Published:Updated:

`2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தேர்தலில் போட்டியிடத் தடை!’ - உ.பி அரசு முடிவு #NowAtVikatan

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

30-08-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

30 Aug 2020 5 PM

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தேர்தலில் போட்டியிடத் தடை!

இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க உத்தரப்பிரதேச அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேசத்தை ஆளும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு இதற்காக பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. நாட்டின் மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரதேசத்தில் சிறுபான்மையின மக்களின் உரிமையைப் பறிக்கும் வகையிலேயே இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாகக் குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

30 Aug 2020 1 PM

தமிழகத்தில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி; இ-பாஸ் ரத்து?

மத்திய அரசு `அன்லாக் 4.0’ என்ற பெயரில் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்திருக்கிறது. இந்தநிலையில், தமிழகத்தில் ஊரடங்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகிவிருக்கிறது.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நாளையுடன் (ஆகஸ்ட் 31) முடிவடையவிருக்கும் நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவக்குழுவினரோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக தமிழக அரசு இன்றோ அல்லது நாளையோ அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என்று தெரிகிறது.

முழு ஊரடங்கு
முழு ஊரடங்கு

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்க அரசு முடிவெடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதேநேரம், பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிப்பதுடன், தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. செப்டம்பர் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழகத்தில் மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதி வழங்கப்படாது என்றே சொல்கிறார்கள். அதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளில் விதிக்கப்படும் தளர்வுகளற்ற ஊரடங்கும் நீக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

`நோ குவாரன்டீன்; இ-பாஸ் வேண்டாம்!' - கட்டுப்பாடுகளை முழுமையாகத் தளர்த்திய கர்நாடகா
30 Aug 2020 1 PM

தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற ஊரடங்கு!

கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், `ஆகஸ்ட் மாதத்தின் ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்’ என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஊரடங்கு
ஊரடங்கு

அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலாகியிருக்கிறது. மருந்துப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் தவிர மற்றவற்றுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் சாலைகள் போக்குவரத்தின்றி வெறிச்சோடின.

30 Aug 2020 10 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 35,42,733-ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 78,761 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

corona
corona

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 948 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 63,498-ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,13,933-ஆக உயர்ந்திருக்கிறது.

`கொரோனா இல்லாத இடத்தில் ஃபீவர் கேம்ப்பா?' - கலெக்டர்கள் கூட்டத்தில் கொதித்த முதல்வர்
அடுத்த கட்டுரைக்கு