Published:Updated:

தனிமையின் நான்காண்டுகள்!

மொஹம்மது அயிஷா
பிரீமியம் ஸ்டோரி
மொஹம்மது அயிஷா

ஒவ்வொரு நாளும் கப்பலில் இருக்கும் ஊழியர்களுக்கு உணவு, கப்பலுக்கான எரிபொருள் வழங்கப்படுகிறது. கப்பலின் கடனும் ஏறிக்கொண்டே செல்கிறது

தனிமையின் நான்காண்டுகள்!

ஒவ்வொரு நாளும் கப்பலில் இருக்கும் ஊழியர்களுக்கு உணவு, கப்பலுக்கான எரிபொருள் வழங்கப்படுகிறது. கப்பலின் கடனும் ஏறிக்கொண்டே செல்கிறது

Published:Updated:
மொஹம்மது அயிஷா
பிரீமியம் ஸ்டோரி
மொஹம்மது அயிஷா

29 வயதான மொஹம்மது அயிஷா, அவரது தேசத்துக்குச் செல்ல 643 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். அவர் தங்கியிருக்கும் கப்பலிலிருந்து கரைக்கு வர 8 கி.மீ பயணிக்க வேண்டும். ஆனால், இரண்டும் மறுக்கப்பட்டு நான்காண்டுகள் கப்பலில் முடங்கிக்கிடந்தார். உலகமே கொரோனாப் பெருந்தொற்றால் தனிமைப் படுத்திக் கொண்டிருக்க, நான்காண்டுகள் ஒரு மனிதரைத் தனிமையில் கைவிட்டிருக்கிறது உலகம்.

மனிதன் உருவாக்கிய ஆகப்பெரும் பிரமாண்டங்களில் ஒன்று கப்பல். மனிதர்களின் போக்குவரத்து கால மாற்றத்தில் பல்வேறு பரிணாமங்களைப் பெற்றுவிட்டது. ஆனால், இன்றளவிலும் சரக்குப் போக்குவரத்து என்பது கப்பலில்தான். இப்படியானதொரு 4,000 டன் கப்பலில் 2017-ம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்தார், சிரியா நாட்டின் அயிஷா. இரண்டு மாதங்கள் எல்லாம் சரியாகவே போனது. திடீரென ஒருநாள் எகிப்தின் அடபியா துறைமுகத்தில் நிறுத்தப்படுகிறது கப்பல். ‘3 டன் எடையிலான நங்கூரம் வாங்கியதற்கு 21,500 அமெரிக்க டாலர் கட்ட வேண்டும், அதுவரையில் கப்பல் நகர அனுமதிக்கப்படாது’ என்கிறது ஒரு கடிதம். கப்பல் கேப்டன் சொன்னதால் அந்தக் கடிதத்தில் கையெழுத்திடுகிறார் அயிஷா. ‘‘என் வாழ்நாளின் மிகப்பெரிய தவறு அதுதான் என அப்போது எனக்குத் தெரியாது’’ என்கிறார் அயிஷா. ஆம், கையெழுத்து போட்டதால், கப்பலின் சட்டபூர்வ பாதுகாவலர் ஆகிவிட்டார். இழப்பீட்டுத் தொகையைக் கப்பலின் உரிமையாளர் தரும்வரையில் அயிஷா கப்பலை விட்டு வெளியேற முடியாது.

தனிமையின் நான்காண்டுகள்!

ஒவ்வொரு நாளும் கப்பலில் இருக்கும் ஊழியர்களுக்கு உணவு, கப்பலுக்கான எரிபொருள் வழங்கப்படுகிறது. கப்பலின் கடனும் ஏறிக்கொண்டே செல்கிறது. சில மாதங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறையத் தொடங்கியது. யாருக்கும் சம்பளம் இல்லை. இங்கிருந்து தப்பிக்கலாம் என்றால், வெறும் கையுடன் வீடு திரும்ப வேண்டும். அதையும் சகித்துக்கொண்டு பலர் வெளியேறுகிறார்கள். கடைசியாக மிச்சமிருந்த நான்கு பேருக்கு சமைக்கும் பொறுப்பையும் அயிஷா ஏற்றுக்கொள்கிறார். எகிப்திலிருக்கும் சிரியா நாட்டுத் தூதரகத்தை நம்பியும் பயனில்லை. உள்நாட்டுப் போரில் பற்றி எரியும் தேசத்திலிருந்து உயிருக்கு பயந்து வெளியேறி, கப்பலில் சிக்கிக்கொண்டிருக்கிறார் அயிஷா.

தனித்துவிடப்படும் மனிதர்களுக்கு உயிர் வாழும் ஆசையைக் கொடுப்பதே நம்பிக்கை தரும் குரல்தான். அது அயிஷாவுக்கு சிரியாவிலிருந்து வந்தது. சிரியா போர்ச் சூழல்களை தினமும் விவரித்துவந்தார் அயிஷாவின் அம்மா. ஆசிரியையான அவர் தான் அயிஷாவுக்கு நம்பிக்கை குறையாமல் பார்த்துக்கொண்டார். அயிஷாவின் சகோதரருக்கும் அவரைப் போன்றே கப்பல் வேலைதான். இந்த நான்காண்டு தனிமை வாழ்வில் இருமுறை சகோதரர் பயணிக்கும் கப்பலைக் கண்டிருக்கிறார் அயிஷா. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அயிஷாவின் அம்மாவும் 2018 செப்டம்பரில் இறந்துபோக, மீண்டும் சூன்யத்துக்குள் தள்ளப்படுகிறார் அயிஷா. 2019-ம் ஆண்டும் அயிஷாவுக்குக் கப்பலில்தான் தொடங்கியது. கப்பலில் மிச்சமிருந்த நால்வரிலும் இருவர் கிளம்பிச் செல்கிறார்கள். மிச்சமிருந்த ஒருவரும் தப்பித்துவிடுகிறார். பார்த்த முகங்களையே திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டிருந்த அயிஷாவுக்கு அதுவும் பறிபோனது. ஆகஸ்ட் 2019-ல் அந்தப் பெரிய கப்பலில் ஒற்றை மனிதராகத் தனிமைப்படுத்தப்பட்டார் அயிஷா. மாதங்கள் செல்லச் செல்ல கன்னங்கள் வீங்கி, பற்களை இழந்து ஒரு மாறுபட்ட அயிஷாவாக ஆகிவிடுகிறார் அவர்.

தனிமையின் நான்காண்டுகள்!
தனிமையின் நான்காண்டுகள்!

காய்ந்துபோன ரொட்டிகள்தான் அயிஷாவின் மூன்று வேளை உணவு. சில இரவுகளைக் கடக்க, அயிஷாவுக்கு 12 பெயின் கில்லர் மாத்திரைகள் தேவைப்பட்டன. உணவு, மொபைல் சார்ஜ் என எதுவாக இருந்தாலும் சிறிய உயிர்காக்கும் படகின் மூலம் 8 கி.மீ பயணம் செய்து கரையை அடைய வேண்டும். அங்கு 2 மணி நேரத்துக்கு மேல் இருக்கக்கூடாது. கூடு அடையும் பறவை போல், கப்பலுக்குத் திரும்பிவிட வேண்டும். அலையற்ற அமைதியான கடலில் அநாதையாக நிற்கும் கப்பலில் அவர் கதறி அழுதாலும், குரல் கரையை எட்டாது. இருளும் நிசப்தமும் இணைந்து ஒரு மயானத்தின் உணர்வையே இரவுகள் அவருக்குப் பரிசளித்திருக்கின்றன. ‘எல்லாமே பகலாக இருந்துவிடக்கூடாதா’ என பயத்தில் நினைத்திருக்கிறார்.

திடீரனெ ஒரு நாள், கப்பல் 10 டிகிரி சாயத் தொடங்குகிறது. கப்பலுக்குள் நீர் நிரம்புகிறது. ‘இதுதான் சமயம்’ எனக் கூக்குரல் இடுகிறார் அயிஷா. ஒரு படகு நெருங்க, புது மனிதரைக் கண்ட மகிழ்ச்சியில் அயிஷா ஒரு கணம் தன்னை மறந்திருக்கிறார். வந்த மனிதர், வெறுமனே அயிஷாவையும் கப்பலையும் தன் மொபைலில் படம் பிடித்துவிட்டுச் சென்றுவிட்டாராம்.

கப்பல் மூழ்கும் இந்தக் கணத்தில்தான் தனக்கான விடுதலை இருக்கிறது எனத் தீர்க்கமாக நம்பிய அயிஷா, அபாய ஒலிகளை எழுப்புகிறார். ஒருவேளை உதவிகள் வரும்முன்னர் கப்பல் மூழ்கியிருந்தால், தனியொரு மனிதனாக உலகின் பார்வை படாமல், கப்பலுடன் சேர்த்து செங்கடலில் புதைக்கப்பட்டிருப்பார் அயிஷா.சில மணி நேரத்தில் ராணுவம் வந்து அயிஷாவை இழுத்துக்கொண்டு கரைக்குச் சென்றது. ‘‘என்னைக் கைது செய்து சிறையில் தள்ளுங்கள்’’ எனக் கெஞ்சினார் அயிஷா. தனிமைக் கப்பலைவிட சிறை நல்ல இடமாக அவருக்குத் தெரிந்தது. ‘‘அது முடியாது. நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை’’ என்றது அரசு. 10 நாள்களில் கப்பலைச் சரிசெய்து, மீண்டும் அந்தப் பெரிய சிறைக்குள் அயிஷாவை அனுப்பியது எகிப்து அரசு.

2020 மார்ச்சில் பெரும் புயல் ஒன்று வீசுகிறது. காற்றின் வேகத்தில் கப்பல் அதன் நங்கூரத்தை விடுத்துக்கொண்டு நகர்ந்தது. ‘எல்லாம் முடிந்தது’ என நினைக்கும் தறுவாயில் வரும் ஒற்றைக் கீற்றொளிதான் உலகை இன்றுவரையில் இயக்கிக்கொண்டு வந்திருக்கிறது. அன்று வந்த புயலை, அயிஷா இறைவனின் திருச்செயலாகவே பார்க்கிறார். ஆம், கப்பலை அது கரைக்கு நெருக்கமாக இழுத்து வந்துவிட்டது. கரையிலிருந்து வெறும் 270 மீட்டர் தூரத்தில் சூயஸ் கால்வாயின் ஆரம்பப் பகுதியில் ஒரு கிராமத்துக்கு அருகே தஞ்சமடைகிறது கப்பல்.

தனிமையின் நான்காண்டுகள்!

கரைக்கு நெருங்கி கவனம் பெற்றதால், விவகாரம் சூடுபிடிக்கிறது. கடந்த டிசம்பரில் மொஹம்மது அர்ரஷெடி என்பவர் அயிஷாவுக்கு உதவ முன்வருகிறார். வழக்கு விசாரணை விரைகிறது. விரைவில் தீர்ப்பு வந்துவிடும் என நம்பிக்கை கிடைக்கிறது. சில நாள்களில் அயிஷாவின் பாட்டியும் இறந்துவிட்ட செய்திதான் வருகிறது. இறுதியாக இந்த ஏப்ரல் 20-ம் தேதி அயிஷாவுக்கு விடுதலை கிடைக்கிறது. சுதந்திர மனிதனாகக் கரையில் கால் தடம் பதித்து, புதுப்புது முகங்களைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தார் அவர். ‘இனி ஒருநாளும் இந்த சபிக்கப்பட்ட கப்பலைப் பார்க்க விரும்பவில்லை’ என்கிறார்.

பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் கூற்றுப்படி, இப்படித் தனித்துவிடப்பட்ட கப்பல்களின் எண்ணிக்கை 250க்கும் மேல். இந்தோனேஷியாவில் சிக்கித் தவிக்கும் ஈரானியர்கள், குவைத்தில் தனித்துவிடப்பட்ட கப்பலில் 19 இந்தியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கிறார்கள் எனச் செய்திகளில் கண்டிருப்போம், கடந்திருப்போம். அவர்களைப் போன்ற ஒருவர்தான் அயிஷா. அவர் இருந்த இந்தக் கப்பலின் உரிமையாளர், இதுபோன்ற நான்கு கப்பல்களைப் பணயம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில மாதங்களுக்கு முன்னர் உலக அளவில் பேசுபொருளான இன்னொரு கப்பல் எவர்கிவன். சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட கப்பலைப் பற்றி எல்லோரும் பேசினோம். எதிர்பார்த்ததைவிட விரைவாகவே அக்கப்பல் அகற்றப்பட்டது. ஆனால், அதன் பின்னர் நடந்ததுதான் அதைவிடப் பெரிய துயரம். ஒரு நாளைக்கு 7 பில்லியன் பவுண்டு வீதம், அந்த ஒரு வாரத்துக்கான நஷ்டத்தை கப்பல் நிறுவனம் தர வேண்டுமாம். அதோடு, கால்வாயை அடைத்திருந்த ஒவ்வொரு நாளுக்கும் 11 மில்லியன் பவுண்டு தர வேண்டும் எனக் கப்பலைப் பிடித்துவைத்திருக்கிறார்கள். அடுத்த அயிஷாவின் கதையைக் கேட்க, கடல் தயாராகிக்கொண்டிருக்கிறது.