கொரோனா தொற்று; உடலுறுப்புகள் பாதிப்பு! - வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார் #NowAtVikatan

31-10-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!
வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்!
வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 72.
தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நலக் குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால், அவர் கடந்த மருத்துவமனையில் அக்டோபர் 13-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனயில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். கடந்த 2 நாள்களாக அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகி வந்தது. அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதாகவும், உயிர்காக்கும் கருவிகள் உதவியோடு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி அக்டோபர் 31-ம் தேதி உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இரவு 11.15 மணியளவில் அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விருப்ப ஓய்வு கேட்டு சகாயம் ஐ.ஏ.எஸ் விண்ணப்பம்
தமிழ்நாடு அறிவியல் நகரத் துணைத் தலைவராகக் கடந்த ஆறு ஆண்டுகளாகப் பதவி வகித்துவருகிறார் சகாயம் ஐ.ஏ.எஸ். ஓய்வுபெற மூன்று ஆண்டுகள் இருக்கும்போதே, தற்போது விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்திருக்கிறார் சகாயம். இதனால், அடுத்த இரண்டு மாதங்களில் அவர் பதவியிலிருந்து விடுவிக்கப்படுவார்.

இது குறித்து ஜூனியர் விகடனுக்குப் பேட்டியளித்த சகாயம் ஐ.ஏ.எஸ், ``ஒரு நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற பெருமிதத்துடன் பணியாற்றிவந்திருக்கிறேன். அளப்பரிய நேர்மையோடுதான் என் நிர்வாகத் தளங்களில் பணியாற்றிவந்திருக்கிறேன். அதற்காக நான் வருந்தவும் இல்லை, வருத்தப்படப்போவதும் இல்லை. இதற்கு மேல் நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. விரைவில் என் முடிவை அறிவிப்பேன்” என்று கூறியிருந்தார்.