Published:Updated:

5, 8 -ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!- விரைவில் விசாரணை?! #NowAtVikatan

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

29.1.2020 - இன்றைய முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு!

29 Jan 2020 8 AM

8-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு?

8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தவுள்ளதை அடுத்து மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்வுக்குத் தயார்படுத்தும் வகையில் மாலை வேளையில் ஒருமணி நேரம் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுக்க வேண்டும் என அதில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் பள்ளி நேரங்களில் பாடப்பகுதிகளில் இருந்து தேர்வு நடத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ளது.

29 Jan 2020 8 AM

மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு இல்லை!

8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தவுள்ளதை அடுத்து மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ள தகவல் வெளியான நிலையில் அப்படி எதுவும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்று தொடக்க கல்வி இயக்குநர் சார்பில் விளக்கம் வெளியாகியுள்ளது.

29 Jan 2020 9 AM

எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு!

கேரள சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், உரை நிகழ்த்துவதற்காக ஆளுநர் ஆரிஃப் முகமது கான் முதல்வர் பினராயி விஜயனுடன் சபைக்கு வந்தார். அப்போது ஐக்கிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் எனக் கூறி சபையின் வாயிலில் பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர். மேலும், ஆளுநரை சபைக்குள் உள்ளே நுழைய விடாமல் நின்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பாதுகாவலர்கள் உதவியுடன் ஆளுநரை அவரது இருக்கைக்கு அழைத்துச் சென்றார் முதல்வர் பினராயி. உள்ளே நுழைந்தபோது CAAவுக்கு எதிரான வாசகத்தை தனது உரையில் வாசிக்க மாட்டேன் என ஆளுநர் சொன்னதால் எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர். தற்போது கேரள சட்டசபையில் ஆளுநர் உரை வாசிக்கப்பட்டு வருகிறது.

29 Jan 2020 12 PM

இந்தியா பேட்டிங்

ஹாமில்டனில் நடக்கும் 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது. நடந்து முடிந்த 2 டி20 போட்டியில் இந்தியா வெற்றி வாகை சூடியது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தப் போட்டியிலும் வெற்றிப் பெற்று தொடரைக் கைப்பற்றுமா என்று ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர். வாழ்த்துகள் வீரர்களே.

இந்தியா பேட்டிங்
இந்தியா பேட்டிங்
29 Jan 2020 1 PM

நரிக்குடி ஒன்றியத் தலைவரை குலுக்கல் முறையில் தேர்வுசெய்ய உத்தரவு!

நரிக்குடி ஒன்றியத் தலைவர் பதவியைக் குலுக்கல் முறையில் தேர்வுசெய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தி.மு.க-வைச் சேர்ந்த காளீஸ்வரி என்பவர், தேர்தலின்போது வன்முறை நிகழ்ந்ததால் ஒன்றியத் தலைவரை குலுக்கல் முறையில் தேர்வுசெய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு, தேர்தல் அலுவலர் இருவரும் சமமான வாக்குகள் பெற்றிருப்பதாக அறிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்தே, வன்முறைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆக மறு தேர்தல் நடத்தவேண்டிய அவசியம் இல்லை. எனவே, மறு தேர்தல் நடத்த அறிவிக்கப்பட்டுள்ள 30-ம் தேதி அன்று, குலுக்கல் முறையில் ஒன்றியத் தலைவரைத் தேர்வுசெய்ய உத்தரவிட்டனர்.

29 Jan 2020 1 PM

பா.ஜ.க-வில் இணைந்தார் சாய்னா!

பிரபல பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் காமன்வெல்த், ஒலிம்பிக்ஸ் போன்ற பல சர்வதேசப் போட்டிகளில் வெற்றிபெற்று தனக்கென தனி முத்திரை பதித்தவர். இவர், இன்று பா.ஜ.க-வில் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளார். டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்துக்குச் சென்று கட்சியில் தன்னை இணைத்துகொண்டார். விரைவில் டெல்லி தேர்தல் வரவுள்ள நிலையில், இவரது அரசியல் பிரவேசம் அதிக கவனம் பெற்றுள்ளது.

29 Jan 2020 2 PM

இந்திய அணி 179 ரன்கள் குவிப்பு!

டி20 போட்டிகளில் டெண்டுல்கருக்குப் பிறகு அதிவேகமாக 10,000 ரன்களைக் கடந்த தொடக்க ஆட்டக்காரர் என்ற பெருமையைப் பெற்றார், ரோஹித் ஷர்மா. ஹாமில்டனில் நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அரை சதம் அடித்த ரோஹித், இந்தச் சாதனையைப் படைத்தார். இதற்கிடையில், இந்தப் போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.

ஓப்பனிங் ஜோடியாகக் களமிறங்கிய ரோஹித்தும் கே.எல்.ராகுலும் நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களைத் திணறடித்தனர். ஆனால், அதன்பின் விக்கெட் மளமளவெனச் சரிந்தது. இருப்பினும் கடைசிக் கட்டத்தில் இந்திய வீரர்கள் அதிரடி காட்டினர். இந்திய அணி தரப்பில் ரோஹித் அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்தார். நியூஸிலாந்து தரப்பில் பென்னட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

29 Jan 2020 2 PM

மேன் vs வைல்டு படப்பிடிப்பு குறித்து ரஜினி!

``பியர் கிரில்ஸ் உடனான நிகழ்ச்சி படப்பிடிப்பில் பங்கேற்றது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. மறக்க முடியாத அனுபவத்தைத் தந்த பியர் கிரில்ஸ் மற்றும் டிஸ்கவரி சேனலுக்கு நன்றி" என்று மேன் vs வைல்டு நிகழ்ச்சி குறித்து நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். முன்னதாக, நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறித்து பியர் கிரில்ஸும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது .

29 Jan 2020 4 PM

இந்திய நியூஸிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டி ஹாமில்டன் நகரில் நடைபெற்றது. முதல் இரு ஆட்டங்களை வென்ற இந்திய அணி, இந்தப் போட்டியையும் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 179 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது, எனினும் ஜடேஜாவின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக அடுத்தடுத்து விக்கெட்டுகள் கிடைத்தது மட்டுமல்லாமல் நியூஸிலாந்து அணியின் ஸ்கோரும் கட்டுப்படுத்தப்பட்டது. எனினும், அந்த அணியின் கேப்டன் வில்லியம்ஸன் அதிரடியாக விளையாடி நியூஸிலாந்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். இறுதிக் கட்டத்தில் பும்ரா பந்துவீச்சு கைகொடுக்கும் என நினைத்த இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. 4 ஓவர்கள் வீசிய பும்ரா, 45 ரன்கள் விட்டுக்கொடுத்தார், இறுதி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்தில் சிக்ஸர் கிடைத்தது. அடுத்த பந்தில் டெய்லர் சிங்கிள் எடுக்க செஞ்சுரி அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்த பந்துகளை சிறப்பாக ஷமி வீச, இறுதிப் பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலை. அந்தப் பந்தில் டெய்லர் போல்டு ஆக ஆட்டம் சமனில் முடிந்தது. தற்போது சூப்பர் ஓவர் நடைபெற்றுவருகிறது.

29 Jan 2020 4 PM

த்ரில் டி20!

சூப்பர் ஓவரில் நியூஸிலாந்து அணி தரப்பில் கேப்டன் வில்லியம்சன் மற்றம் கப்தில் களமிறங்கினர். சூப்பர் ஓவரில் அந்த அணி 17 ரன்கள் எடுத்தது. போட்டியை வெல்ல இந்திய அணிக்கு 18 ரன்கள் தேவை. ரோஹித் மற்றும் ராகுல் களமிறங்கினர். முதல் 4 பந்துகளுக்கு 8 ரன்கள் மட்டுமே எடுக்க இறுதி இரண்டு பந்துகளுக்கு 10 ரன்கள் தேவை. கடைசி இரு பந்துகளிலும் ரோஹித் சிக்ஸர் அடிக்க இந்திய அணி போட்டியை வென்று தொடரையும் கைப்பற்றியது.

29 Jan 2020 10 PM

5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு! -தடை கோரி மனு!

தமிழகத்தில் 5, 8 -ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் தமிழக அரசின் உத்தரவு பெரும் விவாதத்தைக் கிளப்பியது. பல்வேறு தரப்பிலிருந்து இந்த அரசாணைக்குக் கண்டனங்களும் எதிர்ப்புகளும் வந்தாலும், தமிழக அரசு இதனை நடைமுறைப் படுத்துவதில் தீவிரமாக இருந்தது. இந்நிலையில், 5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பான அரசாணைக்குத் தடை கோரி வழக்கறிஞர் லூயிஸ் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார், 5, 8 -ம் வகுப்புகளின் பொதுத் தேர்வுக்கான அரசாணையை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு