Published:Updated:

2K Kids: உங்கள் கனவுக்கு என்ன ஆனது..?!

2K Kids
பிரீமியம் ஸ்டோரி
2K Kids

கோ.ஜெயஸ்ரீ

2K Kids: உங்கள் கனவுக்கு என்ன ஆனது..?!

கோ.ஜெயஸ்ரீ

Published:Updated:
2K Kids
பிரீமியம் ஸ்டோரி
2K Kids

மாணவப் பருவத்தில் எல்லோருக்குமே ஒரு லட்சியம், கனவு இருக்கும். நாள்கள் செல்லச் செல்ல, தாங்கள் என்னவாக நினைத்தார்களோ அதைப் பலர் கைவிட்டுவிடுவார்கள். ஆண்களாவது, விருப்பப்பட்ட துறை அல்லாத வேறொரு துறையில் பயணித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு முன்னேற்றம், லட்சியம் என்பதெல்லாம் அவர்கள் வாழ்விலிருந்தே கரைந்துபோயிருக்கும். விதிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். என்றாலும், இன்னும் எதுவும் முடிந்துபோய்விடவில்லை தோழிகளே... உங்கள் கனவுக்கு உயிரூட்ட ஒரு ரூட் மேப் இங்கே!

தன்னம்பிக்கையே துணை!

பெண்களின் முன்னேற்றத்துக்குத் தடைக்கற்களாக குடும்ப சூழ்நிலை முதல் அடக்குமுறை வரை பல காரணங்கள் இருந்தாலும், பலருக்கு அவர்களின் தன்னம்பிக்கை இன்மையும் அதற்குக் காரணமாகிறது. மற்ற காரணங்களை முழுமையாகக் களையக்கூடிய அதிகாரம் நம் கையில் இல்லை. ஆனால், நம் தன்னம்பிக்கை இன்மையை வென்றெடுக்கும் முழுப் பொறுப்பும் நம்முடையதே. அந்த ஒற்றைப் பலம் போதும் வெற்றிக்கொடி கட்ட.

நம் திறன், நம் முதலீடு!

நம் திறன் மீது நமது தன்னம்பிக்கையை வைத்து அதை மெருகூட்டுவோம். ‘எனக்கு இந்த வேலை நல்லா வரும்...’ என்று நாம் இரண்டடி எடுத்து வைக்கும்போது, சமூகம் நம்மை கையில் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ‘இதை ஒரு பெண் எப்படி செய்யலாம்’, ‘இது பாது காப்பற்றது’ என்று பல விமர்சனங்களுடன் வரும் சுற்றம். அவர்களின் வார்த்தைகளைக் கேட்டு அந்தப் பாதையில் இருந்து நாம் வெளியேறினால், வெற்றியி லிருந்தும் வெளியேறிவிடுவோம். எனவே, ஆக்கபூர்வ மான எந்தத் தனித்திறனும் நேர்மறையானதே. அதை வளர்த்துக்கொள்வோம். ‘எனக்குக் கோலம்தான் போடத் தெரியும்...’, ‘சமையலைத் தவிர வேற என்ன தெரியும் எனக்கு...’ என்கிறீர்களா? யூடியூபில் கோல வீடியோக்களும், குக்கரி வீடியோக்களும் லட்சக் கணக்கில் லைக்ஸ் அள்ளிக்கொண்டிருக்கின்றன. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

சின்னச் சின்ன அடிகள் வைப்போம்!

தன்னம்பிக்கையைப் பற்றிக்கொண்டு திறனை வளர்த்தாயிற்று. அடுத்து? இலக்கை நிர்ணயிக்க வேண்டும். முதல் படியில் நிற்பவருக்கு இரண்டாவது படி இலக்கு, உச்சிப் படி கனவு. ஆக, சின்னச் சின்ன இலக்குகளாக நிர்ணயித்து அதை அடைந்து, நம் கனவை நோக்கி நகர்வோம். முன்னேற்றம் மெதுவாக இருக்கலாம். முன்னேற்றமே இல்லாத தேக்கநிலைதான் கூடாது. மற்றவர்களின் பிரமாண்ட வெற்றிகளைப் பார்த்து மிரளாமல், ‘நம் சூழ்நிலையில் இந்த நான்கு படிகள் நாம் தாண்டி வந்திருப்பதே குட்...’ என்று நமக்கு நாமே தட்டிக் கொடுத்துக்கொள்வோம்.

பயம் விரட்டும் மந்திரம்!

கனவுகளின் வழியில் அவ்வப்போது பயம் வந்து நம்மை பிடித்துக்கொள்ளும்தான். அப்போதெல்லாம், ‘உன்னால் முடியும்...’ என்று சொல்லக்கூடிய நேர்மறை மனிதர்களை உடன்வைத்துக்கொள்வோம். அவர் களுடன் உரையாடுவோம். எதிர்மறை வார்த்தைகள் பேசுபவர்களிடம் நம் பயம், தடுமாற்றம் பற்றியெல்லாம் ஒருபோதும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். இதைவிட சிறந்த ஆலோசனை ஒன்று உள்ளது. ‘உன்னால் முடியும்’ என்று பிறர் கூற வேண்டும் என்று எதிர்பார்க் காமல், ‘என்னால் நிச்சயம் முடியும்’ என்ற மந்திரத்தை நமக்கு நாமே சொல்லிக்கொள்வோம்.

சமூக நெருக்கடிகளை சமாளிப்பது எப்படி?

முன்னேற்றப் பாதை முழுக்கவே, சமூக நெருக் கடிகள் நம்மை தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். பொருளாதாரத்தில் சுயசார்பு கொள்ளும் பல பெண்கள், சமூக அழுத்தத்துக்குத் தங்களை விலை கொடுப்பதில்லை. அப்படி சுய வருமானம் சாத்தியமாகும் போது, அது தரும் தன்னம்பிக்கையும் உற்சாகமும் உத்வேகமும், ‘எனக்கு ராஜாவா நான் வாழுறேன்...’ என்று சொல்ல வைக்கும். இதில் இன்னொரு விஷயம், குடும்பம், சுற்றம் என்று அவர்களுக்கு எதிராக நின்று தான் நம் இலக்குகளை அடைய வேண்டும் என்ப தில்லை. நியாயமான கனவுகளை அவர்களுக்கு புரிய வைப்பதும் நம் பொறுப்பே. அதைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு ஆணாதிக்க இறுக்கத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்றால், `பிளான் பி'-ஐ தேர்ந்தெடுக்கலாம்.

2K Kids: உங்கள் கனவுக்கு என்ன ஆனது..?!

இங்கு பெற்றோருக்கு சில வார்த்தைகள். தங்கள் பெண்ணுக்கு ‘நல்ல’ வாழ்க்கையை அமைத்துத் தருவதாக இங்கு பலர் நினைப்பது திருமணத்தைத்தான். மாறாக, வேலை, நல்ல சம்பளம், சுய அடையாளம் எனத் தங்கள் பெண்கள் விரும்பும் ‘நல்ல’ வாழ்க்கையை சாதித்துக் காட்ட, படிப்பை முடித்த உடனேயே திருமணம் என்றில்லாமல், அவர்களுக்குக் கால அவகாசம் கொடுக்கலாம்.

வயது தடையல்ல!

சில வருடங்களுக்கு முன், கேரளாவைச் சேர்ந்த 96 வயதான கார்த்தியாயினி பாட்டி, கேரள அரசு நடத்தும் கல்வியறிவுத் திட்டமான ‘அக்ஷரலக்ஷம்’ திட்டத்தின் கீழ் நான்காம் வகுப்புக்கு இணையான தேர்வில் 98/100 மதிப்பெண் பெற்றபோது, அனைவராலும் கொண்டாடப்பட்டார். ‘100 வயதாகும் போது 10-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதே ஆசை’ என்று அப்போது தெரிவித்தார் கார்த்தியாயினி பாட்டி. வெற்றிக்கு வயது தடையில்லை, விடா முயற்சியே வேண்டும் என்ற பாடத்தில், பாட்டி 100/100 எடுத்துவிட்டார். எனவே, ஒரு முயற்சியை எடுக்கும் முன்னர், ‘40 வயசாகிடுச்சே...’ என்ற தயக்க மெல்லாம் வேண்டாம். எடுத்த முயற்சியில் விடாமல் பயணிக்க வேண்டியதே முக்கியம்.

சிலர் வாரத்தில் ஒரு நாள் மட்டும் அளவுக்கு அதிகமாக உழைத்துவிட்டு, மற்ற ஆறு நாள்களில் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள். அது வெற்றி சூத்திரம் அல்ல. கனவை அடைவதற்கான கடைசி அடியை எடுத்துவைக்கும் வரை நிதானமாக ஒவ்வொரு நாளும் உழைக்க வேண்டும். இறுதியாக, முன்னேற்றத்தை நோக்கி நாம் நகரும் பாதையில் அதேபோல நகர்ந்து கொண்டிருக்கும் சக பெண்களின் கரங்களையும் பிடித்துக்கொள்ளும்போது, அந்தச் சங்கிலி நீளும். வெல்வோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism