Published:Updated:

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்! #NowAtVikatan

பிரணாப் முகர்ஜி
பிரணாப் முகர்ஜி

31-08-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

31 Aug 2020 6 PM

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்!

பிரணாப் முகர்ஜி
பிரணாப் முகர்ஜி

உடல்நலக் குறைவால் டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 84. பிரணாப் முகர்ஜி மறைந்த செய்தியை அவரது மகன் அபிஜித் முகர்ஜி, ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இந்தியா, தனது பெருமைமிகு மகனை இழந்துவிட்டது என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இரங்கல் தெரிவித்துள்ளார்.

``ஜி.டி.பி-யைப்போல மகிழ்ச்சியும்  முக்கியம்!"- குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி
31 Aug 2020 12 PM

பிரசாந்த் பூஷணுக்கு ரூ.1 அபராதம்; கட்டத் தவறினால் 3 மாதம் சிறை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராதத் தொகையை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் அவர் கட்டத் தவறும்பட்சத்தில் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

பிரசாந்த் பூஷண்
பிரசாந்த் பூஷண்

உச்ச நீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துத் தெரிவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த விவகாரத்தில் அவர் மன்னிப்புக் கோர வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில், அதற்கு பிரசாந்த் பூஷண் மறுப்புத் தெரிவித்தார். அவரது வழக்கில் தண்டனை விவரங்கள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று அதுதொடர்பான உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

`பிரசாந்த் பூஷண் குற்றவாளி’ என தீர்ப்பு... கருத்துரிமையை நெரிக்கிறதா உச்சநீதிமன்றம்?
31 Aug 2020 11 AM

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை!

கிராம புறங்களில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முதுநிலை மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடஒதுக்கீடு அளிக்கும் விதிமுறைகள் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தை மீறுவதாக உள்ளன எனவும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்!

31 Aug 2020 11 AM

பேருந்துகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிப்பு!

தமிழக அரசால் ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளின்படி நாளை முதல் சென்னை மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக, பல்லவன் சாலையிலுள்ள மாநகரப் பேருந்து டிப்போவில் பேருந்துகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுவருகிறது!

படங்கள்: வி.ஶ்ரீனிவாசுலு

31 Aug 2020 11 AM

லடாக்கில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறல்!?

இந்திய எல்லையான லடாக்கில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் அமன் ஆனந்த் கூறியிருக்கிறார். பான்காங் சோ ஏரி அருகே அத்துமீற முயன்ற சீன ராணுவத்தை இந்தியப் படை விரட்டியடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா
File photo

`கிழக்கு லடாக் பகுதியில் தற்போது நிலவும் சூழலைச் சிதைக்கும் சில காரியங்களில் சீனா ஈடுபட்டிருக்கிறது’ என இந்திய ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. தொடர்ந்து இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை இருந்துவரும் நிலையில், இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

31 Aug 2020 11 AM

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் மேலும் பின்னடைவு?

பிரணாப் முகர்ஜி
பிரணாப் முகர்ஜி

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து ஆழ்ந்த கோமாநிலையில் இருக்கும் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் நுரையீரல் தொற்று மேலும் தீவிரமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது!

31 Aug 2020 10 AM

ஒரே நாளில் 8.46 லட்சம் மாதிரிகள் பரிசோதனை!

இந்தியாவில் ஒரே நாளில் 8.46 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்திருக்கிறது. மேலும், இந்தியாவில் இதுவரை 4.23 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 36,21,246-ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் 24 மணி நேரத்தில், 78,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கோவிட்-19
கோவிட்-19

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 971 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 64,469-ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,74,802-ஆக உயர்ந்திருக்கிறது.

31 Aug 2020 8 AM

உலக அளவில் கொரோனா!

கொரோனா
கொரோனா

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,53,84,547-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல உலகம் முழுவதும் இந்தக் கொடிய வைரஸ் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 8,50,591-ஆக உள்ளது. ஒட்டு மொத்தமாக உலக அளவில் 1,77,06,841 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், தொற்று பாதிப்பில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன!

31 Aug 2020 8 AM

ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீட்டு மனு!  - இன்று விசாரணை

சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை
சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அந்த நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இன்று அந்த மனு மீதான விசாரணையைத் தொடங்குகிறது உச்ச நீதிமன்றம்!

அடுத்த கட்டுரைக்கு