Published:Updated:

`அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலாதான்; அ.ம.மு.க தொடங்கப்பட்டதே அ.தி.மு.க-வை மீட்டெடுக்கத்தான்!’ - தினகரன் #NowAtVikatan

சசிகலா காரில் அ.தி.மு.க கொடி
சசிகலா காரில் அ.தி.மு.க கொடி

31-01-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

31 Jan 2021 2 PM

`அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலாதான்!’

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிகலா, பெங்களூரிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரமுள்ள தனியார் விடுதியில் தங்கியிருக்கிறார். இந்தநிலையில் அங்கு செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த டி.டி.வி.தினகரன், ``அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் சசிகலாதான். அது தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால், அவர்தான் பொதுச்செயலாளர். அதனால் அவரின் காரில் அ.தி.மு.க கொடி பொருத்தப்பட்டதில் எந்தச் சர்ச்சையும் இல்லை. அ.ம.மு.க தொடங்கப்பட்டதே ஜனநாயகரீதியில் அ.தி.மு.க-வை மீட்டெடுக்கத்தான்” என்றார்.

அ.தி.மு.க-வை சசிகலா கைப்பற்றுவதற்கான வாய்ப்பு உண்டா? - உங்கள் பார்வை!

இது குறித்த உங்களின் எண்ண அலசல்களை விகடனுக்கு அனுப்பிவையுங்கள். தேர்வாகும் அலசல் கட்டுரைகள் விகடன் தளத்தில் பிரசுரிக்கப்படும்.

உங்கள் எண்ணத்தை அனுப்ப க்ளிக் செய்க... http://bit.ly/39BnZAJ

31 Jan 2021 1 PM

தளர்வுகளுடன் ஊரடங்கு!

தமிழகத்தில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், முதல்வர் பழனிசாமி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில் பிப்ரவரி மாதத்துக்கான அறிவிப்பை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

அதில், தளர்வுகளுடன்கூடிய பொது ஊரடங்கு பிப்ரவரி 28 நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 9,11 வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு வரும் 8-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் எனவும், கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வகுப்புகள் செயல்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. மேலும், தமிழகத்தில் பிப்ரவரி 8 முதல் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் இந்தத் தளர்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

பள்ளிகள்
பள்ளிகள்

மேலும், தமிழகம் முழுவதும் திரையரங்குகள் 100% பார்வையாளர்களுடன் இயங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக, மத்திய அரசும் திரையரங்குகள் 100% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

31 Jan 2021 11 AM

புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம்!

தமிழக தலைமைச் செயலர் சண்முகம் பதவிக்காலம், கொரோனா சூழல் காரணமாக இரண்டு முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்றுடன் ஓய்வுபெறுகிறார். இந்தநிலையில், 47-வது தலைமைச் செயலராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அண்மையில் இவர் மத்திய அரசு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு தமிழகம் அனுப்பிவைக்கப்பட்டார். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர் பி.எஸ்சி மற்றும் அறிசார் சொத்துரிமை பிரிவில் டாக்டர் பட்டம் வாங்கியிருக்கிறார். இவர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஓய்வுபெறுகிறார்.

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம்
தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம்

இன்றுடன் ஓய்வுபெறும் சண்முகம் தமிழக அரசின் ஆலோசகராக ஓராண்டு செயலாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

31 Jan 2021 10 AM

தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பின்போது, பிரதமரை மெட்ரோ திட்ட தொடக்கவிழா உள்ளிட்ட பல்வேறு அரசு நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

மோடி
மோடி

இதைத் தொடர்ந்து, வரும் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அப்போது அவர் வண்ணாரப் பேட்டை, திருவொற்றியூர், விம்கோ நகர் மெட்ரோ சேவையைத் தொடங்கிவைப்பார் என்றும், காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுவார் என்றும் கூறப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில் பிரதமர் மோடியின் தமிழக வருகை நிச்சயம் முக்கியத்துவம் பெற்றதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

31 Jan 2021 10 AM

சசிகலா இன்று டிஸ்சார்ஜ்

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையில் இருந்த சசிகலா, கடந்த 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், பெங்களூரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துவருகிறார். கடந்த சில நாள்களாகவே அவரது உடல்நிலை சீராக இருக்கும் காரணத்தால், இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற தகவல் வெளியானது.

சசிகலா
சசிகலா

இதைத் தொடர்ந்து பெங்களூரு மருத்துவமனை வளாகத்தில் அவரது ஆதரவாளர்கள் குவிந்திருக்கிறார்கள். இதற்கிடையே விக்டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா, `சசிகலா 7 நாள் தனிமையில் இருக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு