அலசல்
சமூகம்
Published:Updated:

200 ரூபாய் கூலி... உயிரைவிட்ட தொழிலாளர்கள்... விதிகளுக்குள் வராத மதுரை பட்டாசு ஆலைகள்!

வல்லரசு, கோபிநாத், விக்கி, அம்மாசி
பிரீமியம் ஸ்டோரி
News
வல்லரசு, கோபிநாத், விக்கி, அம்மாசி

அன்னைக்கு வேலையை முடிச்சுட்டு சாப்பிடப் போகும்போது, திடீர்னு பயங்கரச் சத்தம். என்ன, ஏதுன்னு யோசிக்கிறதுக் குள்ளே நாங்க தூக்கி எறியப்பட்டோம்

‘‘இருநூறு ரூவா கூலிக்கு இப்பிடி உயிர் போகும்னு யாரு கண்டா?’’ என்று தலையில் அடித்துக்கொண்டு கதறுகிறார்கள் பட்டாசு விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள்!

மதுரை மாவட்டம், வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகுசிறை கிராமத்தில், கடந்த 10-11-2022 அன்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் பலியான சம்பவம் அந்த வட்டாரத்தையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. விபத்தில் காயமடைந்த 13 பேர் மதுரை, திருமங்கலம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருக்கிறார்கள். விபத்தில் பலியான வடக்கம்பட்டியைச் சேர்ந்த வல்லரசு, கோபிநாத், விக்கி ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். இவர்களில், கோபிநாத்துக்கு ஏழு மாதங்களுக்கு முன்புதான் திருமணமானது. கோபிநாத்தின் மனைவி கர்ப்பமாக இருக்கும் சூழ்நிலையில்தான் இந்தப் பெருஞ்சோகம் நிகழ்ந்திருக்கிறது.

வல்லரசு, கோபிநாத், விக்கி,
வல்லரசு, கோபிநாத், விக்கி,

மூன்றாம் நாள் காரியத்த்தை முடித்துவிட்டு வந்த விக்கியின் தம்பி ஜெயசீலன் நம்மிடம் பேசியபோது, ‘‘கடந்த சில வருஷங்களுக்கு முன்னாலதான் எங்க அப்பா இறந்தார். ப்ளஸ் டூ படிச்சு முடிச்ச அண்ணன் விக்கி, ராணுவத்துல சேரத் தயாராகிக்கிட்டிருந்தார். அதுவரைக்கும் வருமானத்துக்காக, பட்டாசு ஆலை வேலைக்குப் போய்வந்தார். அதுக்குள்ளே இப்படி ஆகிடுச்சு. இப்ப நானும் அம்மாவும் தனியாயிட்டோம்’’ என்று பேச முடியாமல் விம்மினார்.

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் கையில் கட்டுடன் சிகிச்சை பெற்றுவரும் பாண்டியம்மாள், “ரொம்ப காலமா அங்கே வேலை பார்க்கிறேன். அன்னைக்கு வேலையை முடிச்சுட்டு சாப்பிடப் போகும்போது, திடீர்னு பயங்கரச் சத்தம். என்ன, ஏதுன்னு யோசிக்கிறதுக் குள்ளே நாங்க தூக்கி எறியப்பட்டோம். வெடித்துச் சிதறுன கல்லும் மண்ணும் எங்க மேல விழுந்து உடம்பெல்லாம் பலத்த காயம். எங்கே பார்த்தாலும் ஒரே கதறலா கேட்டுச்சு. வாழவேண்டிய வாலிபப் புள்ளைங்க அஞ்சு பேர் செத்துப்போயிட்டாங்க’’ என்று விபத்தின் அதிர்ச்சி விலகாமல் பேசினார்.

அம்மாசி
அம்மாசி

சிகிச்சையிலிருந்த மாயத்தேவன், ‘‘விவசாயம் பெரிய அளவுல இல்லை. அந்தப் பட்டாசு ஆலைதான் எங்களுக்கெல்லாம் வேலை கொடுத்துக்கிட்டிருக்கு. சில வருஷங்களுக்கு முன்னால நடந்த பட்டாசு ஆலை விபத்துல என் மகன் இறந்துபோனான். ஆனாலும், இதைவிட்டா பக்கத்துல வேற வேலை இல்லியே?’’ என்றார் ஆற்றாமையுடன்.

சம்பவம் நடந்த வி.பி.எம் ஆலைக்குச் சென்று பார்த்தோம். தோட்டத்துக்குள் அமைக்கப் பட்டிருந்த மருந்து குடோனுடன், சிறு சிறு கட்டடங்களுடன் பட்டாசு ஆலை இயங்கி வந்திருக்கிறது. விபத்து நிகழ்ந்த இடத்தை ஆய்வு செய்துகொண்டிருந்த சிந்துபட்டி காவல் நிலைய அதிகாரிகளிடம் பேசியபோது, ‘‘வி.ஏ.ஓ கொடுத்த புகாரின் அடிப்படையில் எட்டுப் பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்திருக்கிறோம். ஆலையின் லைசென்ஸ்தாரரான அனுசியாவைக் கைது செய்திருக்கிறோம். ஆனால், அவரின் கணவர் வெள்ளையன் தலைமறைவாகிவிட்டார். இந்த ஆலை உரிமையாளரின் அண்ணன் நடத்திய பட்டாசு ஆலையில் 2009-ல் பெரிய விபத்து ஏற்பட்டு 18 பேர் இறந்தார்கள். அதன் பிறகும் எந்த விதிகளுக்கும் கட்டுப்படாமல் ஆலை நடத்தியதே விபத்துக்குக் காரணம்’’ என்றனர்.

விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களைக் காணவந்த பட்டாசு ஆலை உரிமையாளரின் உறவினரிடம், ‘‘பாதுகாப்பு இல்லாமல், விதிகளை மீறி ஆலை நடத்தலாமா?’’ என்று நாம் கேட்டபோது, ‘‘அதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. என்ன வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள்’’ என்று கோபத்துடன் கூறிவிட்டு இடத்தைக் காலிசெய்தார்.

ஜெயசீலன், பாண்டியம்மாள், மாயத்தேவன்
ஜெயசீலன், பாண்டியம்மாள், மாயத்தேவன்

சம்பவம் நடந்தவுடன் அதிகாரிகளுடன் நிகழ்விடத்துக்கு வந்த அமைச்சர் மூர்த்தி, ‘‘இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்ச ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக கலெக்டர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்படும். விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்றார்.

இதற்கிடையே, பட்டாசு ஆலை விபத்துகளுக்கான காரணம் குறித்து நம்மிடம் பேசிய அதிகாரிகள் சிலர், ‘‘விருதுநகர் மாவட்டத்தில், அதிகமான எண்ணிக்கையில் பட்டாசு ஆலைகள் இயங்கிவருவதால், விதிமீறல்களில் ஈடுபடுவோரைக் கண்காணிக்க தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககக் கூடுதல் இயக்குநர் தலைமையில் நடமாடும் குழு செயல்படுகிறது. அது மட்டுமில்லாமல் மத்திய அரசின் பெட்ரோலிய மற்றும் வெடிபொருள்கள் பாதுகாப்பு நிறுவனமும் அங்கு செயல்பட்டுவருவதால் தொடர் கண்காணிப்பு இருக்கிறது.

மூர்த்தி
மூர்த்தி

ஆனால், மதுரை மாவட்டத்தில் சிறிய எண்ணிக்கையிலேயே பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன. எனவே, கலெக்டர் மற்றும் டி.ஆர்.ஓ கட்டுப்பாட்டில்தான் அனைத்துக் கண்காணிப்புகளும் இருக்கின்றன. இந்த நிலையில், வீரியமான வெடிகளுக்கு வடக்கம் பட்டி ஊர் ரொம்பவும் பிரபலமாகிவிட்டது. அதனால் நான்கு மடங்கு வீரியமான வேதிப் பொருள்களைக் கலந்து மிகவும் ஆபத்தான முறையில் வாணவெடிகளைத் தயாரிக்கிறார்கள். திருமங்கலம் வட்டார வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்குச் சேரவேண்டியது சேர்ந்துவிடுவதால் ஆலை விதிமீறல்களைக் கண்டுகொள்வதில்லை’’ என்றனர்.

நிவாரணம் கொடுப்பதோடு நின்றுவிடாமல், இனியாவது விதிகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்துமா அரசு?!