Published:Updated:

எங்கள் முகங்கள் எரிக்கப்பட்டு ஆண்டுகள் நாற்பது!

யாழ்ப்பாண நூலகம்
பிரீமியம் ஸ்டோரி
News
யாழ்ப்பாண நூலகம்

சிறிலங்காவை ஆள்கிற இருபெரும் சிங்களக் கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாடானது, தமிழின அழிப்பு. இதன் விளைவாக நிகழ்ந்த வன்முறை வெறியாட்டங்கள் ஏராளம்.

“முதலில் அவர்கள் நூல்களை எரிப்பார்கள். பின்பு மக்களை எரிப்பார்கள்” எனும் அறிஞர் Heinrich Heine கூற்று, ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றில் உண்மையானது. சிங்கள பெளத்த பெருந்தேசியவாத வெறியின் குரூரமான காட்டுமிராண்டித்தனம், யாழ்ப்பாண நூலகத்தை எரியூட்டி நாற்பது ஆண்டுகளாகிவிட்டன. தமிழர்களின் அறிவார்த்த முன்னேற்றத்துக்குக் காரணமான நூல்களைச் சாம்பலாக்கி, சிங்கள இனவெறிக்குக் குருதியூட்டிய சிறில் மத்தியூ, காமினி திஸநாயக்க ஆகிய இவ்விரு ஆட்சியாளர்களும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு உந்துதல் அளித்தவர்கள்; இனப்படுகொலையாளர்கள்; மனித நாகரிகத்திற்கு எதிரானவர்கள். ‘யாழ்ப்பாண நூலக எரிப்பு’ எனும் இந்தச் சரித்திரத் துயர், தமிழர்களின் நினைவுகளில் அணைய மறுக்கும் அழலாய்ச் சிவந்து விரிந்தெழுந்து நிலைத்திருக்கிறது.

சிறிலங்காவை ஆள்கிற இருபெரும் சிங்களக் கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாடானது, தமிழின அழிப்பு. இதன் விளைவாக நிகழ்ந்த வன்முறை வெறியாட்டங்கள் ஏராளம். யாழ்ப்பாண நூலக எரிப்பை வழிநடத்திய இரண்டு சூத்திரதாரிகளும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள். பெளத்த சிங்கள இனவாத ராஜதந்திரிகளின் பிறப்பிடமாக விளங்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே இந்தக் கொடுமூழி அரங்கேறியது. இதற்காக சிங்கள தேசம் ஒருபோதும் வெட்கித்தது கிடையாது. தங்களுடைய குரல்களை உயர்த்தி ஆட்சியாளர்களை நோக்கிக் கேள்வி எழுப்பியதில்லை. இந்த நாற்பதாண்டுகளில், இக்கொடுங்குற்றத்திற்காக ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை. அவ்வளவு ஏன், விசாரிக்கப்படவே இல்லை. இந்த மோசமான அழித்தொழிப்பாளர்களிடமே, முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்து உள்ளக விசாரணை செய்யுமாறு உலகம் பொறுப்பளித்திருக்கும் வேடிக்கை நிகழ்ந்திருக்கிறது. மேலும், தமிழர் இனப்படுகொலையில் இலங்கை சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டுக் கொலையாளிகள்.

எங்கள் முகங்கள் எரிக்கப்பட்டு ஆண்டுகள் நாற்பது!

“இந்தப் புத்தக எரிப்பு, தமிழர்களது அறிவார்த்த உயர்வை அழித்து, அவர்களைக் கீழ்மைப்படுத்திவிடலாம் என்ற முட்டாள் கொள்கையிலிருந்துதான் பிறந்திருக்க முடியும். இத்தகைய கொள்கை, அறிவையும் அதன் உபகரணங்களையும் பகை கொண்ட கீழ்மட்ட ரெளடிக்கொள்கை. இத்தகைய ஒரு கொள்கை உள்ள ரெளடிகள், ராஜீய கேந்திரத்தில் இன்றைய உலகின் எந்தப் பகுதியிலும் இருப்பதாகத் தோன்றவில்லை” - யாழ் நூலக எரிப்பு தொடர்பாக, கவிஞர் பிரமிள் அவர்களின் இந்தக் கூற்று இன்றும் பொருந்திப் போகிறதல்லவா!

இலங்கைத்தீவில் நிகழும் இனப்பிரச்னை சார்ந்து, தமிழ் அறிவுச்சூழலில் நிகழும் சில விவாதங்களும் உரையாடல்களும் சோர்வு தரக்கூடியன. எந்தவித அறிதலுமற்று ஏதேனுமொரு கருத்தை ஈழத்தமிழர் விவகாரத்தில் வெளிப்படுத்தலாம் என்கிற மலினத்தின் அதிரடி அறிவுஜீவிகள், சமூக வலைதளங்களில் பெருகியுள்ளனர். அந்தகன், வேழத்தைத் தடவியதைப்போலவே இவர்களும் ஈழப்பிரச்னையைக் காண்கிறார்கள். அழிவுகளும் அவலங்களும் இவர்களுக்கு ஒரு சம்பவமாய் மட்டுமே புலப்படுகிறது. ஆனால், ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களில் ஒவ்வொரு நாளும் ஒரு பெருந்துயரின் நினைவாகவே புலர்கிறது.

எங்கள் முகங்கள் எரிக்கப்பட்டு ஆண்டுகள் நாற்பது!

யாழ்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு – யாழ் நகரமே எரியூட்டப்பட்டு சில நாள்களில், அதாவது 1981-ம் ஆண்டு ஜூன் 5-ம் நாள். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி அதன் தலைவர் பீட்டர் கெனமன் தலைமையில் யாழ்ப்பாணம் சென்று, நடந்த அழிவுகளைப் பார்வையிட்டு வெளியிட்ட அறிக்கை, “நாட்டின் இந்தப் பகுதியை ‘எதிரி அரசின் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தைப்போல’ அரசாங்கம் நடத்தும்வரை, யாழ்ப்பாணத்தில் இயல்பான நிலைமைகளை மீட்டெடுப்பது சாத்தியமில்லை என்று கட்சி உறுதியாக நம்புகிறது” என்று சுட்டிக்காட்டியது. இந்தப் பேரழிவை மையப்படுத்தி கவிஞர் சேரன் எழுதிய ‘இரண்டாவது சூரிய உதயம்’ கவிதை வரலாற்றுச் சாட்சியமான இலக்கியம்.

1930-ம் ஆண்டு, ஜெர்மனி பெர்லின் வீதியில், நூற்றுக்கணக்கான புத்தகங்கள் நாசிகளால் எரிக்கப்பட்டு வீதிகளில் சாம்பல் பரவியதைப் போன்று, சிங்களக் காடையரின் பயங்கரவாதச் செயலினால் யாழ்ப்பாண நகரம் முழுக்கச் சாம்பலாய்ப் பறந்தது. வான் நோக்கி எழும் நூல்களின் அழிவை தூரத்தேயிருந்து பார்த்த தாவீது அடிகளார் அந்த கணத்திலேயே உயிரிழந்தார். ஓலைச்சுவடிகளும் அரிதான பல்லாயிரக்கணக்கான நூல்களும் இல்லாமற்போயின. பத்தாயிரத்திற்கு மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகளும் அழிவடைந்தன. தெற்காசியாவின் பெறுமதிமிக்க அறிவுச்சுரங்கத்தை இனவாதம் பலியெடுத்து நான்கு தசாப்தங்கள் ஆகியிருக்கின்றன. ஈழத்தமிழர்களின் இதயத்தைக் கொதிப்புறச்செய்யும் ‘யாழ் நூலக எரிப்பு’ எனுமிந்த வடுவை இயக்குநர் சோமிதரன் ‘எரியும் நினைவுகள்’ என்ற ஆவணப்படத்தின் மூலம் வரலாற்றில் பதிவுசெய்திருக்கிறார்.

எங்கள் முகங்கள் எரிக்கப்பட்டு ஆண்டுகள் நாற்பது!

நீதியற்ற சிங்களக் கொடுங்கோலர்களும் வன்கவர் ஆட்சியாளர்களும் இந்த நாற்பதாண்டுகளில் நிகழ்த்திய எண்ணுக் கணக்கற்ற இனப்படுகொலைக்கான தடயங்களையும் எரியூட்டத் தொடங்கியுள்ளனர். நினைவுத்தூபிகளை, நினைவுக்கற்களை இடித்துடைக்கின்றனர். எந்தவொரு அரசியல் வலிமையுமற்று நிர்க்கதியாக நிற்கும் ஈழத்தமிழர்களின் கண்ணீருக்கும் கஞ்சிக்கும் தடைவிதிக்கும் வன்கொடுமை நிகழத் தொடங்கியிருக்கிறது. வழமைபோல் உலகமோ வேடிக்கை பார்க்கிறது. ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனம். மாபெரும் மானுடப் பேரவலத்தைச் சந்தித்தும் அவர்கள் தமது அடிப்படை உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். சர்வதேச நீதிக்காகக் காத்திருக்கிறார்கள். சிதிலமாக்கப்பட்ட வணக்கஸ்தலங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், வீடுகள், காயங்கள், சவங்கள், நினைவுகள் என யாவும் நீதிக்காகக் காத்திருப்பதைப்போல எரியுண்ட பல்லாயிரக்கணக்கான புத்தகங்களும் நீதிக்காகக் காத்திருக்கின்றன. ஆனால், ‘நீதியோ சாம்பலாகிவிட்டது’ என்கிறது உலகம்!