7.5% இட ஒதுக்கீடு மசோதா: சொலிசிட்டர் ஜெனரலின் பதில் கடிதம்... ஒப்புதல் அளித்த ஆளுநர்! #NowAtVikatan

30-10-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!
7.5% இட ஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதல்!
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5%இட ஒதுக்கீடுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக அரசு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி 45 நாள்கள் ஆன நிலையில், நேற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனை தொடர்ந்து இன்று ஆளுநர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்த மசோதா தொடர்பாக மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்டிருந்ததாகவும், அவரின் பதில் கடிதம் நேற்று கிடைத்ததன் காரணமாக, இன்று ஆளுநர் ஒப்புதல் வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளுநர் தாமதத்தால் அரசாணை!
7.5 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் தாமதித்துவருவதால் தமிழக அரசு அரசாணை வெளியிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் குருபூஜையை ஒட்டி, தேவர் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் தாமதித்துவருவதால் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த விவகாரத்தில் சிலர் செய்யும் அரசியல் எடுபடாது’’ என்றார்.