Published:Updated:

'சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!'- இர்பான் பதான் அறிவிப்பு #NowAtVikatan

04.01.2020 - இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

இர்பான் பதான்
இர்பான் பதான்
04 Jan 2020 5 PM

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் அறிவித்துள்ளார். 2003-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இர்பான் பதான் அறிமுகமானார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை படைத்தவர் இர்பான். இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு இர்பான் உறுதுணையாக இருந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்த இர்பான் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்துக்கு விடை கொடுத்துள்ளார். இடதுகை பந்துவீச்சாளரான இர்பான் இந்திய அணிக்காக 29 டெஸ்ட், 120 ஒருநாள் போட்டிகள் மற்றும் 24 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 301 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

04 Jan 2020 3 PM

நாங்களும் வெற்றி பெற்றோம்!

'சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!'- இர்பான் பதான் அறிவிப்பு
#NowAtVikatan

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் 2 -ம் தேதி முதல் வெளியானது. வாக்கு எண்ணிக்கை தாமதமாக முடிந்த பல இடங்களில் நேற்று இரவு வரை வாக்கு எண்ணும் பணி நடந்தது. தமிழகம் முழுவதும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. இந்நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பிடித்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய கவுன்சில் பதிவிக்கு போட்டியிட்டவர்களில் 23 பேரும், மாவட்ட கவுன்சில் பதவிக்கு போட்டிய்ட்டவர்களில் 3 பேரும் வெற்றி பெற்றிருப்பதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.

04 Jan 2020 1 PM

ஊராட்சித் தலைவராகப் பதவியேற்க இடைக்கால தடை!

தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவுகள் கடந்த இரண்டு நாள்களாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. சிவகங்கை மாவட்டம், சங்கராபுரம் ஊராட்சியில் தேவி மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவரும் போட்டியிட்டுள்ளனர். முதலில் தேவி வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாகக் கூறப்பட்டார். இது அப்பகுதியில் பெரிய சர்ச்சையாக வெடித்தது.

இதையடுத்து பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து தேவி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், புகழேந்தி அடங்கிய அமர்வு, ஊராட்சி தலைவராக பிரியதர்ஷினி பதவியேற்க இடைக்காலத் தடை விதித்துள்ளனர்.

04 Jan 2020 12 PM

பி.ஹெச் பாண்டியன் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி

இன்று காலை உடல்நலக் குறைவால் உயிரிழந்த அ.தி.மு.க நிர்வாகியும் முன்னாள் சபாநாயகருமான பி.ஹெச் பாண்டியனின் உடல் சென்னை அண்ணாநகரில் உள்ள அரவது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், “ அண்ணன் பி.ஹெச் பாண்டியன் அ.தி.மு.கவுக்காக பாடுபட்டு உழைத்தவர். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் கழகத்துக்காக அயராது உழைத்தவர். அதிமுகவின் சட்ட ஆலோசகராக பொறுப்பேற்றுத் திறம்பட பணியாற்றியவர். சட்டப்பேரவை தலைவராக இருந்து தனக்கென தனி முத்திரை பதித்தவர். அவரது இழப்பு கழகத்துக்குப் பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
04 Jan 2020 11 AM

விரைவில் மாநகராட்சி தேர்தல்!

சென்னை கோயம்பேட்டில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். “இரண்டு கட்ட தேர்தலிலும் மொத்தமாக 77.46% வாக்குகள் பதிவாகின. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் வரும் 6-ம் தேதி காலை 10 மணிக்குப் பதவியேற்பார்கள். 25 பதவியிடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் தவறு நடந்திருந்தால் வீடியோ ஆதாரம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.” என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகப் பேசியுள்ளார்.

04 Jan 2020 12 PM

வீட்டுக்குள் விவசாயம்!

தூத்துக்குடி ஸ்காட் வேளாண் அறிவியல் மையம் மற்றும் பசுமை விகடன் இணைந்து வழங்கும் "வீட்டுக்குள் விவசாயம்" கருத்தரங்கு நெல்லை எப்.எக்ஸ் பொறியியல் கல்லூரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் எம்.பி விஜிலா சத்யானந்த், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பூச்சியியல் துறை வல்லுநர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் விவசாயிகள், பெண் சுய உதவிக் குழுவினர், கல்லூரி, பள்ளி மாணவர்கள் என 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

04 Jan 2020 10 AM

பி.ஹெச்.பாண்டியன் உடல்நலக் குறைவால் மரணம்!

தமிழக முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் உடல்நலக் குறைவால் சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 75

பி.ஹெச்.பாண்டியனுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கடந்த 10-ம் தேதி வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

'சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!'- இர்பான் பதான் அறிவிப்பு
#NowAtVikatan

உடல்நலம் குன்றிய நிலையில் சிகிச்சைபெற்று வந்த அவர், இன்று மரணமடைந்தார். அவரது உடல் பொதுமக்களும் அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 3 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு அண்ணாநகர் சிந்தாமணி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

04 Jan 2020 11 AM

பள்ளியில் விவசாயம் செய்யும் மாணவர்கள்..!

கோவை, பெரிய நாயக்கன் பாளையத்தில் உள்ள புனித ஜான் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளியிலேயே பயிர் விளைவித்து விவசாயம் செய்துள்ளனர். அறுவடை நாளான இன்று மாணவர்கள் இணைந்து பயிர்களை அறுவடை செய்து வருகின்றனர்.

பள்ளியிலேயே விவசாயம் செய்யும் மாணவர்கள்!! இன்று அவர்களின் அறுவடை நாள்!!! இடம் - புனித ஜான் மெட்ரிக் பள்ளி, பெரியநாயக்கன்பாளையம், கோவை.

Posted by Vikatan EMagazine on Friday, January 3, 2020
04 Jan 2020 9 AM

பேட்டிங்கில் அசத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

அகில இந்திய குடிமைப் பணி மற்றும் மத்தியப் பணி அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த விளையாட்டுப் போட்டிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு தொடங்கிவைத்தார். வெள்ளை நிற பேன்ட், சட்டையுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து பேசுகையில், ``பல்வேறு பணிச் சுமைகளால் ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க விளையாட்டு அவசியம். உடல் ஆரோக்கியமாக இருந்தால் எந்த வயதிலும் விளையாடலாம்'' என்று பேசினார்.

அதன்பின்னர் கிரிக்கெட் மைதானத்துக்குச் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பேட்டிங் செய்தார். மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பந்துவீச்சில், இரண்டு பந்துகள் பேட்டிங் செய்து போட்டியை அவர் தொடங்கிவைத்தார்.

படங்கள்: வி.ஸ்ரீனிவாசுலு

04 Jan 2020 8 AM

சென்னையில் இரண்டாவது நாளாகப் பனிமூட்டம்!

பனிமூட்டம் காரணமாக சென்னையில் தரையிறங்கவேண்டிய 4 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. 10 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், தே.அசோக் குமார், வி.சதீஷ்குமார்

சென்னையில் கடந்த சில நாள்களாகப் பனிமூட்டம் நிலவி வருகிறது. நேற்று நிலவிய பனிமூட்டத்தால் 10-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பனிமூட்டம் நிலவியது. இதனால், சென்னையில் இன்று அதிகாலை தரையிறங்க வேண்டிய மஸ்கட், ஆஸ்திரேலியா உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த 4 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. மேலும், 10 விமானங்களின் புறப்பாடு தாமதம் ஆனது.