Published:Updated:

`முப்படைகளுக்கான முதல் தளபதி பிபின் ராவத்'- பாதுகாப்புத்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு! #NowAtVikatan

பிபின் ராவத்
பிபின் ராவத்

30.12.2019 - இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

30 Dec 2019 9 PM

பாதுகாப்புத்துறை அறிவிப்பு!

நாளை ஓய்வு பெறவிருக்கிற ராணுவத் தளபதி பிபின் ராவத், புதிதாக உருவாக்கப்படவுள்ள முப்படைத் தளபதி (Chief of Defence Staff - CDS) பொறுப்புக்கு நியமிக்கப்பட இருப்பதாகச் செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன. இந்நிலையில் இதற்கான அறிவிப்பை தற்போது மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி முப்படைகளுக்கான முதல் தளபதியாக பிபின் ராவத் பொறுப்பேற்க உள்ளார்.

30 Dec 2019 8 PM

பிரதமர் இல்லத்தில் தீ விபத்து

டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைப்பதற்கு 9 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன. சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

30 Dec 2019 6 PM

பள்ளிக்கல்வித் துறை புதிய அறிவிப்பு

அரையாண்டுத் தேர்வு விடுமுறை பள்ளிகளுக்கு மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 3ம் தேதி திறக்கவிருந்த பள்ளிகள் 4ம் தேதி முதல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இந்த விடுமுறை உத்தரவு பொருந்தும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

30 Dec 2019 11 AM

முடிவுகள் வெளியிட தடை இல்லை!

தமிழகத்தில் தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 27 -ம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சட்டபஞ்சாயத்து இயக்கம் சார்பில் ஜனவரி 2 -ம் தேதி நடைபெற இருக்கும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடை விதிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இன்று அந்த மனு மீதான விசாரணையின் முடிவில், வாக்கு எண்ணிக்கைக்கும், முடிவுகள் அறிவிப்பதற்கும் தடை விதிக்க முடியாது என மனுவைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். இதனால் 2 -ம் தேதி ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் சிக்கல் இருக்காது என தெரிகிறது.

30 Dec 2019 11 AM

கடற்படையின் பாதுகாப்பு கருதி...!

கப்பல்
கப்பல்

ஆந்திரப் புலனாய்வுத் துறையானது, மத்தியப் புலனாய்வுத் துறை மற்றும் கடற்படையுடன் இணைந்து நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது. இதில், கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் பாகிஸ்தானுடன் தொடர்புகொண்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. சில ரகசிய தகவல்கள் பகிரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியக் கடற்படை தளங்கள், போர்க்கப்பல் ஆகியவற்றில் சமூக வலைதளங்கள், பிற தளங்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்த இந்தியக் கப்பற்படை தடைவிதித்துள்ளது. கடற்படையின் பாதுகாப்புக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

30 Dec 2019 10 AM

கடுமையான பனி மூட்டம்: விபத்தில் சிக்கிய கார்!

`முப்படைகளுக்கான முதல் தளபதி பிபின் ராவத்'- பாதுகாப்புத்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு! #NowAtVikatan
\ANI

வட மாநிலங்களில் கடுமையான குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பனிமூட்டம் காரணமாக மக்கள், தேவைகளுக்காகக் கூட வாகனங்களில் இரவு மற்றும் காலை நேரங்களில் பயணிக்க அச்சப்படுகிறார்கள். இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் கடுமையான பனியில் இரவு நேரத்தில் பயணித்த கார் ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் அந்தக் காரில் 11 பேர் பயணித்ததாகவும் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.

30 Dec 2019 7 AM

கோலம் மூலம் எதிர்ப்பு!

சென்னை பெசன்ட் நகர் பகுதியில் வீட்டின் முன்பு CAAவுக்கு கோலம் போட்டு எதிர்ப்புகளை தெரிவித்த 5 பேர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும், அவர்களை காவல்துறையினர் கட்டாயப்படுத்தி அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றினர். கோலத்தில் `நோ டு சி.ஏ.ஏ, நோ டு என்.ஆர்.சி, நோ டு என்.பி.ஆர்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. பின்னர் அவர்கள் காவல்துறையால் விடுவிக்கப்பட்டனர். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். தி.மு.க எம்.பி கனிமொழியும் தனது வீட்டில் கோலமிட்டு கண்டனத்தைப் பதிவு செய்தார்.

இந்த நிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை வீட்டு வாசலில் கோலமிட்டு CAA மற்றும் NRC ஆகியவற்றுக்கு எதிர்ப்பு பதியப்பட்டுள்ளது. மேலும், கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டிலும் `வேண்டாம் CAA, NRC’ என கோலம் மூலம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தி.மு.க எம்.பி கனிமொழி, ``குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தி.மு.க தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் கழக மகளிர் அணியினர் தங்கள் வீட்டு வாசலில் NO CAA, NO NRC என்ற வாசகங்கள் அடங்கிய கோலம் போட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

30 Dec 2019 7 AM

தொடங்கியது வாக்குப்பதிவு!

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்
File Photo

தமிழகத்தில் இன்று இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 27-ம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து வாக்குப் பதிவு நடைபெறும் மையங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் வெப் ஸ்ட்ரீமிங், வீடியோ பதிவு மற்றும் நுண் பார்வையாளர்களைக் கொண்டு கண்காணிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு