Published:Updated:

``மகளுக்கு சிறுநீர் பால் மாதிரி வருது!” - அரிய பிரச்னையால் கண்ணீரில் தவிக்கும் ஏழைக் குடும்பம்

மோனிஷாவுடன் வசந்தி

கண்ணீரை அடக்க முடியாமல், தடுமாற்றத்துடன் பேசுகிறார் வசந்தி. இவரின் மகள் மோனிஷாவுக்கு மூன்றரை வயது.

``மகளுக்கு சிறுநீர் பால் மாதிரி வருது!” - அரிய பிரச்னையால் கண்ணீரில் தவிக்கும் ஏழைக் குடும்பம்

கண்ணீரை அடக்க முடியாமல், தடுமாற்றத்துடன் பேசுகிறார் வசந்தி. இவரின் மகள் மோனிஷாவுக்கு மூன்றரை வயது.

Published:Updated:
மோனிஷாவுடன் வசந்தி

``மோனிஷா எங்களுக்கு ரொம்பவே ஸ்பெஷலான குழந்தை. பிறந்த பிறகு அவகிட்ட இருந்து ஒவ்வொரு ரியாக்ஷனுமே தாமதமாதான் வெளிப்பட்டுச்சு. ஆனா, சரியாகிடும்னுதான் நம்பினோம். ஆறு மாசக் குழந்தையா இருந்தப்போ வழக்கம்போல அவளை ஒருநாள் குளிப்பாட்டினேன். வெந்நீர்ல பச்சத் தண்ணியைச் சேர்க்கறதுக்குள்ள, குழந்தையோட வலது கால் வெந்நீர்ல பட்டுடுச்சு. பாதம் ரொம்பவே வெந்துபோயிடுச்சு. பதறிப்போய் அவளைத் தூக்கிக் கால்ல துணியை வெச்சு துவட்டினேன். பாதத்துல இருந்த தோல் பகுதி அப்படியே வந்திடுச்சு. என்ன பண்றதுனு தெரியாம கண்ணீர் விட்டு கதறி அழுதேன். ஆனா, பொண்ணு அழவே இல்ல. அமைதியாவே இருந்தா. அப்போதான் குழந்தைக்கு ஏதோ பிரச்னைன்னு புரிஞ்சது”

- கண்ணீரை அடக்க முடியாமல், தடுமாற்றத்துடன் பேசுகிறார் வசந்தி. இவரின் மகள் மோனிஷாவுக்கு மூன்றரை வயது.

அம்சமான இந்தக் குழந்தையை, முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட அரிதான பாதிப்பு ஒன்று (Lumbar Meningomyelocele) வாட்டுகிறது. தொடைக்குக் கீழே இரண்டு கால்களிலும் உணர்வுகள் இல்லாத மோனிஷாவுக்கு, சிறுநீர் கழிப்பதிலும் விவரிக்க இயலாத கஷ்டங்கள். இதனால், சிரமங்களை விவரிக்கப் பக்குவமில்லாமல் திணறுகிறாள் மோனிஷா. மகள் எதிர்கொள்ளும் வேதனைகளைப் பார்த்துக் கண்ணீரில் தினமும் உழன்று தவிக்கிறார் வசந்தி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``பூர்வீகம் கள்ளக்குறிச்சி மாவட்டம் நிறைமதி கிராமம். கணவர் ராஜசேகர் சுவர்ல பெயின்ட் அடிக்கிற கூலி வேலைக்குப் போறாரு. நாங்க ரெண்டு பேருமே பெரிசா படிக்கல. முதல் பொண்ணு நாலாவது படிக்கிறா. ரெண்டாவது பொண்ணு மோனிஷா புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில பிறந்தா. அப்பவே பொண்ணுக்கு முதுகுத் தண்டுவடத்துல ஒரு கட்டி இருந்துச்சு. நார்மலா படுக்க முடியாம சிரமப்பட்டா. `நரம்பு சம்பந்தமான கட்டி. ரொம்பவே சிக்கலான பாதிப்பு’ன்னு டாக்டர்கள் சொன்னாங்க. அப்புறம் உடனே சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில சேர்த்தோம்.

ஆபரேஷன் பண்ணி கட்டியை நீக்கினாங்க. அதுக்குப் பிறகு குழந்தையால இயல்பா படுக்க முடிஞ்சது. ஆனா, புதுசா சில பிரச்னைகள் இருப்பது தெரிஞ்சு அதிர்ந்தோம். `குழந்தைக்கு யூரின் போறது கன்ட்ரோல்ல இல்லாம இருக்கும். தொடைக்குக் கீழ உணர்வுகள் இருக்காது. உங்க குழந்தையால இயல்பான மனிதரைப்போல வாழ முடியாது. இதுக்கெல்லாம் நிரந்தர தீர்வுகளும் இல்ல. வாழும் காலத்தையும் கணிக்க முடியாது. குழந்தை உயிர்வாழுற வரைக்கும் கவனமா பார்த்துக்கோங்க’னு டாக்டர்கள் சொன்ன தகவல், எங்க தலையில இடியா இறங்குச்சு. அன்னிக்கு பறிபோன எங்க நிம்மதி, இப்பவரை மீள முடியாமதான் தவிக்கிறோம்.

குழந்தைக்கு யூரின் சொட்டு சொட்டா வந்துட்டே இருக்கும். கைக்குழந்தையில பொண்ணோட பிறப்புறுப்புல வெள்ளைத்துணி அல்லது டயப்பரை அடிக்கடி மாட்டிவிட்டுடுவேன். இதனால, இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு அந்த இடமே வெந்துபோன மாதிரி ஆகிடும். அடிக்கடி காய்ச்சலும் வந்திடும். குழந்தை துடிக்கிறதைப் பார்த்து தினம் தினம் எங்களுக்கு வேதனைதான்” - உடைந்து அழுகிறார் வசந்தி. தாயைக் கண்ணிமைக்காமல் பார்க்கும் மோனிஷாவின் முகமும் சட்டென வாடுகிறது.

மோனிஷாவுடன் வசந்தி
மோனிஷாவுடன் வசந்தி

``தவழ்றது, பேசுறது, சிரிக்கிறதுனு குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியும் கொஞ்சம் தாமதமாச்சு. கூடவே, யூரினரி இன்ஃபெக்ஷன் நாளுக்கு நாள் அதிகரிச்சது. குழந்தையோட சிறுநீர் குழாய்ல அசுத்தமான தண்ணி தேங்கி, சிறுநீரக வீக்க பாதிப்பும் ஏற்பட்டுச்சு. அதன் விளைவா சிறுநீர் வெள்ளை நிறத்துல பால் மாதிரி வரத் தொடங்குச்சு. நார்மலா வர்ற சிறுநீர், ஒரு மாசத்துக்குப் பிறகு வெள்ளை நிறத்துல வர ஆரம்பிக்கும். உடனே எழும்பூர் சில்ட்ரன்ஸ் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப்போவேன்.

அங்க 10 – 15 நாள்கள் வரை குழந்தைக்குச் சிகிச்சை நடக்கும். மறுபடியும் சிறுநீர் நார்மல் கலர்ல வரும். அப்புறம் வீட்டுக்கு வந்திடுவோம். இப்படியே ஒரு வருஷமா ஆஸ்பத்திரிக்குப் போய்கிட்டேதான் இருக்கோம். இந்த நிலையில சிறுநீர் கன்ட்ரோல்ல இல்லாம இருக்கிறதால, குழந்தையின் பிறப்புறுப்புல இன்ஃபெக்ஷன் அதிகளவுல ஏற்பட ஆரம்பிச்சது. அதனால, எந்நேரமும் குழந்தையோட பிறப்புறுப்புல சிறுநீர்ப்பை மாட்டிவிட்டிருவேன். பெரியவங்களுக்கே இது கொஞ்சம் சிரமமாதான் இருக்கும். அப்போ குழந்தைக்கு எப்படி இருக்கும்னு யோசிச்சுக்கோங்க.

மோனிஷாவுடன் வசந்தி
மோனிஷாவுடன் வசந்தி

உறுத்திட்டே இருக்குனு பொண்ணு அடிக்கடி டியூபைக் கழட்டி வீசிடுவா. உடலையும் யூரின் டியூபையும் இணைக்க உதவுற கத்தீட்டரை ஒருமுறை எடுத்துட்டா, அப்புறம் புது கத்தீட்டரைத்தான் பயன்படுத்தணும். எங்க நிலைமைக்கு நூறு ரூபாய்கூட பெரிய தொகைதான். அதனால, யூரின் டியூபை குழந்தையோட தொடையில வெச்சு டேப் போட்டு ஒட்டி விட்டுடுவேன். இப்போ கொஞ்சம் அமைதியா இருக்கா. ஆனா, யூரின் டியூபோடு குழந்தையை வெளியில கூட்டிட்டுப்போறதுதான் ரொம்பவே சங்கடமாவும் சிரமமாவும் இருக்கும்.

மூட்டுக்குக் கீழ குழந்தையின் கால்கள் ரொம்பவே தளர்வாவும் கணுக்கால் கோணலாவும் இருக்கும். அவளால நடக்கவோ, சுயமா நிக்கவோ முடியாது. ஓரளவுக்குத்தான் அவளால விளையாட முடியும். இப்பவரை குழந்தையை இடுப்புல வெச்சுகிட்டுதான் வெளியிடங்களுக்குக் கூட்டிட்டுப்போறேன். தண்டுவடத்துல ஏற்பட்ட அந்தக் கட்டிதான் இந்தப் பிரச்னைக்குக் காரணமாம். இதுக்காக ஏற்கெனவே ஒரு ஆபரேஷன் முடிஞ்ச நிலையில, தண்டுவடத்துல இன்னும் ரெண்டு ஆபரேஷன் செய்யணும்னு சொல்லியிருக்காங்க. அதுக்குப் பிறகும் குழந்தையால உறுதியா நடக்க முடியும்ங்கிறது எந்த உத்தரவாதமும் இல்ல.

மோனிஷா
மோனிஷா

கிட்னி வீக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தினதால, அடிக்கடி வயித்துவலி வந்து பொண்ணு அப்படியே சுருண்டு படுத்துடுவா. பார்க்கவே கஷ்டமா இருக்கும். தவிர, குழந்தைக்கு ரத்த அழுத்த பாதிப்பும் இருக்கு. எல்லா பாதிப்புக்குமே குழந்தைக்குத் தொடர்ந்து மருந்து மாத்திரைகள் கொடுக்கிறோம். குழந்தையின் மூளை வளர்ச்சி குறைவாதான் இருக்கும்னு டாக்டர்கள் சொல்லியிருந்தாங்க. ஆனா, நல்லாவே பேசுறா. நம்ம சொல்றதுக்குச் சரியா ரியாக்ட் பண்ணுறா. இந்த விஷயத்துல மட்டும்தான் கொஞ்சம் ஆறுதல் கிடைக்குது.

குழந்தையோட எடையும், உடல் வளர்ச்சியும் குறைவாதான் இருக்கு. குழந்தையோட வாழ்நாளுக்கு உத்திரவாதம் இல்ல. இதை மட்டும்தான் இன்னும் மனதளவுல எங்களால ஏத்துக்க முடியல. பொண்ணு இப்படியே வாழ்ந்தாக்கூட போதும். என் வாழ்நாள் முழுக்க குழந்தையைப் பத்திரமா பாத்துப்பேன். எந்நேரமும் பக்கத்துலயே இருந்து குழந்தையைக் கவனிக்க வேண்டியிருக்கு. அதனால, என்னால வேலைக்குப் போக முடியல. வீட்டுக்காரர் ஒருத்தர் வருமானமும் போதுமானதா இல்ல. இந்த நிலைமையில குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்புறதைப் பத்தி யோசிச்சாலே பயமா இருக்கு.

மோனிஷா
மோனிஷா

சராசரியா மாசத்துக்கு ரெண்டு கத்தீட்டரை மாட்டிவிடுறேன். இதுக்கு 600 ரூபாய் செலவாகுது. மாசத்துக்கு யூரின் டியூப் நாலு தேவைப்படுது. இதுக்கும் மாசத்துக்கு 600 ரூபாய் வரை ஆகுது. இது இல்லாம குழந்தைக்கு அடிக்கடி டயப்பர் மாத்திவிடணும். இதுக்கே மாசத்துக்கு 2,500 ரூபாய் வரை செலவாகுது. இந்தச் செலவுகளுக்கே மாசம் நாலாயிரம் ரூபாய் தேவைப்படுற நிலையில, கடன் வாங்கித்தான் சமாளிக்கிறோம். எவ்வளவு கஷ்டப்பட்டாவது மகளை நீண்டகாலம் வாழ வைக்க ஆசைப்படுறேன். ஆனா, பணப் பிரச்னைதான் தினமும் வாட்டுது. இதுக்கு யாராச்சும் உதவி செஞ்சா புண்ணியமா போகும்”

- கைக்கூப்பி வேண்டுகோள் விடும் வசந்தியின் முகம் கண்ணீரில் சிவக்கிறது. விவரம் புரியாவிட்டாலும், தாயின் தவிப்பைக் கண்டு மோனிஷாவின் முகமும் வாடுகிறது.

Note:

மோனிஷாவின் மருத்துவத் தேவைக்காக, அவளது பெற்றோர் பிறரின் உதவியை எதிர்பார்க்கின்றனர். இவர்களுக்கு உதவ முன்வரும் வாசகர்கள், `help@vikatan.com’ என்ற மெயில் ஐ.டி-க்கு தொடர்புகொண்டு தாங்கள் செய்ய விரும்பும் உதவிகள் குறித்துத் தெரிவிக்கலாம். இவர்கள் குறித்த விவரங்கள் உடனடியாகத் தரப்படும்.