Published:Updated:

“ப்ளீஸ் விட்ருங்க!” - 15 நாள்கள்... 30 போக்சோ வழக்குகள் - அச்சமூட்டும் தமிழகம்!

அச்சமூட்டும் தமிழகம்!
பிரீமியம் ஸ்டோரி
அச்சமூட்டும் தமிழகம்!

நான் சொல்றதைச் செய்... இல்லைன்னா, உனக்கு, ஹால் டிக்கெட் கொடுக்க மாட்டேன். நீ ஃபெயில் ஆகிடுவே” என மிரட்டி, செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்து அனுப்பச் சொல்லியிருக்கிறார்;

“ப்ளீஸ் விட்ருங்க!” - 15 நாள்கள்... 30 போக்சோ வழக்குகள் - அச்சமூட்டும் தமிழகம்!

நான் சொல்றதைச் செய்... இல்லைன்னா, உனக்கு, ஹால் டிக்கெட் கொடுக்க மாட்டேன். நீ ஃபெயில் ஆகிடுவே” என மிரட்டி, செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்து அனுப்பச் சொல்லியிருக்கிறார்;

Published:Updated:
அச்சமூட்டும் தமிழகம்!
பிரீமியம் ஸ்டோரி
அச்சமூட்டும் தமிழகம்!

பெண் பிள்ளையைப் பெற்றவர்கள் ‘வயிற்றில் நெருப்பைச் சுமந்துகொண்டிருக்கிறோம்’ என்று சொல்லும் உணர்ச்சியும் உவமையும் பொய்யில்லை. அன்றாடம் நம் சமூகத்தில் பெண்களுக்கு குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் குற்றங்களின் கொடூரங்களும், அதன் எண்ணிக்கையும் அதை உறுதிப்படுத்துகின்றன!

சமீபத்தில், சென்னை பெரும்பாக்கம் தனியார் பள்ளி ஒன்றில், ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, பள்ளியின் பியூன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துவந்திருக்கிறார். இதனால் மிரண்டுபோன சிறுமி, ‘நான் ஸ்கூலுக்குப் போகமாட்டேன். அவர் என்னைக் கட்டிப்பிடித்து ஏதேதோ செய்கிறார்’ என்று சொல்லி அழுதபோதுதான் அந்தக் குழந்தையின் பெற்றோருக்கு விபரீதம் புரிந்திருக்கிறது. இந்தக் கொடூரம் குறித்துக் கேட்டபோது, அந்தப் பள்ளி நிர்வாகம் சரிவர பதில் சொல்லாத நிலையில், பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

போலீஸ் விசாரணையைத் தொடர்ந்து, அந்த பியூன் போக்சோவில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இப்படியாக, தமிழ்நாடு முழுக்க உறவினர்களாலும், தெரிந்தவர்களாலும், பழகியவர்களாலும் ஆயிரக்கணக்கான சிறுமிகள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகிவருகிறார்கள். குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவது பெற்றோர் கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

“குழந்தைகளைப் பாதுகாப்பது ஒட்டுமொத்தச் சமூகத்தின் கூட்டுச் செயல்பாடாகும். அவர்களுக்கு எதிரான பாலியல் – உளவியல் துன்புறுத்தல்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும். புன்னகை பூத்துக் குதூகலிக்கவேண்டிய குழந்தைகளை, கசியும் கண்ணீரோடு பார்க்கும் நிலையைத் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது” என்று சில வாரங்களுக்கு முன்புதான் பேசியிருந்தார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், கடந்த 15 நாள்களில் மட்டுமே 30 போக்சோ வழக்குகள் தமிழ்நாட்டில் பதிவாகியிருக்கின்றன. பெரும் பிரச்னையாக உருவெடுக்கும் இந்தக் குற்றங்களையும், அதன் பின்னணிகளையும் பார்க்கலாம்...

“ப்ளீஸ் விட்ருங்க!” - 15 நாள்கள்... 30 போக்சோ வழக்குகள் - அச்சமூட்டும் தமிழகம்!

“ப்ளீஸ் விட்ருங்க...” - கெஞ்சியும் விடாத கொடூரர்கள்!

தேனி மாவட்டம், எரசக்கநாயக்கனூர் பகுதியில், 3-ம் வகுப்பு படிக்கும் ஏழு வயது சிறுமிக்கு நேர்ந்த சம்பவம் கல்நெஞ்சையும் உலுக்கிவிடும். கடந்த ஜூலை 3-ம் தேதி, அங்கன்வாடி மைய வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. திடீரென அவளின் அலறல் சத்தம்... தீ வைக்கப்பட்டு எரிந்த நிலையில் துடித்துக்கொண்டிருந்த சிறுமியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். போலீஸ் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்ற இளைஞன், கஞ்சா போதையில் அந்தச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்திருக்கிறது. அச்சத்தில் அந்தச் சிறுமி கூச்சலிட்டபோது, அவளின் ஆடையில் தீ வைத்துவிட்டுத் தப்பியிருக்கிறான் விஜயகுமார். போக்சோ சட்டத்தின் கீழ் அவன் கைதுசெய்யப்பட்டிருக்கிறான். 45 சதவிகிதத் தீக்காயங்களுடன் சிறுமி தற்போது சிகிச்சையில் இருக்கிறாள்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி, தன்னுடன் பள்ளியில் படித்த ஒரு மாணவனின் பிறந்தநாள் விழாவுக்குச் சென்றிருக்கிறார். அப்போது, அந்த மாணவருடன் புகைப்படம் எடுத்திருக்கிறார். “வேற சாதி மாணவனோட நீ போட்டோ எடுத்திருக்கே. உன் வீட்டுல சொல்லிவிடுவேன்” என உடன் படிக்கும் மாணவன் அந்தச் சிறுமியை மிரட்டி, “இந்த போட்டோவை உன் வீட்டுல காட்டாம இருக்கணும்னா... என் வீட்டுக்கு நான் சொல்ற டைமுக்கு வா” என்றிருக்கிறான்.

பயந்துபோன மாணவி, கடந்த ஜூன் 1-ம் தேதி, அந்த மாணவன் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். வீட்டில், மேலும் இரண்டு மாணவர்கள் இருந்துள்ளனர். அவர்கள் பாலியல் ரீதியாக அத்துமீற, அதிர்ந்துபோயிருக்கிறார் மாணவி. “ப்ளீஸ் என்னை விட்ருங்க... என் வாழ்க்கையைச் சீரழிச்சுறாதீங்க... நான் உங்க ஃபிரெண்டுடா...” என்று எவ்வளவோ கெஞ்சியும், காதிலேயே வாங்கிக்கொள்ளாத அந்த வக்கிரமான மாணவர்கள், மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். அதை வீடியோவும் எடுத்து மற்றொரு மாணவனுக்கு அனுப்ப, அவனும் அந்த மாணவியை மிரட்டியிருக்கிறான். இந்த மிரட்டல் அதிகரிக்கவே, ஆவினங்குடி காவல்துறையில் புகாரளிக்கப்பட்டு, அந்த நான்கு மாணவர்களும் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கீதா ஜீவன்
கீதா ஜீவன்

“சொல்றதைச் செய்... இல்லைன்னா, ஹால் டிக்கெட் கிடையாது!”

இதே போன்ற கூட்டுப் பாலியல் வன்கொடுமை திருச்சியிலும் அரங்கேறியிருக்கிறது. திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அந்தப் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களுடன் நட்பாகப் பழகிவந்திருக்கிறார். அந்த இளைஞர்களுடன் செல்போனில் கேம் விளையாடுவது, படம் பார்ப்பது என வெகுளியாகப் பழகியிருக்கிறார். சமயம் பார்த்து வீட்டில் ஆளில்லாத நேரத்தில், அந்தச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள், அதை வீடியோவாகவும் பதிவுசெய்து வைத்துக்கொண்டு மிரட்டியுள்ளனர். திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகாரளிக்க, சம்பந்தப்பட்ட இரண்டு இளைஞர்களும் போக்சோவில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தில் நடந்த சம்பவம் கொடூரத்தின் உச்சம். அந்தப் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, பள்ளியின் தமிழாசிரியர் நிலஒளி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துவந்திருக்கிறார். “நான் சொல்றதைச் செய்... இல்லைன்னா, உனக்கு, ஹால் டிக்கெட் கொடுக்க மாட்டேன். நீ ஃபெயில் ஆகிடுவே” என மிரட்டி, செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்து அனுப்பச் சொல்லியிருக்கிறார்; நேரிலும் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இந்த டார்ச்சர் கடந்த நான்கு மாதங்களாகத் தொடர்ந்திருக்கிறது. எந்நேரமும் மாணவி செல்போனுடன் பதற்றமாக இருப்பதைப் பார்த்துச் சந்தேகமடைந்த பெற்றோர், செல்போனை வாங்கிப் பரிசோதித்ததில், ஆசிரியரின் மிரட்டல் விவகாரம் தெரியவந்திருக்கிறது. கடந்த ஜூன் 8-ம் தேதி பள்ளிக்குச் சென்று நிலஒளியைப் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர். விசாரணையில், அந்தப் பள்ளியின் தாளாளர் யுவராஜும் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இருவரும் போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் செல்போனை ஆய்வுசெய்தபோது, இன்னும் பல மாணவிகளின் போட்டோக்கள் இருந்துள்ளன. அதிர்ச்சியடைந்த காவல்துறை, ‘இன்னும் பல மாணவிகள் இவர்களால் சீரழிக்கப்பட்டிருக்கலாம்’ என்கிற கோணத்தில் விசாரித்துவருகிறார்கள்.

“வீடியோவை டெலிட் பண்ண 50 லட்சம் கொடு!” - சீரழிக்கும் ஆன்லைன் கேம்

ஆன்லைன் விளையாட்டுகளாலும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. சமீபத்தில் நடந்திருக்கும் சம்பவங்கள் பெற்றோருக்கு மட்டுமல்ல, காவல்துறைக்கே அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு, ஆன்லைன் ‘லூடோ கேம்’ வழியாக விக்னேஷ் என்ற வாலிபருடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது. காதல் கவர்ச்சி வார்த்தைகளால் அந்தச் சிறுமிக்கு வலைவீசியிருக்கிறான் விக்னேஷ். அவனது மூளைச்சலவையாலும், தொடர் வற்புறுத்தலாலும் வீடியோ காலில் அவனுடன் பேசியிருக்கிறார் மாணவி. அந்த வீடியோவைப் பதிவுசெய்துகொண்ட விக்னேஷ், கடந்த ஜூன் மாதம் சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றதை அறிந்து, சிறுமியின் வீட்டுக்கு வந்திருக்கிறான். ‘நான் சொல்றதைக் கேட்கலைன்னா, உன்னோட வீடியோக்களை வெளியே விட்டுடுவேன்’ என்று மிரட்ட, பயந்துபோயிருக்கிறார் சிறுமி. இதைப் பயன்படுத்தி, அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அதையும் வீடியோ பதிவுசெய்திருக்கிறான் விக்னேஷ். விஷயத்தைத் தன் தாயிடம் சொல்லியிருக்கிறார் சிறுமி. அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், விக்னேஷிடம் பேசியிருக்கிறார். “50 லட்சம் கொடு. இல்லைன்னா, எல்லாத்தையும் சோஷியல் மீடியாவுல போட்டுருவேன்” என்று மிரட்டியிருக்கிறான். சிறுமியின் பெற்றோர், ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். போலீஸ் விக்னேஷைக் கைதுசெய்து விசாரித்தபோதுதான், பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. சில மொபைல் ஆப்கள் மூலமாக, பள்ளி மாணவிகள் மட்டுமல்லாமல் ஓரினச் சேர்க்கையாளர்களையும் பேசி... வீடியோ எடுத்து, மிரட்டிப் பணம் பறித்திருக்கிறான். இதை ஒரு தொழிலாகவே விக்னேஷ் செய்திருப்பது கண்டறியப்பட்டவுடன், அவன்மீது போக்சோ வழக்கைப் போட்டிருக்கிறது காவல்துறை.

ஆறு மாதங்களில் 2,804 போக்சோ வழக்குகள்... அச்சமூட்டும் தமிழகம்!

மேலே சொல்லப்பட்ட சம்பவங்களெல்லாம் சில உதாரணங்கள் மட்டும்தான். தெருவில் விளையாடியபோது, வீட்டில் தனியாக இருந்தபோது, பள்ளிக்குச் சென்றபோது, டியூஷனுக்குப் போனபோது எனப் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறுமிகள், சிறுவர்கள்மீது ஆயிரக்கணக்கான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. சராசரியாக, நாள் ஒன்றுக்கு 15 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. இதில், பெரும்பாலான குற்றங்கள் பள்ளி மாணவிகளைக் குறிவைத்து நடந்திருக்கின்றன.

தமிழ்நாடு சமூக நலத்துறை தரவுகளின்படி, தமிழ்நாட்டில் பதிவான போக்சோ வழக்குகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருகின்றன. 2018-ம் ஆண்டு 2,039 வழக்குகள் பதிவான நிலையில், 2019-ல் 2,396 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2020-ம் ஆண்டு மேலும் அதிகரித்து, 3,090 போக்சோ வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. மிக மோசமாக, 2021-ம் ஆண்டு 4,469 வழக்குகளாக உயர்ந்திருக்கிறது. இந்த 2022-ம் ஆண்டு, கடந்த ஆறு மாதங்களில் மட்டுமே 2,804 போக்சோ வழக்குகள் தமிழ்நாட்டில் பதிவாகியிருப்பதைத் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய, சமூக நலத்துறை, காவல்துறை, பள்ளிக் கல்வித்துறைகளில் 35-க்கும் அதிகமான அரசு அதிகாரிகள் செயல்படுகிறார்கள். குழந்தைகளைப் பாதுகாக்கத் தேவையான அனைத்துச் சட்டங்களும் இருக்கின்றன. எல்லாம் இருந்தும், தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துவருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் பேசினோம். “குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து அரசு சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அதனால்தான் புகார்கள் அதிகரித்திருக்கின்றன. பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து நாங்கள் விழிப்புணர்வு செய்ததாலேயே, மாணவர்கள் அச்சமின்றி தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை தைரியமாகச் சொல்கின்றனர். போக்சோ சட்டம் குறித்து மண்டலவாரியாக அரசு அலுவலர்களுக்குப் போதுமான பயிற்சி அளிக்கப்படுகிறது. குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு செய்துவருகிறது” என்றார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைப் புகாரளிக்க, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் 14417 உதவி எண்ணும், 1098 சைல்ட்லைன் உதவி எண்ணும் செயல்படுகின்றன. ஆனால், இந்தச் சேவை மையம் குறித்த போதிய விழிப்புணர்வு பள்ளிகளில் மாணவர்களிடம் ஏற்படுத்தப்படவில்லை என்பதே வேதனைக்குரிய உண்மை. சராசரியாக ஒரு நாளைக்கு 15 போக்சோ வழக்குகள் பதிவாகின்றன என்கிற தகவலே நம்மை அதிரவைக்கிறது. இதில், இன்னும் வெளிச்சத்துக்கு வராத, வெளியில் சொல்ல தைரியமில்லாத, அதற்கு வாய்ப்பில்லாத பாவப்பட்ட சிறார்களின் நிலைமையை நினைத்தால், நெஞ்சே பதறுகிறது. சொந்தத் தந்தை, தாத்தா தொடங்கி... உறவினர்கள், தெரிந்தவர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் என நீளும் குற்றவாளிகளின் பட்டியல் அதிர்ச்சியளிக்கிறது. இந்த விஷயத்தில் குற்றவாளிகள் பெரிய தண்டனைகளின்றி எளிதில் தப்புகிறார்கள் என்கிற செய்தியை எப்படி ஜீரணிப்பது... என்ன செய்து சிறார்களின் பாதுகாப்பை நாம் உறுதிசெய்யப்போகிறோம்... இந்தப் பிரச்னைக்கு எப்படி முற்றுப்புள்ளி வைக்கப்போகிறது தமிழ்நாடு அரசு?

“ப்ளீஸ் விட்ருங்க!” - 15 நாள்கள்... 30 போக்சோ வழக்குகள் - அச்சமூட்டும் தமிழகம்!

“நடைமுறைகள், வழக்கு தொடுத்தவர்களையே விரக்தியடைய வைக்கின்றன!”

“போக்சோ சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறவர்கள் உணர்வுபூர்வமாக அதை அணுகுவது கிடையாது. சட்டத்தைச் செயல்படுத்துபவர்கள் வழக்குகளைச் சரியாகக் கையாண்டால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும். அதற்கு அவர்களுக்குத் தேவையான பயிற்சி அளிக்கவேண்டியது அரசின் கடமை. மேலூரிலுள்ள ஒரு பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆசிரியர் ஒருவரால் பாலியல் தொல்லை அனுபவித்த வழக்கை நான் விசாரித்தேன். அந்த வழக்கில் போலீஸார், குழந்தைகளை அணுகியவிதம் அவர்களை பயமுறுத்தும் வகையில்தான் இருந்தது. அதுவே அந்தச் சிறுமிகளை மேலும் பாதிக்கும். அதேபோல, பாதிக்கப்பட்ட சிறுமிகளை நீதிமன்றம் அழைத்துச் செல்வதிலும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. மாவட்டக் குழந்தைகள் நல அலுவலர்கள் அந்தச் சிறுமிகளிடம் விசாரணை நடத்தி அளித்திருந்த அறிக்கையில், பாலியல் தொல்லை சம்பந்தமாக எந்தக் கருத்துமே தெரிவிக்கப்படவில்லை. அரசின் சட்டபூர்வமான அமைப்புகளும் போக்சோ சட்டம் குறித்த போதிய புரிதல் இல்லாமல் விசாரணை நடத்துகின்றன. அதேபோல, அந்தச் சிறுமிகளின் பெற்றோர்கள் மிரட்டப்படும் சம்பவமும் நடக்கிறது. இங்கு இருக்கும் பல நடைமுறைகள், வழக்கு தொடுத்தவர்களை விரக்தியடைய வைக்கின்றன என்பதே கசப்பான உண்மை!”

- நிர்மலா ராணி, உறுப்பினர், போக்சோ வழக்கின் உண்மை கண்டறியும் குழு

“ப்ளீஸ் விட்ருங்க!” - 15 நாள்கள்... 30 போக்சோ வழக்குகள் - அச்சமூட்டும் தமிழகம்!

“தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் அதிகம்!”

“மற்ற மாநிலங்களைவிட, தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் அதிகம் பதியப்படுகின்றன. பாதிக்கப்பட்ட குழந்தைகளும், அவர்களின் பெற்றோர்களும் வெளியே வந்து பேசுவது நல்ல அறிகுறி. பள்ளிக் குழந்தைகளுக்கு போக்சோ சட்டம் குறித்த புரிதல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதேசமயத்தில், பாலியல்ரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் ஆலோசனை வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அதன் தாக்கம் வாழ்நாள் முழுவதுமே இருக்கும். பாதிக்கப்பட்ட குழந்தை அந்தச் சம்பவத்திலிருந்து வெளிவரத் தேவையான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. அதேபோல, போக்சோ குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. தண்டனைகள் அதிகமாகும்போது, நடக்கும் குற்றங்கள் கண்டிப்பாகக் குறையும்!”

- சரண்யா ஜெய்குமார், உறுப்பினர், தமிழ்நாடு மாநிலக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்.