Published:Updated:

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் தேடப்படும் ஜெயக்குமார் - தகவல் அளித்தால் தக்க சன்மானம் #NowAtVikatan

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு!
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு!

30.1.2020 - இன்றைய முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு!

30 Jan 2020 7 AM

இன்று மறைமுகத் தேர்தல்!

தமிழகத்தில், 27 மாவட்டங்களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல், கடந்த டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து நடந்த மறைமுகத் தேர்தலில், சில இடங்களில் வன்முறை நிகழ்ந்தன.

மேலும், போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வராதது, தேர்தல் நடத்தும் அலுவலருக்கு உடல்நலக்குறைவு போன்ற காரணங்களாலும் மறைமுகத் தேர்தல் சில இடங்களில் தள்ளிவைக்கப்பட்டன. தள்ளிவைக்கப்பட்ட 335 பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு, இன்று காலை 10.30 மணிக்கும், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு மாலை 3 மணிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அந்தந்தப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

30 Jan 2020 10 AM

சிறார் வதை வீடியோ!

சிறார் வதை வீடியோவை டவுன்லோடு செய்து பார்த்ததாக சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பிஎஸ்சி பட்டதாரியான அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது செல்போனில் ஏராளமான சிறார் ஆபாசப்படங்களை பதிவிறக்கம் பார்த்ததாக கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

30 Jan 2020 11 AM

டி.என்.பி.எஸ்.சி ஊழியர்கள் 3 பேரிடம் விசாரணை!

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதில் 3 அரசு ஊழியர்கள் உள்பட தேர்வு எழுதியவர்கள், புரோக்கர்களாக செயல்பட்டவர்கள் என 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி அலுவலக ஊழியர்கள் 3 பேரிடம் விசாரணை நடந்துவருகிறது. தேர்வு முறைகேட்டின் மூளையாக கருதப்படும் சென்னையைச் சேர்ந்த ஜெயக்குமாரின் வீட்டின் சோதனை நடத்த சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

30 Jan 2020 12 PM

டி.எஸ்.ராகவேந்திரா உடல்நலக்குறைவால் மரணம்!

பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட பழம்பெரும் நடிகர் டி.எஸ்.ராகவேந்திரா இன்று காலமானார். வைதேகி காத்திருந்தாள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ராகவேந்திரா அதில் ரேவதியின் தந்தையாக நடித்திருந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலமானார்.

அவருக்கு வயது 75. அவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தந்துவிட்டேன் என்னை, சிந்து பைரவி, விக்ரம், சொல்லத்துடிக்குது மனசு, கற்பூர முல்லை, இளையவன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள ராகவேந்திரா சில படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

30 Jan 2020 1 PM

ஜெயக்குமார் வீட்டில் சோதனை!

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் மூளையாக செயல்பட்டுவரும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இரண்டு தேர்வு மையங்களின் விடைத்தாள்களை திருத்திய சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டவருமான சென்னை ஜெயக்குமார் தலைமறைவாக உள்ளார். அதனால் முகப்பேரில் உள்ள அவரின் வீட்டில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். அங்குச் சோதனை நடத்தினால் முறைகேடு தொடர்பான ஆவணங்கள் சிக்க வாய்ப்புள்ளது

30 Jan 2020 1 PM

கேரள மாணவருக்கு கொரோனா பாதிப்பு!

வுஹானில் இருந்துவந்த கேரள மாணவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து திரும்பிய கேரளா மாணவரின் உடலில் கொரோனா பாதிப்பு அறிகுறிகள் இருப்பதை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவின் உடல்நிலை தீவிரமாக கண்காணிப்பில் இருப்பதாக கேரள அரசு தகவல் தெரிவித்துள்ளது. வுஹானில் படித்து வந்த அந்த மாணவர் சமீபத்தில் கேரளா திரும்பியுள்ளார். இதேபோல் கேரளாவில் மட்டும் 800 பேர் கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

30 Jan 2020 2 PM

ஜாமியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு?

டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்திய போது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தி வந்தனர்.

பேரணி செல்வதாக அறிவித்திருந்த நிலையில் முகமூடி அணிந்திருந்த நபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் வந்து அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பதறவைத்துள்ளார். இதில் ஒரு மாணவர் காயம் அடைந்துள்ளதாக தெரிகிறது. அந்த மர்ம நபரை போலீஸார் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

30 Jan 2020 2 PM

பிறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் இஸ்லாமியர்கள்!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்தின் எதிரொலியாகத் தமிழகத்தில் குறிப்பாகச் சென்னையில் பிறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுவதாகவும், சான்றிதழ் கேட்டு விண்ணப்பிப்பவர்களில் 80% பேர் இஸ்லாமியர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

30 Jan 2020 6 PM

சி.ஏ.ஏ -வுக்கு எதிராக மனிதச் சங்கிலி போராட்டம்!

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக சி.ஏ.ஏ, என்.ஆர்.சி-க்கு எதிராக இன்று மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் இந்த முயற்சிக்கு தி.மு.க, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க, மதச்சார்பற்ற ஜனதாதளம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் இந்தக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தப் போராட்டம் சென்னை, நெல்லை, செங்கோட்டை, நெய்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, சேலம், விருதுநகர், நாமக்கல், புதுக்கோட்டை, தேனி, மதுரை, திருப்பூர், திருவாரூர் எனத் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. சென்னையில் திருவொற்றியூரில் தொடங்கி ஸ்டான்லி, குறளகம், அண்ணா சாலை, ஜெமினி, சைதாப்பேட்டை, பல்லாவரம் வழியாக தாம்பரம் வரை சுமார் 37.1 கி.மீ நடைபெறுகிறது.

30 Jan 2020 10 PM

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு - தேடப்படும் நபர் குறித்த தகவல் கூறினால் தக்க சன்மானம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 விவகாரம் தொடர்பான சிபிசிஐடி விசாரணையில் தினம் தினம் அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துகொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில், கைது நடவடிக்கையும் தொடர்ந்து வருகிறது. இந்த முறைகேட்டில் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் ஜெயக்குமார் என்பவர் தலைமறைவாக உள்ளார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய பிற தேர்வுகளில் இவர் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் ஜெயக்குமார் குறித்து துப்பு கொடுத்தால் உரிய சன்மானம் வழங்கப்படும் என சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர். 94981 05810, 94441 56386, 99402 69998, 94438 84395, 99401 90030 ஆகிய எண்களிலும் ஜெயக்குமார் பற்றி துப்பு கொடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின் செல்ல