Published:Updated:

உள்ளாட்சி வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு #ElectionUpdate #NowAtVikatan

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

02.01.2020 - இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

02 Jan 2020 8 AM

முன்னிலை நிலவரம்!

02 Jan 2020 8 AM

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 76.19 சதவிகிதம் வாக்குகளும் இரண்டாம் கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற தேர்தலில் 77.73 சதவிகிதம் வாக்குகளும் பதிவாகின.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் ஊராட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்குப் பெட்டிகள் திறக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் மொத்தமாக 315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதனால் அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

02 Jan 2020 8 AM

சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதம்!

வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி நடந்து வருகிறது. இதில் சில வாக்கு எண்ணிக்கை தொடங்க தாமதமாகியுள்ளது. பழனியில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம். இதுவரை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஏஜென்டுகள் வராததால் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள அறைகள் திறக்கப்படாமல் உள்ளன. இதேபோல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கமுதி ஒன்றியம் உள்ளிட்ட இடங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியத்துக்கான தபால் வாக்குகளை எண்ணுவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனைத்துக்கட்சி முகவர்கள் வாக்குவாதம் செய்து வருகின்றனர். மேலும், திருவள்ளூர், அறந்தாங்கி உள்ளிட்ட இடங்களிலும் வாக்கு எண்ணிக்கை தாமதமாகியுள்ளது.

02 Jan 2020 9 AM

தபால் வாக்குகள் நிராகரிப்பு!

சிவகங்கை, திருபுவனம் ஒன்றியத்தில் எண்ணப்பட்ட 60 வாக்குகளில் 58 செல்லாதவை எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல் நாமக்கல் திருச்செங்கோடு ஒன்றியத்தில் பதிவான 118 தபால் வாக்குகளில் 96 செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது. முறையான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறி தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

02 Jan 2020 11 AM

முரசொலி விவரம் - தி.மு.க மனு!

பஞ்சமி நிலத்தில் முரசொலி இடம் உள்ளது என்ற வழக்கை தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையம் விசாரித்து வரும் நிலையில் இந்த வழக்கை தாழ்த்தப்பட்ட ஆணையம் விசாரிக்க தடைக் கோரி தி.மு.க தரப்பில் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

02 Jan 2020 11 AM

நெல்லை கண்ணன் மீது மேலும் இரண்டு வழக்குகள்!

நெல்லை கண்ணன்
நெல்லை கண்ணன்

அமித் ஷா மற்றும் மோடி குறித்து அவதூறாகப் பேசி கைது செய்யப்பட்டுள்ள நெல்லை கண்ணன் மீது மேலும் 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலை மிரட்டல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் தற்போது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

02 Jan 2020 11 AM

வெளியேறிய அலுவலர்கள்! திண்டுக்கல்லில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்தி.மு.க முன்னிலை!

தற்போதைய நிலவரப்படி தி.மு.க ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முன்னிலை பெற்றுவருகிறது. இருப்பினும் அ.தி.மு.க-வும் தி.மு.க-வுக்கு நிகராக பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றுவருகிறது. சில இடங்களில் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றிபெற்றதாக அறிவிய்ப்பு வெளியாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் 9வது வார்டு தி.மு.க வேட்பாளர், ஓட்டப்பிடாரம் 1வது வார்டு தி.மு.க வேட்பாளர் வெற்றிப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தஞ்சை மதுக்கூர் ஒன்றிய அ.தி.மு.க வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தில் ஒரு வார்டிலும், மதுரை செல்லம்பட்டி ஒன்றியத்தில் வார்டிலும் அ.ம.மு.க வெற்றிபெற்றுள்ளது.

`சின்னத்தைக் கிழித்து வாக்காகச் செலுத்திய வாக்காளர்கள்!'- திண்டுக்கல்லில் `வடிவேலு பாணி'யில் காமெடி
02 Jan 2020 12 PM

பாதுகாப்பு பணியில் இருந்த SSI மரணம்!

உள்ளாட்சி வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு #ElectionUpdate #NowAtVikatan

திருவண்ணாமலை நகர காவல்நிலைத்திற்கு உட்பட்ட SSI முருகதாஸ் (55), தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு பாதுகாப்பு பணியில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். நேற்று இரவு திருவண்ணாமலை சண்முகா மேல்நிலைபள்ளியில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது, இரவு 11.30 மணி அளவில் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக சக காவலர் கணபதி  என்பவர் உதவியுடன் திருவண்ணாமலை பழைய GH க்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு முடியாத சூழ்நிலையில் மேல் சிகிச்சைக்கு திருவண்ணாமலை பெரிய மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்துள்ளார்.

02 Jan 2020 1 PM

ஆண்டிபட்டியில் மந்தமாக நடக்கும் பணி!

தூங்கிய பெண் அதிகாரி!
தூங்கிய பெண் அதிகாரி!

ஆண்டிபட்டி வாக்கு எண்ணும் மையத்தில் பெண் அதிகாரி ஒருவர் தூங்கிக்கொண்டிருக்கிறார். மாவட்டத்தில் உள்ள எட்டு ஒன்றியங்களில் ஒரே ஒரு ஊராட்சி மட்டுமே எண்ணி முடிக்கப்பட்டிருக்கிறது. மிகவும் மந்தமாக வாக்கு எண்ணும் பணி நடக்கிறது.

02 Jan 2020 1 PM

கொதிக்கும் ஸ்டாலின்!

`உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுகிறது. சில இடங்களில் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முறைகேடு குறித்துத் தேர்தல் ஆணையர் பழனிச்சாமியிடம் நியாயம் கேட்கச் செல்கிறேன்.

முதல்வர் பழனிசாமி சொல்வதைக் கேட்டுத் தேர்தல் ஆணையர் செயல்படுகிறார்" என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் தேர்தல் ஆணையர் பழனிச்சாமியைச் சந்திக்க இருக்கிறார் ஸ்டாலின்.

02 Jan 2020 2 PM

ஸ்டாலின் குற்றச்சாட்டு!

ஸ்டாலின்
ஸ்டாலின்

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையர் பழனிச்சாமியை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். அதன்பின் பேசியவர், ``உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க வெற்றியை நோக்கி முந்திக்கொண்டிருக்கிறது. ஏறக்குறைய 80 சதவிகித இடங்கைள திமுக கூட்டணி முன்னிலையில் இருக்கிறது. எடப்பாடியில் எண்ணி வைக்கப்பட்டுள்ள முடிவுகளை உடனே அறிவிக்க வேண்டும். எடப்பாடி, சங்கிரி, சேலம் கொளத்தூரில் திமுக வெற்றிபெற்றுவிட்டது. ஆனால் முடிவுகளை அறிவிக்கவில்லை. எடப்பாடியில் முதல்வரின் மைத்துனர் வெங்கடேசன் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார்.

அதேபோல் துணை முதல்வரின் போடி தொகுதியில் இதுவரை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. தி.மு.க வெற்றியைத் தடுக்க போலீஸ், அதிகாரிகள் ஆளுங்கட்சியுடன் சேர்ந்து சதி செய்கின்றன. இதுதொடர்பாக தேர்தல் ஆணையரிடம் முறையிட்டோம். எங்கள் முன்னாடியே அதிகாரிகளுக்கு போன் செய்து நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். வாக்கு எண்ணிக்கை முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம்" எனக் குற்றம் சாட்டினார்.

02 Jan 2020 3 PM

ஒன்றியக் குழு உறுப்பினரான திருநங்கை!

திருநங்கை ரியா
திருநங்கை ரியா

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் 2வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினருக்கு திமுக சார்பில் திருநங்கை ரியா போட்டியிட்டு இருந்தார். இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது ஆரம்பம் முதலே ரியா வெற்றி நோக்கி முன்னேறி கொண்டிருந்தார்.

இந்தநிலையில் தற்போது திருநங்கை ரியா 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக சார்பில் போட்டியிட்ட முதல் திருநங்கை ரியா தான். இந்த வெற்றியின் மூலம் இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் ரியா.

02 Jan 2020 3 PM

அ.ம.மு.க; நாம் தமிழர் நிலவரம்!

அ.ம.மு.க வெற்றி நிலவரம்
அ.ம.மு.க வெற்றி நிலவரம்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில், சில இடங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அ.ம.மு.க-வைச் சேர்ந்த 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர். ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான போட்டியில் 17 இடங்களில் அ.ம.மு.க வெற்றி பெற்றுள்ளது.

தற்போது வரையில் வெளியான தேர்தல் முடிவில், மாவட்ட, ஒன்றிய கவுன்சில் பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவில் நாம் தமிழர் கட்சி தொடர்பான வெற்றி அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகள் மற்றும் ஒன்றிய கவுன்சில் தேர்தலில் அ.ம.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளது தினகரன் தரப்பினரைக் கூடுதல் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

02 Jan 2020 4 PM

திண்டுக்கல்லில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் உள்ள அரசு அலுவலர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் சரியாக செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல், மதிய உணவும் தாமதமாக வழங்கப்படுவதாகக் கூறி அலுவலர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறினர். இதையடுத்து, அங்கு வாக்கு எண்ணும் பணி நிறுத்தப்பட்டிருக்கிறது.

- ஆர்.குமரேசன்

02 Jan 2020 4 PM

ஓ.பி.எஸ் ஊரில் அ.ம.மு.க பெண் வேட்பாளர் வெற்றி!

மருதையம்மாள்
மருதையம்மாள்

தேனி மாவட்டத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளம் ஒன்றியத்தின் 1வது வார்டில் போட்டியிட்ட அ.ம.மு.க பெண் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். பெரியகுளம் அருகே உள்ளது கீழவடகரை பஞ்சாயத்து. இதற்கு உட்பட்ட அழகர்சாமிபுரம், கரட்டூர் ஆகியவற்றை இணைத்து பெரியகுளம் ஒன்றியத்தின் 1வது வார்டாக அறிவிக்கப்பட்டது. இதில், அ.ம.மு.க சார்பில் மருதையம்மாள் என்பரும், அ.தி.மு.க சார்பில் மாரியம்மாள் என்பவரும் போட்டியிட்டனர். இதில், மருதையம்மாள் 1,700 வாக்குகள் பெற்று அ.தி.மு.க வேட்பாளரை 143 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றார்.

கீழவடகரையில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் தி.மு.க வேட்பாளர் செல்வராணி வெற்றிபெற்றுள்ளார். மொத்தம் 16 ஒன்றியக் கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், முதல் வார்டில், முதல் ஒன்றியக் கவுன்சிலராக அ.ம.மு.க பெண் வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார். துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரில் அ.ம.மு.க வேட்பாளர் வெற்றிபெற்றிருப்பது அ.ம.மு.க-வினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- எம்.கணேஷ்

02 Jan 2020 5 PM

மதுரை அருகே ஊராட்சித் தலைவரான 79 வயது மூதாட்டி!

வீரம்மாள்
வீரம்மாள்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் சுயேச்சையாக நின்ற 79 வயதான மூதாட்டி வீரம்மாள் வெற்றிபெற்றிருக்கிறார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை விட 193 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இவர் கடந்த 2 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், 3வது முயற்சியில் வென்றிருக்கிறார்.

02 Jan 2020 6 PM

வாக்கு எண்ணிக்கை நாளைவரை நீட்டிக்க வாய்ப்பு!

நாளை வரை வாக்கு எண்ணிக்கை தொடர வாய்ப்பு இருப்பதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தநிலையில், வாக்கு எண்ணிக்கை இரவு முழுவதும் நீடிக்கும் என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. வாக்கு எண்ணிக்கை நாளை வரை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அலுவலர்களை சுழற்சி முறையில் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

02 Jan 2020 6 PM

பெண் வேட்பாளரைத் தாக்கிய போலீஸார்!

மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி வாக்கு எண்ணிக்கையைத் தடுக்க முயன்ற பெண் வேட்பாளரை போலீஸார் தாக்கிய சம்பவம் திருச்சி அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி மாவட்டம், லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 வது வார்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 7 பேர் போட்டியிட்டனர். இதற்கான வாக்குப்பதிவு கடந்த 30 ம் தேதி அன்பில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த வாக்கு சாவடியில் மங்கம்மாள்புரம், சங்கமராஜபுரம், ஆதிகுடி ஆகிய கிராம மக்கள் வாக்களித்தனர். அப்போது மதிய நேரத்திற்குப் பிறகு வாக்குசீட்டில் வேட்பாளர் செல்வராணி போட்டியிட்ட சின்னம் மற்றும் பெயரும் இல்லை என்ற புகார் எழுந்தது.

வேட்பாளரைத் தாக்கிய போலீஸார்!
வேட்பாளரைத் தாக்கிய போலீஸார்!

இதுகுறித்து செல்வராணி அப்போதே லால்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோரிடம் முறையிட்டதால், அதிகாரிகள் 2 மணி நேரமாக வாக்குப்பதிவை நிறுத்தி வைத்தனர். அதன்பிறகு பாதிக்கப்பட்ட வேட்பாளரிடம் எழுத்துபூர்வமாக புகார் பெற்ற அதிகாரிகள் மீண்டும் வாக்குபதிவினை நடத்தினர். பாதிக்கப்பட்ட வேட்பாளர் செல்வராணி, மறுவாக்குபதிவு நடத்திட திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் புகார் மனு அளித்தார்.

இந்தநிலையில், லால்குடி குமுளூர் வேளாண்மைப் பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையை, செல்வராணி தடுத்து நிறுத்தினார். வாக்கு மையத்திற்குள் வந்த போலீஸார் பெண் வேட்பாளரைத் தடுத்து வாக்கு மையத்தினை விட்டு வெறியேற்றினர். அப்போது, அவரை போலீஸார் முற்றுகையிட்டு தாக்கினர். அவர் கைது செய்யப்படலாம் என்பதால் பரபரப்பு நிலவுகிறது.

- சி.ய.ஆனந்தகுமார்

02 Jan 2020 8 PM

ஒருவர் வெற்றியைக் கூட அறிவிக்காதது ஏன்?

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றியம், மற்றும் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் 5.45 மணி ஆகியும், தலைவர், ஒன்றியக் கவுன்சிலர், வார்டு உறுப்பினர் என ஒருவருடைய வெற்றி நிலவரங்களையும் அறிவிப்பு செய்யாமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வந்தனர்.

திருவண்னாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி
திருவண்னாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி
கா.முரளி

இந்தநிலையில், திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி, `ஏன் இவ்வளவு மெத்தனமாக செயல்படுகிறீர்கள். எல்லா வசதியும் செய்துகொடுத்தும் இதுபோன்று மெத்தனம் காட்டுவது வருத்தம் அளிக்கிறது' என்று அதிகாரிகளிடம் கடிந்துகொண்டார். இந்தநிலையில் தற்போது 13 ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிமன்றத் தலைவர்கள் வெற்றி அறிவிப்பை வெளியிட்டனர் அதிகாரிகள்.

- கா.முரளி

02 Jan 2020 8 PM

காலை உணவே 11 மணிக்கு மேலதானா?

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட ஊழியர்கள் பலருக்கு உணவு கிடைக்காததால் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் வாக்குஎண்ணிக்கை பணியில் 1,100 பேர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் ஊட்டி ஃபிங்கர் போஸ்ட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இன்று காலை 5.30 மணிக்கு தேர்தல் பணியாளர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்தனர். இவர்களுக்கு தேநீர், உணவு என எதுவும் முறையாக ஏற்பாடு செய்யப்படவில்லை. காலை 11 மணி வரை பணியில் ஈடுபட்டிருந்த பலரும் உணவுக்காகக் காத்திருந்தனர். ஒரு கட்டத்தில் பலரும் மையத்தை விட்டு வெளியில் வந்து பொறுப்பாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அதற்கு பிறகு அவசரகதியில் உணவு வரவழைக்கப்பட்டு 11 மணிக்கு மேல் வழங்கப்பட்டது. இதனால் ஊழியர்கள் அதிருப்தியடைந்தனர்.

- சதீஸ் ராமசாமி

02 Jan 2020 8 PM

ஒன்றியக் கவுன்சிலர் தேர்தலில் 23வயது இளைஞர் வெற்றி!

முத்துச்செல்வன்
முத்துச்செல்வன்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 3வது வார்டு ஒன்றியக் கவுன்சிலராக அ.தி.மு.க சார்பில் களம்கண்ட 23 வயது வேட்பாளர் முத்துச்செல்வன் வெற்றிபெற்றார்.

- இ.கார்த்திகேயன்

02 Jan 2020 9 PM

10 வாக்குகள் பெற்று ஊராட்சித் தலைவரான பெண்!

ராஜேஸ்வரி
ராஜேஸ்வரி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிச்சிவிளை ஊராட்சியில், மொத்தமுள்ள 785 வாக்குகளில் 6 வாக்குகள் மட்டுமே பட்டியலினத்தவர்களின் வாக்குகள். இதில், ஊராட்சி மன்ற தலைவர் பதவி பட்டியலின பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டதால் ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து 13 பேர் மட்டுமே வாக்களித்தனர். இதில், போட்டியிட்ட இருவரில் 10 வாக்குகள் பெற்று ராஜேஸ்வரி வெற்றி பெற்றுள்ளார்.

_ இ.கார்த்திகேயன்

02 Jan 2020 10 PM

தி.மு.க திட்டமிட்டு தாமதப்படுத்துகிறது!

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதை தி.மு.க திட்டமிட்டு தாமதப்படுத்துவதாக அ.தி.மு.க தரப்பில் பொன்னையன் உள்ளிட்டோர் புகார் கொடுத்திருக்கிறார். மாநில தேர்தல் ஆணையத்தில் அவர்கள் புகார் அளித்திருக்கிறார்கள்.

02 Jan 2020 11 PM

தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்கிறது என்ற உறுதியை அறிக்கையாக நளை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

தேர்தல் முடிவுகள் தாமதமாக அறிவிக்கப்படுவதாக தி.மு.க சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணா தலைமையிலான அமர்வு அவசர வழக்காக விசாரித்தது. அப்போது, வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படுவதால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், தி.மு.க தரப்பில் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதுடன், அதிகாரிகளே முறைகேட்டில் ஈடுபடுவதாக வாதிட்டனர். மேலும், வெற்றிபெற்ற தி.மு.க வேட்பாளர்களுக்கு இதுவரை சான்றிதழ்களே வழங்கப்படவில்லை என்றும் வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரம் இல்லாத நபர்களை உடனடியாக வெளியேற்ற உத்தரவிட வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்கிறது என்ற உறுதியை அறிக்கையாகத் தாக்கல் செய்ய மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருக்கிறது. மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு பராமரிக்கவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு