Published:Updated:

2K kids: என் கதாநாயகி!

2K kids: என் கதாநாயகி!
பிரீமியம் ஸ்டோரி
2K kids: என் கதாநாயகி!

- மைத்ரேயி

2K kids: என் கதாநாயகி!

- மைத்ரேயி

Published:Updated:
2K kids: என் கதாநாயகி!
பிரீமியம் ஸ்டோரி
2K kids: என் கதாநாயகி!

தனது 20 வயதிலேயே 45 நாள் கைக்குழந்தையுடன், கணவருடைய கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அந்தப் பெண். தமிழகத்தின் வடமாவட்டமொன்றில்... அடிப்படை வசதிகூட இல்லாமல் மிகவும் பின்தங்கியிருந்த அந்தக் கிராமத்தை வளர்ச்சிப் பாதைக்குக்கொண்டு செல்ல முழு மூச்சுடன் செயல்படத் தொடங்கினார். அரசின் ஒவ்வொரு திட்டத்தையும் கிராம சபை நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து, ஒவ்வொரு திட்டமாக நடைமுறைக்குக் கொண்டுவந்தார்.

இதற்கு எல்லாம் காரணமான அந்த ஊரின் பஞ்சாயத்துத் தலைவரான அந்த இளம்பெண், தன் 24-வது வயதில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், முதல்வர் ஜெயலலிதா ஆகியோரிடம் விருதுகளைப் பெற்றார்.

இந்தக் கட்டுரை, ஒரு பெண் முன்னேற்றக் கட்டுரை என்று இந்நேரம் நினைத்திருப்பவர்களை, அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டுகிறேன். இந்தளவுக்கு நிர்வாகத் திறனுள்ள பெண்ணை, கணவரும், ஆண் குழந்தை குறித்த சமூக அழுத்தங்களும் எந்தளவுக்குப் பின்னிழுத்து அவர் வாழ்க்கையை திசைமாற்றிப் போட்டிருக்கின்றன என்பதே கட்டுரையில் தொடரப்போகிறது.

பெண்ணின் கணவர், ஊருக்கெல்லாம் நல்லவர். ஆனால், வீட்டில் மனைவியைக் கொடுமைப்படுத்துவது யாருக்கும் தெரியாது. அதை அந்தப் பெண்ணின் வார்த்தைகளிலேயே கேட்போம்...

2K kids: என் கதாநாயகி!
2K kids: என் கதாநாயகி!

‘‘திருமணம் செய்து வந்த நாள் முதல் அவர் செய்றது சரியோ, தப்போ, அதைத்தான் கேக்கணும். அவர் சொல்றதை கேட்கலைன்னா, நைட் முழுக்க தூங்காம தன்னைத்தானே சுவத்துல இடிச்சுக்குறது, வீட்ல இருக்குற மருந்து, மாத்திரைகளை எடுத்துப் போட்டுக்குறது, பட்டினி கிடக்குறது, தற்கொலை மிரட்டல்னு துன்புறுத்துவார். பெத்தவங்க வருத்தப்படுவாங்கனு இதை அவங்க கிட்டயும் சொல்லல. மாசா மாசம் வீட்டுக்குத் தேவையான பொருள்களும், செலவுக்குப் பணமும் எங்கப்பா கொடுப்பாங்க. அதையும் சண்டைபோட்டு வாங்கி கணவர் செலவழிப்பார்.

ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில, ஆண் குழந்தையை எதிர்பார்த்தார் கணவர். ரெண்டாவதும் பெண் குழந்தை பிறந்தப்போ, ஆஸ்பிட்டல்லேயே விட்டுட்டுப் போயிட்டார். என் பெற்றோர்தான், பணம் கட்டி டிஸ்சார்ஜ் பண்ணினாங்க. அதுக்கு அப்புறமும், நான் கருத்தடை செய்துக்க கணவர் சம்மதிக்கலை. என் வாழ்க்கை பாதிக்கப்படும்னு, என் பெற்றோரும் கணவரை கேள்வி கேக்குறதில்லை. அடுத்து, எங்கப்பா வீட்ல என் பேர்ல எழுதிவெச்ச நிலத்தை வித்து பணம்கொடுக்கச் சொல்லி துன்புறுத்தினர். தன்னைத்தானே துன்புறுத்தி என்னை மிரட்டி வந்தவர், என்னை அடிக்கிறது, சூடு வைக்கிறதுனு சித்ரவதைகள் செய்யத் தொடங்கினார்.

மூணாவது முறையா நான் கர்ப்பம் ஆனப்போ, ஜாதகம் பார்த்துட்டு வந்து, பெண் குழந்தைதான் பிறக்கும்னு சொன்னதால கருக் கலைப்பு செய்யச்சொல்லி துன் புறுத்தினார். அதுக்குக்கூட என் கிட்ட காசில்ல. மகளிர் குழுவில் கடன் வாங்கி கருக்கலைப்புச் செய் தேன். இதையெல்லாம் என் பெற் றோர்கிட்ட சொல்லல. என் உடல்நிலை ரொம்ப மோசமானப்போதான், எல்லாத்தையும் சொல்ல வேண்டிய தாயிடுச்சு. ‘உடனே கிளம்பி வா’னு சொன்னாங்க.

ஒரு வருஷம் என் பிறந்த வீட்டுல குழந்தைகளோட இருந்தேன். ஒரு தடவைகூட வந்து என் கணவர் எங்களைப் பார்க்கலை. ரெண்டாவது கல் யாணம் செய்துக்கிறதா சொல்லி விவாகரத்து கேட்டு அவர் மிரட்ட, பெற்றோர் எவ்ளோ சொல்லியும் கேட்காம, என் பிள்ளைகளின் எதிர்காலத் துக்காக மறுபடியும் கணவர் வீட்டுக்குப் போனேன்.

நான்காவது முறை கர்ப்பம் அடைந்தேன். அப்போ உடல்நிலை ரொம்ப மோசமா இருந்ததால, 10 மாசமும் செத்துப் பிழைச்சேன். பிரசவவலி வந்தும், ஜோசியர் குறிச்சுக் கொடுத்த நேரத்தில்தான் கூட்டிட்டுப் போவேன்னு சொன்னார். ஒருவழியா அன்னிக்கு இரவு குழந்தை பிறந்தது... பெண் குழந்தை. குழந்தையோட முகத்தைக்கூட பார்க்காம, ஆஸ்பிட்டல்லேயே விட்டுட்டுப் போயிட்டார். பிறந்த வீட்டுலதான் எல்லா செலவுகளையும் பார்த்து, வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தாங்க.

அதுக்கு அப்புறமும், ஆண் குழந்தைதான் வாரிசு, ஆண் குழந்தை பிறக்கும்வரை கருத்தடை செய்துக்கக் கூடாதுனு சொன்னார். ‘நான் ஒண்ணும் குழந்தை பெத்துக்குற மெஷின் கிடையாது’னு சொன்னேன். என்னையும் குழந்தையும் அடிச்சு துன்புறுத்த, ‘போதும்டா இந்த வாழ்க்கை’னு முடிவெடுத்து பிறந்த வீட்டுக்கு வந்துட்டேன். 13 வருஷமா, அப்பா, அம்மா ஆதரவுலதான் என் மூணு பிள்ளைகளையும் வளர்த்துட்டு வர்றேன். என் மூணு பொண்ணுங் களையும் நல்லா படிக்கவெச்சு, உயர்ந்த நிலைக்குக் கொண்டு வரணும். பெண் பிள்ளைகளை வேண்டாம்னு சொல்றவங் களுக்கு நானும் என் பிள்ளை களும் நம்பிக்கை பாடமா இருப்போம்!”

அவரின் இலக்கை நான் நிச்சயம் ஒருநாள் அடைவேன். ஆம், அவர் வேறு யாருமல்ல... என் அம்மா!