Published:Updated:

17வது கிராண்ட்ஸ்லாம்; ஆஸ்திரேலிய ஓபனில் 8வது பட்டம்! - அசத்திய ஜோகோவிச் #AusOpen #NowAtVikatan

ஜோகோவிச்
ஜோகோவிச் ( #AusOpen )

2.2.2020 - இன்றைய முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு!

02 Feb 2020 6 PM

அசத்திய ஜோகோவிச்!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை 6-4, 4-6, 2-6, 6-3, 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி செர்பியாவின் நோவான் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜோகோவிச்
ஜோகோவிச்
#AusOpen

முதல் செட்டில் வென்றிருந்தாலும் அடுத்த இரண்டு செட்களை 4-6, 2-6 என்ற கணக்கில் இழந்த ஜோகோவிச், அடுத்த இரண்டு செட்களை 6-3, 6-4 என்ற கணக்கில் வென்று சாதித்தார். இது சர்வதேச அளவில் அவர் வெல்லும் 17வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். அதேபோல், ஆஸ்திரேலிய ஓபனில் அவருக்கு 8வது பட்டமாகும். கடந்த 2008, 2011, 2012, 2013, 2015, 2016, 2019, மற்றும் தற்போது 2020ம் ஆண்டில் அவர் ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியனாகியிருக்கிறார்.

02 Feb 2020 4 PM

டி20 தொடரை முழுமையாக வென்ற இந்திய அணி!

நியூஸிலாந்து அணிக்கெதிரான 5வது டி20 போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. ரோஹித் ஷர்மா, 60 ரன்களும் கே.எல்.ராகுல் 45 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது. நியூஸிலாந்து தரப்பில் ராஸ் டெய்லர் 53 ரன்களும் விக்கெட் கீப்பர் ஷெய்ஃபெர்ட் 50 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளும் ஷைனி மற்றும் ஸ்ரதுல் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். நியூஸிலாந்து மண்ணில் அந்த அணி இந்திய அணி ஒயிட்வாஷ் செய்வது இதுவே முதல்முறையாகும். அதேபோல், டி20 வரலாற்றில் 5 போட்டிகள் கொண்ட தொடரை 5-0 என்ற கணக்கில் வென்ற முதல் அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றது.

02 Feb 2020 2 PM

164 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா!

இந்தியா - நியூஸிலாந்து இடையேயான ஐந்தாவது டி20 மவுண்ட் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் ஒரே ஒரு மாற்றமாக கேப்டன் கோலி ஓய்வு எடுக்கிறார். அவருக்கு பதிலாக ரோஹித் ஷர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். டாஸ் வென்ற ரோஹித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஓப்பனிங் வீரர் சஞ்சு சாம்சன் ஏமாற்றினாலும் ரோஹித், கே.எல்.ராகுல் இணைந்து நன்றாக ஆடினர். இருந்தாலும் ரோஹித் 60 ரன்கள் எடுத்தபோது காயத்தால் வெளியேறினார். பின்னர் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 45 ரன்கள் எடுத்தார். நியூஸிலாந்து தரப்பில் குகலின் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

02 Feb 2020 2 PM

சென்னையில் இன்று டி.எம். கிருஷ்ணா புத்தக வெளியீட்டு விழா!

பாடகரும் சமூக செயற்பாட்டாளருமான டி.எம். கிருஷ்ணா தற்போது எழுதியுள்ள நூல் ‘செபாஸ்டியன் & சன்ஸ்’ மிருதங்கம் செய்பவர்களுக்கும் அதை உபயோகிக்கும் இசைக் கலைஞர்களுக்கும் இடையான முரண் குறித்துப் பேசுகிறது இந்த புத்தகம். முதலில் இந்த புத்தக வெளியீட்டு விழா இன்று மாலை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் நடப்பதாக இருந்தது. ஆனால் செபாஸ்டியன் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் இடம் பெற்றுள்ளதால் புத்தக வெளியீட்டு விழாவை ரத்து செய்வதாக கலாஷேத்ரா கூறியிருந்தது.

கலாஷேத்ராவின் இந்த ரத்துக்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பின. இதற்கிடையில் முன்னதாக குறிப்பிடப்பட்டிருந்த அதே நாளில் அதாவது இன்று மாலை தரமணியில் உள்ள ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் வளாகத்தில் உள்ள அரங்கில் வரலாற்று ஆய்வாளர் ராஜ்மோகன் காந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் புத்தகத்தை வெளியிடவுள்ளதாக டி.எம் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

02 Feb 2020 12 PM

நியூஸியை ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?

இந்தியா - நியூஸிலாந்து இடையேயான ஐந்தாவது டி20 மவுண்ட் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் ஒரே ஒரு மாற்றமாக கேப்டன் கோலி ஓய்வு எடுக்கிறார். அவருக்கு பதிலாக ரோஹித் ஷர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். டாஸ் வென்ற ரோஹித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தப் போட்டியிலும் சஞ்சு சாம்சன் ஓப்பனிங் இறங்கவுள்ளார். ரோஹித் மூன்றாவது நபராக களமிறங்கவுள்ளார்.

02 Feb 2020 12 PM

2-வது ஏர் இந்தியா விமானம் வந்தது!

சீனாவின் கொரோனா வைரஸால் அதிகமான பாதிப்புக்குள்ளாகி இருக்கும் வுஹான் நகரில் இருந்து 323 இந்தியர்கள், 7 மாலத்தீவு நாட்டவர்களை அழைத்துக் கொண்டு 2-வது ஏர் இந்தியா விமானம் இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தது. 2-வது விமானத்தில் 6 இந்தியர்களை அனுமதிக்க சீன அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அவர்களுக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

முதல் விமானத்தில் 300 பேர் அழைத்து வரப்பட்ட நிலையில் இரண்டு விமானங்களிலும் சேர்த்து இதுவரை சீனாவில் இருந்து 654 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று மத்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் 100 இந்தியர்கள் வரை ஹூபே மாகாணத்தில் இருக்கிறார்கள் என்றும் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே தாயகம் திரும்பியவர்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை சார்பில் மனேசரில் உள்ள இந்திய ராணுவ மருத்துவ முகாமில் தங்கவைக்கப்பட்டு சிறப்பு மருத்துவச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 14 நாள்கள் அங்கே தங்கி சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கின்றனர்.

02 Feb 2020 10 AM

என்.ஐ.ஏ-வுக்கு மாற்றம்!

களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு என்.ஐ.ஏ-வுக்கு மாற்றப்பட்டுள்ளது. கன்னியாகுமரி தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது வழக்கு என்.ஐ.ஏ-வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபரான அப்துல் ஷமீம் ஆகியோருடன் சமீபத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

02 Feb 2020 9 AM

கேரளாவில் இரண்டாவது நபருக்கு கொரோனா!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் மற்ற நாடுகளுக்குப் பரவி வரும் நிலையில் கடந்த வாரம் இந்தியாவின் கேரளாவிலும் ஒரு பெண்ணுக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் சீனாவிலிருந்து வந்ததால் வைரஸ் தொற்று இருப்பதாக கூறப்பட்டது. அந்தப் பெண் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் குணமடைந்து வருவதாகக் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அதே கேரளாவில் மற்றொருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது நபரும் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்ததாக கூறப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேபோல் சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியைச் சேர்ந்த தவமணி மகன் அருண் வயது 27 என்பவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதால் திருச்சி அரசு மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு