லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

2K kids: கவிதை கேளுங்கள்... எழுதித் தருகிறோம்! - இளம் பட்டாளத்தின் புதிய முயற்சி

2K kids
பிரீமியம் ஸ்டோரி
News
2K kids

- பா.பாலசந்தர்

வித்யா, ரோஷினி மற்றும் ஜோயல் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள். ‘புராஜெக்ட் புராடட்ஸ்’ (Project Prodets) என்ற கவிதைக் குடும்பத்தை உருவாக்கி, எழுத்தில் ஆர்வமுள்ளவர்களின் படைப்புத் திறனை வளர்த்தும் அங்கீகரித்தும் வருகிறார்கள். இந்தக் குழுவில் இப்போது 300 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இது உருவான கதையையும், இதன் செயல்பாடுகளையும் பகிர்ந்துகொண்டனர் மாணவர்கள்.

2K kids: கவிதை கேளுங்கள்... எழுதித் தருகிறோம்! - இளம் பட்டாளத்தின் புதிய முயற்சி

ஆரம்பம்...

“ஓப்பன் மைக் (OPEN MIC) என்பது பாடல் முதல் ஸ்டாண்டு அப் காமெடிவரை நமக்குப் பிடிச்சதை எல்லார் முன்னாடியும் நாம செய்துகாட்ட வாய்ப்பளிக்கிற ஒரு மேடை கான்சப்ட். அப்படி ஒரு ஓப்பன் மைக் நிகழ்வுலதான், நாங்க மூணு பேரும் சந்திச்சுக்கிட்டோம். எங்க மூணு பேருக்கும் பொது ரசனையா கவிதை இருந்துச்சு. எங்களைப்போல சின்ன லெவல்ல கவிதை எழுதுறவங்களுக்கும், அவங்க எழுத்துக்கும் அங்கீகாரமும் அன்பும் நிறைய கிடைக்கச் செய்யணும்னு கலந்து பேசி, `புராஜெக்ட் புராடட்ஸ்’ (Project Prodets) குழுவை உருவாக்கினோம்.

2K kids: கவிதை கேளுங்கள்... எழுதித் தருகிறோம்! - இளம் பட்டாளத்தின் புதிய முயற்சி

அண்ணாந்து பார்க்காம எல்லோரும் எழுதலாம்!

கவிதைக்கான கருவும் மொழியும் நம்ம எல்லோர்கிட்டயும் இருக்கு. சிலருக்குத்தான் அது கைவரும்னு நினைக்கத் தேவையில்ல. அண்ணாந்து பார்க்க வைக்கிற இந்தக் கலையை எல்லோரையும் எழுத வைக்கணும், ஓடிக்கிட்டே இருக்குற இந்த வாழ்க்கையில இருந்து ஆசுவாசம் அளிக்கிற தீர்வா அவங்களுக்கு இதை ஆக்கணும்னு நினைச்சோம். யோசிச்சுப் பாருங்க... ஸ்கூல் டேஸ்ல நாம எல்லோருமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல ரெண்டு, நாலு வரி எழுதி அதைக் கவிதைனு நம்பியிருப்போம். அந்த நம்பிக்கை போதும்... நாமளும் கவிதை எழுதலாம்.

 ஜோயல் -  ரோஷினி -  மதிராஜ் -  வித்யா
ஜோயல் - ரோஷினி - மதிராஜ் - வித்யா

உங்க கவிதைகளோடு எங்ககிட்ட வாங்க!

நாங்க நிறைய ‘ஓப்பன் மைக்’ அரங்கங்கள் நடத்துறோம். உங்க கதை, கவிதை, நகைச்சுவை, இசைத் திறனை நீங்க வெளிப்படுத்த பாதுகாப்பான இடம் இது. உங்களை யாரும் ஜட்ஜ் செய்ய மாட்டாங்க. மேலும், எங்க வாட்ஸ்அப் குழுவில் ஒரு தலைப்பு கொடுத்து, கவிதை போட்டிகள் நடத்துறோம். அதில் தேர்வாகுற கவிதைகளை எங்களோட இணைய பத்திரிகையில பதிவிடுவோம். எங்க இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நீங்க எங்களோடு இணையலாம். மாசம் ஒருமுறை எல்லோரும் கூடி (கொரோனா என்பதால இப்போ இல்ல), கவிதை பற்றிப் பேசுவோம். எல்லோரும் ஓட, ஒருவர் ஒருத்தரைப் பிடிப்பார். பிடிபட்டவர், அவரைப் பிடிச்சவர் சொல்ற தலைப்பில் ஒரு கவிதை சொல்லணும்னு அது ஜாலியான நிகழ்வா இருக்கும்.

2K kids: கவிதை கேளுங்கள்... எழுதித் தருகிறோம்! - இளம் பட்டாளத்தின் புதிய முயற்சி

பஸ்கிங்

‘பஸ்கிங்' (Busking) என்பது, வீதியில் நின்னு ஏதாச்சும் ஒரு கலையை நிகழ்த்துறது. நாங்க அந்த கான்சப்ட்டை எடுத்தோம். நீங்க சொல்ற தலைப்பில், தெருவில் அங்கேயே, அப்போதே ஒரு கவிதை எழுதித் தருவோம். இந்தக் கவிதை பஸ்கிங்க்கு நீங்க சொல்ற தலைப்பு ஒரு வார்த்தையாகவோ, நிகழ்வாகவோ இருக்கலாம். அதைப் பற்றி உங்ககிட்ட பேசி உங்க உணர்வுகளை புரிஞ்சுகிட்டு எழுதிக் கொடுப்போம்.

2K kids: கவிதை கேளுங்கள்... எழுதித் தருகிறோம்! - இளம் பட்டாளத்தின் புதிய முயற்சி

ஐஸ்க்ரீம் கவிதை

பெசன்ட் நகர் கடற்கரையில் காவல்துறை பூத் பக்கத்துல, ‘ஒரு வார்த்தை கொடுங்கள், உங்களுக்கென கவிதை ஒன்று தருகிறேன்’ என்ற வாசகத்தை சார்ட் பேப்பர்ல ஏந்தி, நாலு ஞாயிற்றுக்கிழமைகள் காத்திருந் தோம். யாருமே வரல. ‘வருவாங்க, வெயிட் பண்ணுங்க’னு காவல்துறையினர் வாழ்த்தினாங்க. நாலாவது ஞாயிற்றுக்கிழமை ஒரு பள்ளிச் சிறுமி வந்தா, ‘ஐஸ்க்ரீம் பத்தி கவிதை எழுதித் தாங்க’னு கேட்க, குளிர்ந்து போனோம். நாங்க எழுதின கவிதையை படிச்சிட்டு அவ கண்ணுல மின்னுன மகிழ்ச்சி, எங்களுக்குத் தூண்டுகோலா ஆனது. எங்க வாசகத்தைக் காகிதத்தில் இருந்து பலகைக்கு மாத்தினோம். மக்களும் எங்ககிட்ட வர ஆரம்பிச்சாங்க.

2K kids: கவிதை கேளுங்கள்... எழுதித் தருகிறோம்! - இளம் பட்டாளத்தின் புதிய முயற்சி

கவிதை விதைகள்

எங்களுக்கு அங்கீகாரம் கிடைச்சதும், இன்னும் பலருக்கும் அது கிடைக்கணும்னு நினைச்சோம். பெரம்பூரிலுள்ள சென்னை பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் முதல்வர் செல்வகுமாரியின் உதவியோட, சென்னை அக்ஷயா ரோட்டரி சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர் மதிராஜ் ஒருங்கிணைப்பில், கவிதையில் ஆர்வமிருக்கிற ஐந்து பள்ளி மாணவிகளை பெசன்ட் நகர் கடற்கரை அழைத்து வந்து எங்ககூட சேர்ந்து ‘பஸ்கிங்’ செய்யப் பழக்கினோம். அவங்க எழுதிய கவிதைகளும், மக்களை அணுகிய விதமும் எங்களை ஆச்சர்யப்படுத்தியது. அடுத்த வாரமே அதே பள்ளியைச் சேர்ந்த 15 மாணவிகள் எங்ககூட கலந்துகிட்டாங்க. கலக்குறாங்க பசங்க.

2K kids: கவிதை கேளுங்கள்... எழுதித் தருகிறோம்! - இளம் பட்டாளத்தின் புதிய முயற்சி

அடுத்து..?

‘பஸ்கிங்’, சக மனிதர்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள எங்களுக்கு வாய்ப்பளிக்குது. எல்லார்கிட்டயும் தேங்கிக்கிடக்குற கதைகளை, கவிதைகளை வெளிய கொண்டுவரணும். அதுக்காக தொடர்ந்து இயங்குவோம். சென்னையில கலைகளுக்கு, கலைஞர்களுக்கு என ஒரு தெரு அமைக்கப்படணும்ங்கிற பெரிய கனவு இருக்கு. அதை நோக்கியே பயணப்படுறோம்!”

‘புராஜெக்ட் புராடட்ஸ்’கிட்ட நாங்க ஒரு கவிதை வாங்கிட்டோம். நீங்க..?!