Published:Updated:

`10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி; ஹாட்ரிக் பைனல்!' - சாதித்த இளம் இந்திய அணி #INDvPAK #NowAtVikatan

ஜெய்ஸ்வால் - சக்சேனா
ஜெய்ஸ்வால் - சக்சேனா ( Twitter )

4.2.2020 இன்றைய முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு!

04 Feb 2020 7 PM

ஜூனியர் உலகக் கோப்பையில் சாதித்த இந்தியா! #INDvPAK

பாகிஸ்தான் அணிக்கெதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

ஜெய்ஸ்வால் - சக்சேனா
ஜெய்ஸ்வால் - சக்சேனா
Twitter

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் அணி, 43.1 ஓவர்களில் 172 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் சுஷாந்த் 3, தியாகி மற்றும் பீஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து 173 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 35.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. இதன்மூலம், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி முதல் அணியாக ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது. தொடக்க வீரரான ஜெய்ஸ்வால், 105 ரன்களுடனும் சக்சேனா 59 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேசம் மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதும் மற்றொரு அரையிறுதிப் போட்டி வரும் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

04 Feb 2020 5 PM

இந்திய அணிக்கு 173 ரன்கள் இலக்கு #INDvPAK

ஜூனியர் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிவருகின்றன. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் அணி, இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 43.1 ஓவர்களுக்கு 172 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி
இந்திய அணி

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரோஹைல் நாசிர் 62 ரன்களும் ஹைதர் அலி 56 ரன்களும் அடித்தனர். இந்திய அணி தரப்பில் சுஷாந்த் மிஸ்ரா 3 விக்கெட்டுகளையும் கார்திக் தியாகி மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

04 Feb 2020 1 PM

5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து!

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நடக்கவிருந்த பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவித்த உடனே அதற்கு பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக ஆளும் அதிமுக அரசுடன் கூட்டணியில் இருந்து கட்சிகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இந்த நிலையில் தான் தேர்வை ரத்து செய்து அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மாணவர்களின், பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று ரத்து செய்யப்படுவதாகவும், மேலும் ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்றும் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

04 Feb 2020 3 PM

ட்ரெண்டிங்கில் #ReleasePerarivalan!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ‘பேரறிவாளன் வாக்குமூலத்தை முழுமையாகப் பதிவு செய்யவில்லை' என்று சில ஆண்டுகளுக்கு அந்த வழக்கை விசாரித்த தியாகராஜன் ஐபிஎஸ் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. பேரறிவாளன் கைதானதில் இருந்து இன்று வரை அவரது தாய் அற்புதம் அம்மாள் விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி, அதை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு அனுப்பி வைத்தது. பல மாதங்களாக கிடப்பில் கிடக்கும் இந்த கோப்பில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல், பேரறிவாளனுக்கு ஆதரவாக #ReleasePerarivalan என்கிற ஹேஷ்-டேக் டிரெண்டாகி வருகிறது.

04 Feb 2020 12 PM

கையெழுத்து இயக்கம்!

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தி.மு.க கூட்டணி சார்பில் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி கொளத்தூரில் உள்ள திரு வி க நகர் பேருந்து நிலையம் அருகே தி.மு.க தலைவர் ஸ்டாலின் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக இன்று காலை குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வணிகர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், பேருந்து பயணிகள் என பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றார்.

04 Feb 2020 8 AM

இன்ஷூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

மத்திய பட்ஜெட்டில் மத்திய அரசிடம் உள்ள சில எல்.ஐ.சி பங்குகளை விற்க அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அகில இந்திய இன்ஷூரன்ஸ் ஊழியர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், பங்குகளை விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு மணி நேரம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். மத்திய அரசைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்தவும் ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு