Published:Updated:

`நிறைவேறிய கோரிக்கை!' - கிராமத்துக்கு வந்த முதல் பேருந்தை வரவேற்ற மதுரை சிறுமி சஹானா #NowAtVikatan

பேருந்து சேவையை வரவேற்ற சிறுமி சஹானா
பேருந்து சேவையை வரவேற்ற சிறுமி சஹானா

3.2.2020 இன்றைய முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு!

03 Feb 2020 9 AM

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திடீர் உடல்நிலை பாதிப்பால் டெல்லி ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் நேற்று மாலை 7 மணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குக் காய்ச்சல், வயிற்று வலி மற்றும் சுவாசப் பிரச்னை இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சோனியா காந்தி
சோனியா காந்தி

தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் சில மருத்துவ சோதனைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னும் அவற்றின் முடிவுகள் வெளியாகவில்லை அது வந்த பிறகே சோனியா டிஸ்சார்ஜ் செய்யப்படுவது குறித்துத் தெரியவரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

03 Feb 2020 7 AM

தண்டனை விவரங்கள் இன்று வெளியாகும்!

சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்ட விவகாரத்தில், அந்தக் குடியிருப்பில் பணிபுரிந்த 17 பேரை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணையைக் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் மகிளா நீதிமன்றம் தொடங்கியது.

11 மாதங்களாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தது. இதையடுத்து இந்த வழக்கில் கடந்த சனிக்கிழமை அன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. குற்றம்சாட்டபட்ட 17 பேரில் பாபு என்பவர் சிறையில் உயிரிழந்ததையடுத்து 16 பேருக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. குற்றம் சுமத்தப்பட்ட 15-வது நபரான தோட்டக்காரர் குணசேகரன் விடுதலை செய்யப்பட்டார். மற்ற 15 பேரையும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். ஆனால், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம், அன்று அறிவிக்கப்படவில்லை. குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்கும் இன்று தண்டனை விவரங்களை அறிவிக்கிறது நீதிமன்றம்.

`அயனாவரம் சிறுமி வழக்கில் 15-வது நபர் விடுதலை! - சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
03 Feb 2020 10 AM

அண்ணாவின் 51-வது நினைவுநாள்!

இன்று முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாவின் 51-வது நினைவுநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தி.மு.க சார்பில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர். பேரணியின் இறுதியில் அண்ணா சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் ஸ்டாலின். பின்னர் முன்னாள் முதல்வர் கருணாநிதி சமாதியிலும் மலர் தூவி மரியாதை செய்தார்.

இந்த நிலையில், ட்விட்டரில் ஸ்டாலின், ``பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவுநாள் இன்று! அவரை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு? அவரது கொள்கையும் வாழ்வும் என்றும் நம்மை இயக்குகிறது. அண்ணன் விரும்பிய தமிழகம் அமைக்க சபதம் ஏற்போம்!” எனப் பதிவிட்டுள்ளார்.

03 Feb 2020 11 AM

திருச்சியைத் தொடர்ந்து சேலம்!

தமிழக கட்சிகள் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காகத் தயாராகி வருகின்றன. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அடிப்படையில் மாவட்ட ரீதியாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தி.மு.க. முன்னதாக, இரண்டாக இருந்த திருச்சி மாவட்டத்தை மூன்றாக பிரித்து, அன்பில் மகேஷுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. திருச்சியில் மாவட்டப் பொறுப்பில் இருந்த கே.என்.நேரு, தி.மு.க முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தற்போது சேலம் கிழக்கு மாவட்டக் கழக பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும், அவரது அந்தப் பொறுப்பை சேலம் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஏற்றுக்கொள்வார் எனவும் கட்சித் தலைமை அறிவித்துள்ளது. கட்சியின் இந்த அறிவிப்பு வீரபாண்டி ஆ.ராஜா ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

03 Feb 2020 12 PM

கேரளாவில் மூன்றாவது நபருக்கு வைரஸ் தொற்று!

கேரளாவில் மேலும் ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து வந்த இருவருக்கு ஏற்கெனவே கொரோனா பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது காசர்கோடு பகுதியைச் சேர்ந்த மற்றொருவருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

இவரும் சீனாவின் வுகான் நகரிலிருந்து இந்தியா வந்துள்ளார். இவர் தனிமைப்படுத்தப்பட்டு காசர்கோடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாகவும். அவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.

03 Feb 2020 3 PM

அயனாவரம் சிறுமி வழக்கு தண்டனை விவரங்கள்!

அயனாவரம் சிறுமி வழக்கில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 15 பேருக்கான தண்டனை விவரங்களை அறிவித்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்.

சென்னை அயனாவரம் அடுக்குமாடிக் குடியிருப்பில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் 17 பேர் கடந்த 2018ம் ஆண்டு ஜூலையில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை, சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், பாபு என்பவர் சிறையிலேயே இறந்துவிட்டார். மீதமுள்ள 16 பேரில் தோட்டக்காரர் குணசேகரை விடுவித்த சிறப்பு நீதிமன்றம், 15 பேரைக் குற்றவாளிகள் என அறிவித்து, அவர்களுக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தது.

`அயனாவரம் சிறுமி வழக்கில் 15-வது நபர் விடுதலை! - சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
சென்னை சிறப்பு நீதிமன்றம்
சென்னை சிறப்பு நீதிமன்றம்
கே.ஜெரோம்

அதன்படி, குற்றவாளிகள் 15 பேருக்கான தண்டனை விவரங்களை சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.என். மஞ்சுளா இன்று அறிவித்தார். இதில், ரவிக்குமார், சுரேஷ், அபிஷேக் மற்றும் பழனி ஆகியோருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளிகளில் 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

03 Feb 2020 6 PM

கிராமத்துக்கு வந்த முதல் பேருந்தை வரவேற்ற மதுரை சிறுமி சஹானா!

மதுரை மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில், ``எங்க கிராமத்துக்கு பஸ் விடணும்" என்று சிறுமி சஹானா கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்படி இன்று அந்த கிராமத்துக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டது. முதல் பேருந்தை சிறுமி சஹானா உள்ளிட்ட கிராமத்தினர் உற்சாகமாக வரவேற்றனர்.

படங்கள் & வீடியோ - என்.ஜி. மணிகண்டன் & ஈ.ஜெ. நந்தகுமார்

அடுத்த கட்டுரைக்கு