Published:Updated:

`8ம் தேதி விடுமுறை எடுக்கக் கூடாது!' - தமிழக அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலர் உத்தரவு #NowAtVikatan

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

03.01.2020 - இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

03 Jan 2020 7 AM

முன்னிலை நிலவரம்!

79 வயது பாட்டி தேர்தலில் வெற்றிபெற்றது முதல் அரசு ஊழியர்களுக்குச் சாப்பாடு இல்லை வரை முதல்நாள் வாக்கு எண்ணிக்கையில் நடந்த சுவாரஸ்யங்களைப் படிக்கக் கீழே கிளிக் செய்யவும்!

உள்ளாட்சி வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு #ElectionUpdate #NowAtVikatan
03 Jan 2020 9 PM

8ம் தேதி விடுமுறை எடுக்கக் கூடாது!

வரும் 8ம் தேதி அனைத்து அரசு ஊழியர்களும் தவறாமல் பணிக்கு வர வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவிட்டிருக்கிறார்.

வரும் 8ம் தேதி தேசிய அளவில் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அன்றைய தினம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் என அனைத்து அரசு ஊழியர்களும் மருத்துவ விடுப்பு தவிர மற்ற விடுப்புகள் எடுக்கக் கூடாது என தலைமைச் செயலாளர் உத்தரவிட்டிருக்கிறார். மேலும், அன்றைய தினம் பணிக்கு வராதவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யவும் அவர் உத்தரவிட்டிருக்கிறார்.

03 Jan 2020 6 PM

பள்ளி விடுமுறை நீட்டிப்பு!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் ஜனவரி 6ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளி கல்வி இயக்குநரகம் அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே ஜனவரி 3ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

03 Jan 2020 5 PM

25 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவு!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் தமிழகத்தின் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணும் பணி நேற்று முதல் நடந்துவருகிறது. பல்வேறு காரணங்களால் வாக்கு எண்ணிக்கை தாமதமான நிலையில், தற்போது 25 மாவட்டங்களில் வாக்கு எண்ணும் பணி முழுமையாக நிறைவடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை

தூத்துக்குடி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் மாவட்ட மற்றும் ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளுக்கான வாக்கு எண்ணும் பணி நிறைவடைந்திருக்கிறது.

03 Jan 2020 3 PM

ஸ்டாலின் அறிக்கை!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றித்தொடர்பாக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. எத்தகைய அராஜகத்தையும், அடாவடிகளையும் மீறி வெற்றி பெறும் வல்லமை, மாபெரும் மக்கள் சக்திக்கு உண்டு என்பதை தேர்தல் முடிவுகள் காட்டி இருக்கின்றன. இதன்மூலம் ஆளுங்கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பெரும்பான்மை வெற்றியை திமுக கூட்டணிக்கு கொடுத்திருக்கும் தமிழக வாக்காளர்களுக்கு நன்றி.

திமுக கூட்டணியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சிறப்போடும், நியாயமாகவும் நேர்மையோடும் செயல்படுவார்கள். மக்கள் நலத்திட்டங்களை உண்மையாகவும், முழுமையாகவும் மக்களுக்குப் பயன்பெறும் திட்டங்களாக மாற்றுவார்கள் என்று உறுதி அளிக்கிறேன்.

இந்தத் தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் மாவட்டங்கள் வாரியாக முகாமிட்டும், பணத்தை வாரி இறைத்தும் அவர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து ஆளும்கட்சியினர் பாடம் கற்பார்களா என்பது சந்தேகம்தான். ஆனால், அதிமுகவுக்குப் பாடம் கற்பிக்க மக்கள் தயாராகி விட்டார்கள் என்பதன் உறுதியான அடையாளம்தான் இது" எனக் கூறியுள்ளார்.

03 Jan 2020 12 PM

தோல்வி ஏன்? - அன்வர் ராஜா

உள்ளாட்சித் தேர்தலில் தனது மகன், மகள் தோல்வி குறித்து பேசியுள்ள அதிமுக சிறுபான்மையினர் அணித் தலைவர் அன்வர் ராஜா, ``குடியுரிமைச் சட்டத்துக்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவித்ததால்தான் உள்ளாட்சியில் தோல்வி ஏற்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்ததால் அதிமுகவுக்கு எதிராக சிறுபான்மையினர் வாக்கு அளித்துள்ளனர். தேசிய குடியுரிமை பதிவேடு நாடு முழுவதும் அமலாகும் என்று சிறுபான்மையினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

சிறுபான்மையினர் அச்சப்படுவதால் அதிமுக தனது முடிவை பரிசீலனை செய்யும் என்று நம்புகிறேன். தமிழகத்தில் தேசிய குடியுரிமை பதிவேட்டை அமல்படுத்தமாட்டோம் என்று தமிழக அரசு கூறும் என்று நம்புகிறேன். தேசிய குடியுரிமை பதிவேட்டை அசாமில் மட்டும் அமல்படுத்துவோம் என்று மத்திய அரசு கூறியதால் அதிமுக ஆதரவளித்தது" எனக் கூறியுள்ளார்.

03 Jan 2020 2 PM

தகர்ந்த சேர்மேன் கனவு!

அ.தி.மு.க எம்.எல்.ஏ பரமேஸ்வரி
அ.தி.மு.க எம்.எல்.ஏ பரமேஸ்வரி

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ளது வலையூர் கிராமம். அந்தக் கிராம முக்கியஸ்தர்கள், ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட மொத்தப் பதவிகளும் ஏலம் விடப்பட்டதாகப் புகார் எழுந்தது.

மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் வலையூர், கரியமாணிக்கம், பாலையூர் உள்ளிட்ட ஊராட்சிகள் உள்ளடக்கிய ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகனுக்கு வாக்களிப்பதற்காகக் கருப்பன் என்பவர் மூலம் 14 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்ததாக எழுந்த புகார் காவல்நிலையம் வரை சென்றது.

நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு முருகனை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் ஶ்ரீதர் வெற்றிபெற்றுள்ளார். இதனால் தனது கணவரை ஒன்றிய சேர்மேன் ஆக்க நினைத்து அதற்காக முயற்சி எடுத்த அ.தி.மு.க பெண் எம்.எல்.ஏ தரப்பு தோல்வியால் துவண்டுபோயுள்ளனர் என்று கட்சியினர் பேசத் தொடங்கியுள்ளனர்.

03 Jan 2020 12 PM

குடும்பத்துடன் தற்கொலை முயற்சி!

தற்கொலை முயற்சி
தற்கொலை முயற்சி

அரியலூர், ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தலில் பல குளறுபடிகள் நடந்திருக்கிறது. வாக்கு எண்ணிக்கையை மறுபடியும் எண்ண சொல்லி குடும்பமே மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சி செய்து கிராம மக்கள் சாலை மறியல் ஈடுபட்ட சம்பவம் அரியலூர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் அருகே உள்ள அல்லிநகரம் ஊராட்சி மன்ற தலைவருக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவராக மருதமுத்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பழனிவேல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடைபெற்றுள்ளதாகவும், எனவே மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி பழனிவேல் ஆதரவாளர்கள் பெரம்பலூர் அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருகட்டத்தில் குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி மேற்கொண்டனர்.

03 Jan 2020 10 AM

தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ், ``மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.

03 Jan 2020 10 AM

தேர்தலில் வெற்றிபெற்றவர் உயிரிழப்பு!

பெரம்பலூர் மாவட்டம், ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மணிவேல் மரணமடைந்துள்ளார். வெற்றிச் சான்றிதழை பெற்றுச் சென்ற நிலையில் மணிவேல் (72) திடீரென உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

03 Jan 2020 9 AM

இரான் ராணுவ தளபதி கொலை!

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்தில் இன்று அதிகாலை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்க ராணுவம் பொறுப்பேற்றுள்ளது, அமெரிக்க அதிபரின் உத்தரவின் பேரில் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் இரான் ராணுவ தளபதி காசெம் சோலைமாணி கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

03 Jan 2020 8 AM

தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

515 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் 180 இடங்களின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தி.மு.க கூட்டணி, 103 இடங்களிலும், அ.தி.மு.க கூட்டணி 69 இடங்களிலும் வென்றுள்ளன. தி.மு.க கூட்டணியில் தி.மு.க 94 இடங்களும், மார்க்சிஸ்ட் 1 இடமும், காங்கிரஸ் 1 இடமும், இந்திய கம்யூனிஸ்ட் 7 இடங்களும் வென்றுள்ளன. மற்ற கட்சிகள் 8 இடங்கள் வென்றுள்ளன.

5067 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 3604 இடங்களின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், 1692 இடங்களில் தி.மு.கவும், 1376 இடங்களில் அ.தி.மு.கவும் மற்ற கட்சிகள் 536 இடங்களிலும் வென்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதுவரை நீலகிரி நாமக்கல், குமரி, திருவாரூர், திருச்சி, கரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் முழுமையாக வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

03 Jan 2020 7 AM

அன்வர் ராஜா மகன், மகள் தோல்வி!

ராவியத்துல் அதபியா
ராவியத்துல் அதபியா

மண்டபம் ஒன்றிய கவுன்சிலுக்கு போட்டியிட்ட அ.தி.மு.க முன்னாள் எம்.பி அன்வர் ராஜாவின் மகள் ராவியத்துல் அதபியா, தி.மு.க வேட்பாளர் சுப்புலட்சுமியிடம் தோல்வி அடைந்தார். அ.தி.மு.க சார்பில் ராவியத்துல் அதபியா போட்டியிட்டார். ராவியத்துல் அதபியா 1,062 வாக்குகள் மட்டுமே பெற தி.மு.க வேட்பாளர் சுப்புலட்சுமி அவரைவிட 1,343 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

அன்வர் ராஜாவின் மகளையடுத்து மகனும் தோல்வி கண்டுள்ளார். மண்டபம் ஒன்றியம் 16வது வார்டு ஒன்றிய கவுன்சில் அ.தி.மு.க வேட்பாளராக அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலி களம் கண்டார். ஆனால் 650 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் தவ்பீக் அலியிடம் தோல்வி அடைந்தார்.

03 Jan 2020 7 AM

2 வேட்பாளருக்கும் வெற்றிச் சான்றிதழ் - சிவகங்கை சர்ச்சை!

`8ம் தேதி விடுமுறை எடுக்கக் கூடாது!' - தமிழக அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலர் உத்தரவு #NowAtVikatan

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட 2 வேட்பாளருக்கும் வெற்றிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க., ஆதரவு வேட்பாளர் வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், கூடுதலாக ஓட்டுப் பெட்டி எண்ணாமல் உள்ளதாக மீண்டும் எண்ணப்பட்டு வேறொரு நபருக்கு வெற்றிச் சான்றிதழ் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை நடந்த இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

03 Jan 2020 7 AM

இதற்கு பெயர் தேர்தலா?- ஜோதிமணி!

ஜோதிமணி
ஜோதிமணி

வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக தி.மு.க ஏற்கனவே குற்றம் சாட்டிய நிலையில், காங்கிரஸ் எம்.பி. ஜோதி மணியும் குற்றம் சுமத்தியுள்ளார். ``எனது சொந்த ஊராட்சி ஒன்றியக் குழு வார்டுஎண் 16 ல் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் வெற்றியை அறிவிக்காமல் 2 மணி நேரத்திற்கு மேலாக இழுத்தடிக்கின்றனர். இப்பொழுது கலெக்டர்,எஸ்.பி,பிடி என ஒட்டுமொத்த அரசு இயந்திரமும்,காவல்துறையும் குவிக்கப்பட்டுள்ளது. நீதிக்குப் போராடிக்கொண்டிருக்கிறோம்.

கரூர் மாவட்டம் க. பரமத்தி ஒன்றியம் 1.அஞ்சூர்- திமுக 2 கூடலூர் மேற்கு காங்கிரஸ் வெற்றிபெற்று இடங்களைப் பல மணி நேரமாக அறிவிக்காமல் நிறுத்திவைத்து இரவோடு இரவாக காவல்துறை குவிக்கப்பட்டு, அதிமுக வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பெயர் தேர்தலா? மக்கள் தேர்வுக்கு மதிப்பில்லையா?" என டுவீட் செய்துள்ளார்.

03 Jan 2020 6 AM

தி.மு.க முன்னிலை!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்னும் முழுமையடையவில்லை. இதுவரை அறிவிக்கப்பட்ட இடங்களில் திமுகவே முன்னிலை வகிக்கிறது. மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் என இரண்டிலுமே திமுகவே முன்னிலை வகிக்கிறது என்றாலும் அதிமுகவும் திமுகவுக்கு ஈடாகக் கணிசமான இடங்களை வென்றுள்ளது.

தற்போதுவரை மாவட்ட கவுன்சிலர் போட்டியில் திமுக 239 இடங்களும், அதிமுக 215 இடங்களும் வென்றுள்ளன. அதேபோல் ஒன்றிய கவுன்சிலர் போட்டியில் திமுக 1945 இடங்களும், அதிமுக 1719 இடங்களும் வென்றுள்ளன. முழுமையான முடிவுகள் தெரிய இன்று மாலை ஆகும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு