Published:Updated:

`மானேசரில் மருத்துவ முகாம்; 14 நாள்கள் கண்காணிப்பு!'- வுஹானில் இருந்து தாயகம் திரும்பிய இந்தியர்கள்

சீனாவிலிருந்து திரும்பிய இந்தியர்கள்
சீனாவிலிருந்து திரும்பிய இந்தியர்கள்

சீனாவிலிருந்து 324 இந்தியர்களுடன் புறப்பட்ட சிறப்பு ஏர் இந்தியா விமானம், டெல்லி திரும்பியது.

கொரோனா வைரஸ்... இந்தப் பெயர், சீனாவை மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் நடுங்கச்செய்கிறது. கொரோனா வைரஸ் தாக்குதலினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது சீனா. வுஹான் மாகாணத்தில் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை 249 பேர் இறந்துள்ளதாகவும் 9,809 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது சீனா. கொரோனா தாக்கம் அதிகம் உள்ள வுஹான் மாகாணத்தில், இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட, ஏராளமானோர் சிக்கித் தவிக்கின்றனர். விமான சேவை ரத்துசெய்யப்பட்டுவிட்டதால், அவர்களால் அங்கிருந்து வெளியேறவும் முடியவில்லை. இதையடுத்து, சீனாவில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா விமானம்

ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு விமானங்கள், சீனாவின் வுஹான் நகரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கிருந்து, முதற்கட்டமாக 324 இந்தியர்களை அழைத்துவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சீனாவிலி ருந்து 324 இந்தியர்களுடன் புறப்பட்ட சிறப்பு ஏர் இந்தியா விமானம், இன்று காலை டெல்லி திரும்பியது. நாடு திரும்பிய 324 பேரையும் 14 நாள்கள் முகாமில் வைத்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி வந்து இறங்கியவர்களுக்கு, விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இவர்கள் மானேசரில் உள்ள முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளனர்.

`கொரோனா வைரஸ்.. முடக்கப்பட்ட நகரம்.. வுகானின் திடீர் அமைதி!’- ஒரு இளம்பெண்ணின் டைரிக் குறிப்புகள்

இந்திய ராணுவம், ஹரியானாவுக்கு அருகே உள்ள மானேசரில் இதற்காக தனி முகாமை ஏற்படுத்தியுள்ளது. சீனாவிலிருந்து வந்தவர்களுக்கு, விமானநிலையத்தில் முதற்கட்ட பரிசோதனை நடத்தப்படும். பின்னர், மானேசரில் உள்ள முகாமில் விரிவான பரிசோதனைகள் நடத்தப்படும். 300 படுக்கை வசதிகளுடன் இந்த முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள், இந்த முகாமில் இரண்டு வாரங்கள் தங்கவைக்கப்பட்டு, அவர்களில் உடல்நிலை கண்காணிக்கப்படும். யாருக்காவது வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டால், அவர்கள் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் தனிப்பிரிவில் அனுமதிக்கப்படுவர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளவா்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக, டெல்லியில் 600 படுக்கைகளுடன் தனி மருத்துவ முகாம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு மருத்துவ முகாம்
சிறப்பு மருத்துவ முகாம்

முன்னதாக, “சீனாவிலிருந்து சிறப்பு விமானம்மூலம் தாயகம் திரும்பும் இந்தியர்களுக்கும் ஏர் இந்தியா விமானப் பணியாளர்களுக்கும் இடையே தொடர்பு இருக்காது. விமான சிப்பந்திகள் அவர்களுக்கு எந்தச் சேவையும் வழங்க மாட்டார்கள். பயணிகளுக்குத் தேவையான உணவு, தண்ணீர் ஆகியவை அவர்களது இருப்பிடத்திலே வைக்கப்பட்டிருக்கும். பயணிகளுக்கும் எங்கள் பணியாளர்களுக்கும் மாஸ்க் வழங்குவோம். விமானத்தில் பயணிக்கும் எங்கள் குழுவினருக்கு முழுமையான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்” என்று ஏர் இந்தியா விமான நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு