Published:Updated:

மும்பை: நங்கூரமிட்ட படகுகளை நகரச் செய்த டவ்தெ புயல் - 410 பேரை மீட்க விரைந்த கடற்படை கப்பல்கள்

கேட்வே ஆப் இந்தியாவில் ராட்சத அலைகள்
கேட்வே ஆப் இந்தியாவில் ராட்சத அலைகள்

மும்பை அருகே நடுக்கடலில் இரண்டு படகுகளில் இருந்த ஒ.என்.ஜி.சி.ஊழியர்கள் உட்பட 410 பேரை சிக்கிக் கொண்டனர்.

டவ்தே புயல் மும்பை வழியாக குஜராத்தை நோக்கி நகர்கிறது. இதனால் மகாராஷ்டிராவில் 12 ஆயிரம் பேர் பத்திரமாக பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். புயல் காரணமாக மும்பையில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் 150-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்து மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. மழை சேத நிலவரத்தை மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்தாக்கரே ஆய்வு செய்து வருகிறார். மும்பை விமான நிலையத்தில் போதிய அளவுக்கு வெளிச்சம் இல்லாததால் பிற்பகல் 4 மணி வரை விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

மும்பை கடற்கரை
மும்பை கடற்கரை

இதற்கிடையே மும்பை தென்மேற்கு பகுதியில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹீரா என்ற ஒ.என்.ஜி.சி எண்ணெய் கிணற்றில் பணியாற்றும் ஊழியர்கள், இருந்த படகு பாதுகாப்பான முறையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் படகு நங்கூரத்தை இழுத்துக்கொண்டு நகர ஆரம்பித்து விட்டது. இதையடுத்து காப்பாற்றும் படி படகில் இருந்து சிக்னல் கொடுக்கப்பட்டது. உடனே ஐ.என்.எஸ்.கொச்சி உட்பட இரண்டு கடற்படை போர்க்கப்பல்கள் சிக்னல் வந்த திசையை நோக்கி சென்றுள்ளன. இது தவிர மீட்புப்பணிக்காக வேறு கப்பல்களும், ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் இருப்பதாக கடற்படை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதே போன்று 137 பேருடன் மற்றொரு படகு மும்பையில் இருந்து 8 கடல் மைல் தூரத்தில் சிக்கியுள்ளது. அப்படகில் இருந்தும் காப்பாற்றும் படி எச்சரிக்கை சிக்னல் வந்தது. உடனே ஐ.என்.எஸ்.கொல்கத்தா என்ற போர்க்கப்பல் சம்பவ இடத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இரண்டு படகுகளிலும் சேர்த்து 410 பேர் நடுக்கடலில் சிக்கிக்கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே ஹீரா எண்ணெய் கிணறு அருகில் படகு கவிழ ஆரம்பித்திருப்பது குறித்து ஒ.என்.ஜி.சி நிர்வாகம் வெளியிட்ட செய்தியில், ```261 பேருடன் இருந்த படகு மிகவும் பாதுகாப்பான முறையில் தான் நங்கூரமிடப்பட்டு இருந்தது.

மழைநீரில் சிறுவன் சைக்கிளில் செல்கிறான்
மழைநீரில் சிறுவன் சைக்கிளில் செல்கிறான்

ஆனால் புயல் காரணமாக படகு நங்கூரத்தை இழுத்துக்கொண்டு படகு நகரத் தொடங்கிவிட்டது. ஆனால் இப்போது படகு மீண்டும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது . இதன் மூலம் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஹீரா எண்ணெய் கிணற்றில் இருந்து தினமும் 50 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெய் எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே புயல் காரணமாக மும்பையில் மழை கொட்டித்தீர்த்தது. நேற்று ஒரே நாளில் 200 மிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மாநகராட்சி ஊழியர்களும், தீயணைப்பு துறையினரும் தேவையான அளவு நிறுத்தப்பட்டு மழை நீர் வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு