Published:Updated:

தமிழகத்தில் குறையாத தொற்று ... இன்று 161 பேருக்கு கொரோனா உறுதி! #NowAtVikatan

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

30.4.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

30 Apr 2020 6 PM

இன்று 161 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால், பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்துள்ளது. இதில், சென்னையில் மட்டும் 138 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 48 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1258 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 27 ஆக உள்ளது.

30 Apr 2020 5 PM

24 மணி நேரத்தில் 1718 பேருக்கு கொரோனா தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1718 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இதனால், இங்கு பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 33,050 ஆக உஅயர்ந்துள்ளது. மேலும், வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வருபவர்களின் விகிதம் 25.19 ஆக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

30 Apr 2020 5 PM

ஊரடங்கை முழுமையாக தளர்த்த வாய்ப்பு இல்லை!

இந்தியா முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு முடிய உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து பல மாநில முதல்வர்களும் ஆலோசனை நடத்தி வருகின்றன. மே 2-ம் தேதி நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்திலும் இதுதொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மருத்துவ நிபுணர் குழுவினர் முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு மருத்துவக் குழு செய்தியாளர் சந்தித்தனர். அப்போது, தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக தளர்த்த தற்போது வாய்ப்பு இல்லை என்றும் படிப்படியாகதான் தளர்த்த முடியும் என்றும் கூறியுள்ளனர்

30 Apr 2020 1 PM

`மத்திய பா.ஜ.க அரசுக்கு சாமரம் வீச வேண்டாம்’ - துரைமுருகன் கண்டனம்

`காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்டிட நடவடிக்கை எடுப்பதற்குப் பதில், தனது பதவியும், தன் அரசும் நிலைத்தால் போதும் என்று, காவிரி நீர் உரிமையைப் பறிகொடுக்க முதலமைச்சர், மத்திய பா.ஜ.க. அரசுக்கு சாமரம் வீச வேண்டாம்' எனத் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

துரைமுருகன்
துரைமுருகன்

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம், ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது, ஒரு நிர்வாக நடைமுறை தொடர்பான நடவடிக்கை என்றும் விவசாயிகளின் நலன்களுக்கு இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்றும் பூசி மெழுகி, பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையைக் காணும்போது, நெஞ்சில் 1,000 யானைகள் மிதிப்பதைப் போன்று ஒரு அழுத்தம் ஏற்படுவதாகக் குறிப்பிட்ட துரைமுருகன், மத்திய அரசின் இந்த முடிவை முதலமைச்சர் எதிர்க்க வேண்டும் என்றும், தமிழக அமைச்சரவையைக் கூட்டி மத்திய அரசின் அறிவிப்பைத் திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

30 Apr 2020 11 AM

மத்திய, மாநில அரசுகளுக்கு ஸ்டாலின் கோரிக்கை!

ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை மத்திய - மாநில அரசுகள் சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் எனத் தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கொரோனா நோய்த் தொற்று பரவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட இரண்டாவது ஊரடங்கு காலம், மே 3-ம் தேதியோடு முடிவடைகிற நிலையில், மேலும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, நீக்கப்படுமா அல்லது படிப்படியாகத் தளர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் குழப்பமும் மக்கள் மனதில் நிலவுகிறது. கொரோனா பரவலைத் தடுத்து, மக்களைப் பாதுகாப்பதற்காக, மத்திய - மாநில அரசுகள் எடுக்கின்ற எந்த முடிவாக இருந்தாலும் அதற்குக் கட்டுப்பட்டு சமூக ஒழுங்கைத் தவறாமல் கடைப்பிடித்து ஒத்துழைக்க வேண்டியது பொதுமக்களின் தலையாய கடமையாகும்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அதேநேரத்தில், ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தளர்த்துவது குறித்து கடைசி நேரத்தில் அறிவித்து பதற்றத்தை அதிகரித்திடாமல், தக்க முடிவெடுத்து முன்கூட்டியே அறிவித்தால், பொதுமக்களிடம் தேவையற்ற குழப்பத்தையும் பதற்றத்தையும் பெருமளவுக்குத் தவிர்க்க முடியும். 35 நாட்களுக்கும் மேலாக வீட்டிலேயே முடங்கி இருக்கும் மக்களின் மனநிலையையும் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, மத்திய மாநில அரசுகள் உரிய முடிவெடுத்து சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

30 Apr 2020 9 AM

பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் மரணம்

இரண்டு ஆண்டுகள் புற்றுநோயுடன் போராடிவந்த பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் மரணமடைந்தார். அவருக்கு வயது 67.

ரிஷி கபூர்
ரிஷி கபூர்

பாலிவுட்டின் மூத்த நடிகரான ரிஷிகபூர், கடந்த 2018-ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக நியூயார்க் சென்ற அவர், கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியா திரும்பினார். அதன்பின்னர் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த அவருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்தத் தகவலை பாலிவுட்டின் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் ட்விட்டரில் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

அரியவகை புற்றுநோய், 6 கீமோ, வாழ்வதற்கான சிறிய வாய்ப்பு... புற்றிநோயிலிருந்து மீண்ட நடிகர் இர்ஃபான்!
அடுத்த கட்டுரைக்கு