Published:Updated:

'காவிரி பிரச்னை தீர நதிகளை தேசிய மயமாக்குவதே நிரந்தர தீர்வு'

Vikatan Correspondent
'காவிரி பிரச்னை தீர நதிகளை தேசிய மயமாக்குவதே நிரந்தர தீர்வு'
'காவிரி பிரச்னை தீர நதிகளை தேசிய மயமாக்குவதே நிரந்தர தீர்வு'
'காவிரி பிரச்னை தீர நதிகளை தேசிய மயமாக்குவதே நிரந்தர தீர்வு'

சென்னை: காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமானால் நதிகளை இணைத்து தேசிய மயமாக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடக அரசு காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீர் பங்கினை தராமல் மறுத்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேலும் இரண்டு புதிய அணைகளை கட்டுவோம் என்று அம்மாநில நீர்வள துறை அமைச்சர் கூறி உள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. காவிரி நதிநீர் ஆணைய தீர்ப்பு, உச்ச நீதிமன்ற தீர்ப்பு என எதையும் மதிக்காமல் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுகின்ற கர்நாடகா அரசின் ஆணவ போக்கு வன்மையாக கண்டிக்கக்கூடியது.

மத்திய அரசு கர்நாடகா மாநிலத்தின் இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா  மாநிலங்களுடான தண்ணீர் பங்கீட்டில் தொடர்ந்து பிரச்னை நிலவி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலுள்ள அரசியல் கட்சிகளும், தமிழகத்திற்கு வருகின்ற தண்ணீரை தடுத்து நிறுத்தி சர்ச்சைகளை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் பலனடைய முற்படுகிறார்கள். மத்திய அரசும் அரசியல் சுயநிலத்தை கருத்தில் கொண்டு அமைதி காத்து நிரந்தர தீர்வு எடுக்காமல் விட்டு விடுகின்றன. இதனால் அண்டை மாநிலங்களின் அரசுகளுக்கிடையேயும், விவசாயிகளுக்கிடையேயும், பொதுமக்களிடையேயும் பகைமை உணர்வு நாளுக்குநாள் அதிகமாகி கொண்டே வருகின்றது.

கேரளா அளவுக்கு அதிகமான தண்ணீரை வைத்து இருந்தாலும் தமிழகத்திற்கு தர மறுக்கின்றது. கர்நாடகா அரசோ தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கூட தர மறுக்கின்றது. தமிழக விவசாயிகள் ஒவ்வொரு வருடமும் அண்டை மாநிலங்களின் தண்ணீரை எதிர்பார்த்து உரிய நேரத்தில் கிடைக்காமல் தவித்துக் கொண்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமானால் நதிகளை இணைத்து தேசிய மயமாக்க வேண்டும். அப்பொழுதுதான் மாநில அரசுகளுக்கிடையே உள்ள தண்ணீர் பங்கீட்டு பிரச்னைகளை களைந்து, அனைத்து மாநில மக்களும் பகைமையுணர்வுயின்றி வாழ முடியும்.

இந்த திட்டத்தை கர்நாடகா அரசு நிறைவேற்றுவதன் மூலம் மழை குறைவான வறட்சி காலங்களில் தமிழகத்தின் அணைகளுக்கு வரக்கூடிய குறைந்த அளவு தண்ணீரை தேக்கி கர்நாடகமே பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகும். தமிழகத்திற்கு கொடுக்கக்கூடிய தண்ணீரின் உரிமையை கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கவே கர்நாடகம் திட்டமிட்டு செயல்படுகிறது. தமிழக அரசு உடனடியாக இத்திட்டத்தை தடுக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். மத்திய  அரசு நதிகளை இணைத்து தேசிய மயமாக்குதல் மூலமே இப்பிரச்னைகளை தீர்க்க முடியும்" என்று கூறியுள்ளார்.