Published:Updated:

Corona Live Updates: தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு! தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு
தமிழக அரசு

29.6.2020 | கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

29 Jun 2020 8 PM

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் பேசிய மருத்துவ நிபுணர்கள், ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து பரிந்துரைக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர்.

சென்னை - முழு ஊரடங்கு
சென்னை - முழு ஊரடங்கு
தே.அசோக்குமார்

இந்தநிலையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மேற்குவங்கம், மகாராஷ்டிரா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

29 Jun 2020 6 PM

தமிழகத்தில் 86,000-த்தைக் கடந்த மொத்த எண்ணிக்கை!

தமிழகத்தில் இன்று மட்டும் 3,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது.

Corona Treatment
Corona Treatment
pixabay.com

சென்னையில் மட்டும் இன்று 2,167 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55,969 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,141 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,212 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கொரோனா: 3 நாள்களில் 120 பேர்; புள்ளிவிவரங்களில் வேறுபாடுகள்! -அச்சத்தில் கோவை
29 Jun 2020 4 PM

ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரருக்குக் கொரோனா!

 ஓ.ராஜா
ஓ.ராஜா

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் இருந்ததால் மதுரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜாவுக்குப் பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது அவருக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

29 Jun 2020 3 PM

மகாராஷ்டிராவில் பொதுமுடக்கம் நீட்டிப்பு!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,64,626 நபர்களுக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 86,575 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,429 ஆகவும் இருக்கிறது.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே

இந்த நிலையில் அம்மாநிலத்தில் வரும் ஜூலை மாதம் 31-ம் தேதி வரையில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

29 Jun 2020 1 PM

மருத்துவ நிபுணர்கள் குழு பேட்டி!

தமிழகத்தில், சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் முழு ஊரடங்கும் மற்ற மாவட்டங்களில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கும் அமலில் உள்ள நிலையில், கொரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள 5-ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், இன்று மருத்துவர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். காலையில் தொடங்கிய ஆலோசனை, மதியம் வரை நீடித்தது.

மருத்துவ நிபுணர்கள் குழு
மருத்துவ நிபுணர்கள் குழு

ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவ நிபுணர்கள், ``தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாகத்தான் இருக்கிறது. சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில், பரிசோதனைகளை மேலும் அதிகப்படுத்தச் சொல்லி இருக்கிறோம்.

முழு முடக்கம்
முழு முடக்கம்

ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் எங்கள் குழு பரிந்துரைக்கவில்லை. ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்குத் தீர்வல்ல. அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. எல்லாப் பகுதிகளிலும் ஊரடங்கைத் தொடர நாங்கள் வலியுறுத்தவில்லை. ஊரடங்கிலேயே எப்போதும் இருக்க முடியாது. பொதுப் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் கூடுகையால்தான் தொற்று அதிகமாகிறது. அதைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியுள்ளோம்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் பாதிப்பும் அதிகமாக இருக்கிறது. பாதிப்பு அதிகரிப்பதால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாகப் பரிசோதனை மேற்கொண்டு தங்களை தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும்” என்றனர்.

29 Jun 2020 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,28,859 -லிருந்து 5,48,318 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 19,459 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 380 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,095 -லிருந்து 16,475 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,21,723 ஆகவும் உயர்ந்துள்ளது. 2,10,120 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தியா -  கொரோனா வைரஸ்
இந்தியா - கொரோனா வைரஸ்

நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,64,626 நபர்களுக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 86,575 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,429 ஆகவும் இருக்கிறது. கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் டெல்லியும், மூன்றாம் இடத்தில் தமிழகமும் இருக்கிறது.

29 Jun 2020 9 AM

தளர்வா, நீட்டிப்பா..?

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் முழு ஊரடங்கும் மற்ற மாவட்டங்களில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கும் அமலில் உள்ளநிலையில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள 5-ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், இன்று மருத்துவர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பது குறித்தும் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

29 Jun 2020 9 AM

கொரோனா- உலக அப்டேட்ஸ்!

கொரோனா - உலகம்
கொரோனா - உலகம்

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று ஒரு கோடியைத் தாண்டிய நிலையில் இன்று 1,02,38,232 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 55,49,897ஆக உள்ளது. தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,04,078 ஆக உயர்ந்திருக்கிறது.

29 Jun 2020 9 AM

அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு! 

கொரோனா வைரஸ் - அமெரிக்கா
கொரோனா வைரஸ் - அமெரிக்கா

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ள நிலையில், அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 26,37,072 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,28,437ஆக அதிகரித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு