`எஜமானரின் மனங்குளிர செயல்படும் அரசுக்கு பாராட்டுகள்'- வீட்டு வாசலில் கோலம் போட்டு எதிர்த்த கனிமொழி! #CAA #NowAtVikatan
29.12.2019 - இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!
கனிமொழி எதிர்ப்பு!
சென்னை பெசன்ட் நகர் பகுதியில் வீட்டின் முன்பு CAAவுக்கு கோலம் போட்டு எதிர்ப்புகளை தெரிவித்த 5 பேர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் அவர்களை காவல்துறையினர் கட்டாயப்படுத்தி அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றினர். கோலத்தில் `நோ டு என்.ஆர்.சி, நோ டு என்.பி.ஆர்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. பின்னர் அவர்கள் காவல்துறையால் விடுவிக்கப்பட்டனர். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டங்களை தெரிவித்துள்ள நிலையில் கனிமொழி எம்பியும் காவல்துறைக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
`நம் நாட்டில் வாசல் கூட்டுவது, கோலம் போடுவது போன்றவை தேசவிரோதம் என அறிந்துகொண்டேன். பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, அடிப்படை உரிமைகளை அனைவர்க்கும் உறுதி செய்து, தங்கள் எஜமானரின் மனங்குளிர செயல்படும் எடப்பாடி அரசுக்கு பாராட்டுகள்" எனக் கூறி கண்டனம் தெரிவித்தது மட்டுமில்லாமல் தனது வீட்டுக்கு வெளியிலும் CAAவுக்கு எதிராக கோலம் போட்டு எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளார்.
தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
கடந்த 27ம் தேதி நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் குளறுபடிகள் நடந்த 30 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, தஞ்சை என சில மாவட்டங்களில் உள்ள 30 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது/
அமிதாப்புக்கு `தாதா சாஹேப் பால்கே’ விருது!
திரைத்துறையின் உயரிய விருதான ‘தாதா சாஹேப் பால்கே’ விருது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. திரைத்துறை விருதுகள் வழங்கும்போது அமிதாப் பச்சன் காய்ச்சலால் அவதிப்பட்டதால் அன்றைக்கு கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து இன்று நடந்த விழாவில் தாதா சாஹேப் பால்கே’ விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து அமிதாப் பச்சன் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பிரகாஷ் ஜவடேகர், அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த அமிதாப், ``திரைத்துறையில் உயரிய விருது பெறுவதை பெருமையாக கருதுகிறேன். ரசிகர்களின் அபரிமிதமான ஆதரவால் இந்த இடத்தில் நிற்கிறேன்" என்று கூறியுள்ளார்.
முதல்வராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்!
ஜார்கண்ட் மாநிலத்தின் 11வது முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் பதவியேற்றார். ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் ராகுல் காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தி.மு.க தலைவர் ஸ்டாலின், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
'நலந்தானா' நல்வாழ்வுக் கருத்தரங்கம்
சென்னை கோட்டூர்புரம் அண்ணா மைய நூலகக் கருத்தரங்கக் கூடத்தில் மருத்துவர் கு.சிவராமனின் ஆரோக்யா சித்த மருத்துவமனையும் விகடனும் இணைந்து நடத்தும் 'நலந்தானா' - நல்வாழ்வுக் கருத்தரங்கம் இன்று காலையில் தொடங்கியது.
'உடல்நலம், உள்ளநலம், உணவுநலம், சமூகநலம் செதுக்கும் பணியில்..' என்ற டேக் லைனோடு தொடங்கியிருக்கிற இந்த இனிய நிகழ்வு இரவு 8 மணிவரையிலும் நடைபெற உள்ளது.
மேலும், கு.சிவராமன் எழுதி ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்த 'இன்னா நாற்பது இனியவை நாற்பது' கட்டுரைகள் புத்தகமாக இன்றைய மாலை நிகழ்வில் வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலின் கண்டனம்!
சென்னை பெசன்ட் நகரின் பெண்கள் சிலர் குடியுரிமை சட்ட திருத்தம், என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிராக கோலம் போட்டு எதிர்ப்பைப் பதிவு செய்தனர். அப்போது அங்கு வந்த போலீஸார் அவர்களை பிடித்து வைத்து விசாரணைக்கு பின்னர் விடுவித்தனர். இந்நிலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் நனது முகநூல் பக்கத்தில், ``அலங்கோல அ.தி.மு.க அரசின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதற்கு இது மேலும் ஓர் உதாரணம். சென்னை பெசன்ட் நகரில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்த ஆறு பேரை காவல்துறை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.
அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைக் கூட பயன்படுத்தத் தடைவிதிக்கும் ஆட்சி இது. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அவர்கள் மீதான வழக்கும் திரும்பப் பெறப்பட வேண்டும். அரசு மனித உரிமைகளை மதிக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
இலவச பயிற்சி முகாம்!
விகடன் மற்றும் கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து நடத்தும் UPSC, TNPSC இலவச பயிற்சி முகாம் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில், UPSC, TNPSC ஆகிய தேர்வுகளில் ஆர்வமுள்ள பலர் கலந்து கொண்டனர்.
கோலம் போடும் போராட்டம்!

நாட்டின் பல பகுதிகளில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கும், என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றை எதிர்த்தும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை பெசன்ட் நகர் பகுதியில் வீட்டின் முன்பு கோலம் போட்டு எதிர்ப்புகளை தெரிவித்த 5 பேர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் அவர்களை காவல்துறையினர் கட்டாயப்படுத்தி அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றினர். கோலத்தில் `நோ டு என்.ஆர்.சி, நோ டு என்.பி.ஆர்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. பின்னர் அவர்கள் காவல்துறையால் விடுவிக்கப்பட்டனர்.
ராஞ்சி புறப்பட்டார் ஸ்டாலின்!

மகாராஷ்டிரா தேர்தல் பரபரப்புகளுக்கிடையே நடைபெற்ற ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனத தளம் கூட்டணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் இன்று பிற்பகல் முதல்வராகப் பதவியேற்கிறார் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன்.
இந்தப் பதவியேற்பு விழாவுக்கு தேசியத் தலைவர்கள் மற்றும் பல மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் தி.மு.க தலைவர் ஸ்டாலினும் ஒருவர். எனவே, பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக ஸ்டாலின் இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் ராஞ்சி புறப்பட்டார்.