 PM

அண்ணாமலைக்கு துணைத் தலைவர் பதவி! 

பா.ஜ.க அண்ணாமலை
பா.ஜ.க அண்ணாமலை

டெல்லியில் கடந்த 4 நாள்களுக்கு முன்னர்(ஆகஸ்ட் 25) பா.ஜ.க வில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலைக்கு தற்போது தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன் வெளியிட்டுள்ளார்.

29 Aug 2020 5 PM

செப்டம்பர் 7-ம் தேதி முதல் நேரடி விசாரணை!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, பல்வேறு பணிகள் காணொளி காட்சிகள் மூலம் நடைபெற்று வந்தது. நீதிமன்றமும் வழக்குகளை காணொளி காட்சி மூலம் விசாரித்து வந்தது. இந்த சூழலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் நேரடி விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இரு நீதிபதிகள் அடங்கிய ஆறு அமர்வு மட்டும் நேரடி விசாரணை செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

29 Aug 2020 5 PM

முழுமையாக குணமடைந்தார் அமித்ஷா!

அமித்ஷா
அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முழுமையாக குணமடைந்தார் என்றும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கொரோனா குணமான நிலையிலும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக அமித்ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

29 Aug 2020 4 PM

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராக உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

`தங்களின் கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை பழிவாங்க கூடாது' என்ற நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பான விசாரணையில், இடமாற்றம் செய்தவர்களை மீண்டும் ஏற்கனவே பணியாற்றிய இடத்திற்கு மாற்றாததால், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருடன், மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபுவும் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

29 Aug 2020 3 PM

மருத்துவ குழுவினருடன் ஆலோசனை!

முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி

இன்று காலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு தளர்வு குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

`இது இறைவன் கட்டளை..!’ - பழக்கடைக்காரர் வீசிய பேப்பர்... நெகிழ்ந்த முதல்வர்
29 Aug 2020 1 PM

நீட், ஜே.இ.இ. தேர்வு - சீராய்வு மனு!

நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி புதுச்சேரி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு தரப்பில், கொறடா ஆனந்தராமன் தாக்கல் செய்த சீராய்வு மனு அடுத்தவாரம் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடதக்கது.

29 Aug 2020 1 PM

முதல்வர் ஆலோசனை!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, ``முதியோர், இணைநோய் உள்ளோர்களின் மாதிரிக்கு முன்னுரிமை தந்து கொரோனா முடிவுகளை விரைந்து அறிவிக்க வேண்டும்’ எனக் கேட்டு கொண்டார்.

29 Aug 2020 10 AM

ஹெச். வசந்தகுமார் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி!

சென்னை தி.நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஹெச். வசந்தகுமார் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

29 Aug 2020 10 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 34,63,973 -ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 76,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா
கொரோனா

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 1,021 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62,550 -ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,48,999 -ஆக உயர்ந்துள்ளது

29 Aug 2020 8 AM

ஊரடங்கு.... முதல்வர் இன்று ஆலோசனை!

மாவட்டங்களுக்கிடையே மற்றும் மாநிலங்களுக்கிடையே சென்றுவர கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை தளர்த்தப்படுமா என்பது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இதனிடையே , வரும் 31 ஆம் தேதியுடன் அமலில் இருக்கும் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். கூட்டத்துக்குப் பிறகு, ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்பது பற்றிய முக்கிய முடிவுகள் வெளியாகவுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு