Published:Updated:

2K kids: குச்சிமிட்டாய்... குழந்தைகள்... குதூகலம்!

கர்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
கர்ணன்

- க.நித்யா

குச்சிமிட்டாய்... இந்த வார்த்தையைச் சொன்னதும் எல்லாருக்கும் தங்களோட பள்ளிக்காலம் ஞாபகம் வரும். குச்சிமிட்டாய், சூடன்மிட்டாய், கமர்கட், கல்கோனாவெல்லாம் வாங்குறதுக்காக வீட்டுல கெஞ்சிக் கூத்தாடி 10 பைசா, 25 பைசா வாங்கி பள்ளிக் கூடத்துக்கு எடுத்துட்டுப் போறது, இன்டர்வல் பீரியட்ல ஸ்கூலுக்கு முன்னாடி இருக்குற கடையில மிட்டாய் வாங்க ஓடுறது, ஃபிரெண்ட்ஸுக்கு காக்காகடி கடிச்சுக் கொடுக்குறது, கிளாஸ்ல ஒளிச்சு வெச்சு சாப்பிடறதுனு ‘ஞாபகம் வருதே ஞாபகம் வருதே’ மோடுக்கு பலரும் போகலாம். மிட்டாய் பிசுபிசுப்பு ஒட்டியிருக்கும் அந்தச் சின்ன உள்ளங்கைகள் மேல சிலருக்கு ஏக்கம் வரலாம். உங்களோட நினைவுகளை இன்னும் கொஞ்சம் கிளறிவிட, ஒரு காலத்துல பள்ளிக் குழந்தைகள் ‘குச்சிமிட்டாய்காரர்’னு ஆசையா ஓடிவந்த எங்கப்பா கர்ணன், அவரோட அனுபவங்களைச் சொல்றார் கேளுங்க...

2K kids: குச்சிமிட்டாய்... குழந்தைகள்... குதூகலம்!

‘`திருவண்ணாமலை ஆரணிதான் என் சொந்த ஊரு. குச்சிமிட்டாய் செய்றதை நான் எங்கம்மாகிட்ட இருந்து கத்துக்கிட்டேன். 50 பைசாவுக்கு ரெண்டு மிட்டாய்கள்னு பள்ளிக்குழந்தைகளுக்கு குச்சிமிட்டாய் வித்தேன். அவங்களுக்கு எல்லாம் நான் செய்ற குச்சிமிட்டாய் ரொம்பப் பிடிக்கும். 50 மிட்டாய்கள்ல 2 மிட்டாய்கள்ல மட்டும், உள்ள 25 பைசா நாணயத்தை மறைச்சு வெச்சு செய்வேன். அந்த அதிர்ஷ்ட மிட்டாய் யாருக்குக் கிடைக்கும்னு பிள்ளைங்கள ஒவ்வொரு தடவையும் பரவசத்தோட மிட்டாய் வாங்குற அனுபவம் அவ்ளோ சந்தோஷமா இருக்கும். ‘ஐ... எனக்குக் கிடைச்சிடுச்சு அதிர்ஷ்ட மிட்டாய்’னு நாணயம் கிடைச்ச பிள்ளைங்க எங்கிட்ட வந்து கண்கள் மின்ன காட்டிட்டு ஓடும்போது, நான் செய்றது வியாபாரம் என்பதையெல்லாம் தாண்டி ஓர் இனம் புரியாத திருப்தி கிடைக்கும்.

எந்த ரசாயனக் கலப்பும் இல்லாத இந்த ஆரோக்கிய மிட்டாயை விற்பனை செஞ்சுட்டு வந்த நான், 50 பைசா செல்லாதுனு அறிவிச் சப்போ ஒரு ரூபாய்க்கு இரண்டு மிட்டாய்கள்னு விற்க ஆரம்பிச்சேன். அப்புறம் பேப்பர்ல சுத்துன மிட்டாய் எல்லாம் வர வர, என் பிழைப்பு நசிஞ்சு போயிடுச்சு. வேற வேலை தேடி குடும்பத்தோட சென்னைக்கு வந்துட் டேன். கொரோனா ஊரடங்குக் காலத்துல என் பிள்ளைகளுக்குக் குச்சிமிட்டாய் செஞ்சு கொடுத்தப்போ, அவங்க ஆச்சர்யமாவும் சந்தோஷமாவும் அதைச் சாப்பிட்டதைப் பார்த்தப்போ, என்கிட்ட மிட்டாய் வாங்கின குழந்தைகள் ஞாபகம் வந்து மனசுக்கு நெகிழ்வா இருந்தது’’னு சொன்ன அப்பா குச்சிமிட்டாய் ரெசிப்பியையும் சொன்னார்.

2K kids: குச்சிமிட்டாய்... குழந்தைகள்... குதூகலம்!

தேவையான பொருள்கள்: வெல்லம் - 250 கிராம், தண்ணீர் - 50 மில்லி, தென்னங்குச்சி.

செய்முறை: வெல்லத்தை பொடிச்சுக்கோங்க. தண்ணியைச் சூடாக்கி பொடிச்ச வெல்லத்தை அதுல சேர்த்துக் கலந்து கரைச்சு, தூசு, கழிவு போக வடிகட்டி எடுத்துக்கோங்க. இந்த வெல்லத்தண்ணியை அடிகனமான பாத்திரத் துல ஊத்தி, அடுப்பில வெச்சு கொதிக்கவிடுங்க. வெல்லம் கொதிச்சு பாகானதும், கொஞ்சம் எடுத்து தண்ணிலவிட்டு கையில வெச்சு உருட்டிப் பாருங்க. உருண்டை ஒட்டாம, இளமாக சரியா வந்தா அதுதான் சரியான பதம். அடுப்பை அணைச்சுட்டு, அந்தப் பாகை தட்டில் ஊத்துங்க. பாகு கை பொறுக்கும் இளஞ்சூட்டுல இருக்கும்போதே சின்னச்சின்ன உருண்டைகளா உருட்டி உருட்டி, புதிய தென்னங்குச்சியில் செருகுங்க. சுவையான, ஆரோக்கியமான குச்சிமிட்டாய் ரெடி. லாலிபாப்னு சொன்னாதான் இப்போ இருக்குற குழந்தைகளுக்குத் தெரியும். இதுவே, வெல்லப்பாகுல தேங்காய்த் துருவல் சேர்த்து செஞ்சு உருட்டினா, அது பப்பரமிட்டாய்’’ - சந்தோஷமா சொன்னார் அப்பா.

குச்சிமிட்டாய் செய்ய ரெடியா?!