Election bannerElection banner
Published:Updated:

வயது 5, வரைந்தது 1000 ஓவியங்கள்... கரூர் சிறுமியின் அசத்தல் ஓவிய கண்காட்சி!

அக்ஷிதா
அக்ஷிதா ( நா.ராஜமுருகன் )

யு.கே.ஜி படிக்கும் 5 வயது அக்ஷிதா, 1,000 ஓவியங்களை வரைந்திருக்கிறார். அதோடு, 300 ஓவியங்களைக் கொண்டு ஓவிய கண்காட்சியும் நடத்தி, கரூர் மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.

குழந்தைப் பருவம் என்பது, அவர்களோடு ஒட்டிப்பிறந்த ஏதோ ஒரு திறமை விதையாக விழுவதற்கான பருவம். கையில் கிடைத்த பென்சிலைக் கொண்டு சுவரில் கிறுக்கத் தோன்றும். சாவி கொடுத்து ஓடும் பொம்மையை உடைத்து, எப்படி ஓடுகிறது என்று ஆராய தோன்றும். ஆனால், குழந்தைகளுக்குள் விதையாக விழுந்து முளைக்க வேண்டிய அத்தனை திறமைகளையும், `சுவத்துல கிறுக்கிட்டியா, பொம்மையை உடைச்சுட்டியா?' என்று பிஞ்சிலேயே கருகிப்போக வைத்துவிடுகிறோம்.

அக்ஷிதா வரைந்த ஓவியங்கள்
அக்ஷிதா வரைந்த ஓவியங்கள்
நா.ராஜமுருகன்

ஆனால் ஆனந்தராஜ், இரண்டரை வயதில் சுவரில் கிறுக்கிய தன் மகள் அக்ஷிதாவை, தட்டிக்கொடுத்து உச்சிமுகர்ந்தார். மூன்று வயதில் ஓவிய கிளாஸுக்கு அனுப்பினார். விளைவு, யு.கே.ஜி படிக்கும் 5 வயது அக்ஷிதா, 1,000 ஓவியங்களை வரைந்திருக்கிறார். அதோடு, 300 ஓவியங்களைக் கொண்டு ஓவியக் கண்காட்சியும் நடத்தி, கரூர் மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.

கரூர் வெண்ணைமலை பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். தனியார் நிதி நிறுவன மேலாளராக உள்ளார். இவரின் மனைவி ஷோபனா. இந்த தம்பதியின் ஒரே மகள்தான் அக்ஷிதா. தனியார் பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறார். இவர் வரைந்த 300 ஓவியங்களையும், 10-க்கும் மேற்பட்ட க்யூட் க்ளே சிற்பங்களையும், அவரின் பெற்றோர் கண்காட்சியாகக் காட்சிப்படுத்தியிருந்தனர். சுமதி ரத்தின மஹாலில் நடந்த அந்தக் கண்காட்சியை, 800-க்கும் மேற்பட்டவர்கள் கண்டுகளித்திருக்கிறார்கள். மகள் வரைந்த ஓவியங்களை கண்கள் விரிய மக்கள் பார்த்துக்கொண்டிருப்பதை, கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய பார்த்துக்கொண்டிருந்தார் ஆனந்தராஜ். அவரிடம் பேசினோம்.

பெற்றோருடன் அக்ஷிதா
பெற்றோருடன் அக்ஷிதா
நா.ராஜமுருகன்
`ஒரு மாணவர், ஒரு மரம்!' - ஊக்கத்தொகையுடன் மரம் வளர்க்க வைக்கும் `பலே' திட்டம்

``அக்ஷிதாகிட்ட வயசுக்கு மீறிய பொறுமை, பொறுப்பு இருக்கு. இரண்டரை வயசா இருக்கும்போது, பென்சிலை எடுத்து சுவத்தில் கிறுக்க ஆரம்பிச்சாங்க. கலரிங் பண்ற புத்தகங்களை வாங்கிக் கொடுத்தா அதை அன்றைக்கே வரைஞ்சு முடிச்சிருவாங்க. அந்த ஆர்வத்தைப் பார்த்துட்டு 3 வயதில் அவங்களுக்கு வீட்டிலேயே ஓவிய வகுப்புக்கு ஏற்பாடு பண்ணினோம். அதன் பிறகு, ஓவிய ஆசிரியையே ஆச்சர்யப்படும் அளவுக்கு, அவங்க வரைய ஆரம்பிச்சாங்க.

பென்சிலை கையில் எடுத்துட்டா, வரைஞ்சு முடிக்காம கீழே வைக்க மாட்டாங்க. தினமும் குறைஞ்சது 15 ஓவியங்களை வரைவாங்க. நாலு வயசில் இருந்து சூப்பரா ஓவியம் வரைய ஆரம்பிச்சாங்க. 5 வயசுக்குள்ள 1,000 ஓவியங்களை வரைஞ்சாங்க. என் மகளோட இந்தத் திறமையை ஊக்குவிக்கணும்னு நினைச்சேன். அதோடு, மற்ற பெற்றோர்களுக்கும், அவங்க குழந்தைகளை ஊக்கப்படுத்த நாம் பண்ணும் முயற்சி உந்துதலா இருக்க வேண்டும்னு நினைச்சேன். அதற்காகத்தான், அக்ஷிதாவின் ஓவிய கண்காட்சி - 2021 என்ற ஷோவை நடத்தத் திட்டமிட்டோம்.

அக்ஷிதாவை பாராட்டும் அண்ணாமலை
அக்ஷிதாவை பாராட்டும் அண்ணாமலை
நா.ராஜமுருகன்

இந்தக் கண்காட்சியை முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை தொடங்கி வைத்தார். அக்‌ஷிதா ஓவியத்தில் மட்டுமல்ல, படிப்பிலும் திறமைசாலிதான். படிப்பு, விளையாட்டு, ஓவியம்னு ஏல்லாவற்றிலும் முதலிடம்தான். தவிர, பாட்டு, டென்னிஸ், பாஸ்கட் பால், நீச்சல்னு பல விசயங்களிலும் ஆர்வமா இருக்காங்க. அவங்க காணும் கனவையெல்லாம், அவங்க எடுக்கும் முயற்சிகளை எல்லாம் தொடர்ந்து ஊக்கப்படுத்திக்கிட்டே இருப்போம்" என்றார் நெகிழ்ச்சியுடன்.

அக்ஷிதாவின் ஓவிய ஆசிரியை அமுதா, ``ஓவியம் வரைவதில் அக்ஷிதாவின் ஆர்வம் அபாரம். நானே `போதும் பாப்பா'னு சொன்னாலும், தொடர்ந்து வரைவாங்க. அதேபோல், நான் கிளாஸூக்கு வருவதற்குள், அவங்க என்னை இம்ப்ரஸ் பண்ண நாலைஞ்சு, ஓவியங்களை வரைஞ்சு வச்சுருப்பாங்க. அ, க னு எழுத்துகளை எழுதினாகூட, `எழுத்துகளை வரையுறேன்'னுதான் சொல்வாங்க.

மூணு வயசுல இவங்களுக்கு கிளாஸ் எடுக்கும்போதே, இவங்களுக்கு இயல்பிலேயே தனித்தன்மை, கிரியேட்டிவிட்டி இருப்பதை அறிந்தேன். வீட்டுக்கு முன்னே உள்ள மல்லிகை பந்தல், தொட்டியில் இருக்கும் கற்றாழைச் செடினு பாக்குற எல்லாத்தையும் வரைவாங்க. வாட்டர் கலர் எப்படிப் பயன்படுத்துறதுனு சொன்னேன்.

அமுதா
அமுதா
நா.ராஜமுருகன்

அதன் பிறகு, அந்தக் கலவையை அவங்களே பண்ணி, ஓவியம் வரைய ஆரம்பிச்சாங்க. வர்லி ஆர்ட்ங்கிற (Warli Art) ஓவிய வடிவில் உள்ள நுணுக்கங்களை இந்த வயசுலேயே கத்துக்கிட்டு, சிறப்பா செயல்படுத்தினாங்க. அதேபோல், மதுபானி வகை ஓவியத்தையும் சிறப்பா வரைவாங்க. பென்சிலை சீவும்போது வீணாகும் தூளை வைத்தும் ஓவியம் பண்ணினாங்க.

போஸ்டர் கலர், நியூஸ் பேப்பர் ஆர்ட், ஆயில் பேஸ்டல், ட்ரை பேஸ்டல், கற்களில் பண்ணும் பெயின்டிங், பிரின்ட் மேக்கிங், வீணாகும் துணிகளை முக்கோணம், சதுரம் எனப் பல வடிவங்களில் கட் பண்ணி, அதுல பெயின்டிங் செய்வது, க்ரையான்ஸ் பென்சில்களில் வரைவது, நூலை பெயின்டில் நனைச்சு ஓவியமாக்குவதுனு பல வகை, வடிவங்களில் ஓவியம் உருவாக்கக் கத்துக்கிட்டாங்க. கலர் காம்பினேஷன் கொடுக்கிறதுலயும் நல்ல சென்ஸ் அவங்களுக்கு.

களிமண்ணைக் கொண்டு மீன், பூனை, குருவி, எலி, யானை, எலினு பல உருவங்களை செஞ்சுருக்காங்க. ப்ளாஸ்டிக் க்ளேயில் புழு, தவளை, வண்ணத்துப்பூச்சி, ஆக்டோபஸ்னு பல உருவங்களை செஞ்சுருக்காங்க.

அக்ஷிதா வரைந்த ஓவியங்கள்
அக்ஷிதா வரைந்த ஓவியங்கள்
நா.ராஜமுருகன்

1,000 ஓவியங்களை அவங்க சிறப்பா வரைஞ்சுருந்தாலும், 300 ஓவியங்களைக் கொண்டு மட்டும் இப்போதைக்கு கண்காட்சி நடத்தினோம். தொடர்ந்து, ஒவ்வொரு வருஷமும் அக்ஷிதா வரைஞ்ச ஓவியங்களை வச்சு, கண்காட்சி நடத்த இருக்கிறோம். இதுபோல், ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்கணும்'' என்றார்.

சுட்டி ஓவியக் கலைஞர் அக்ஷிதாவிடம் பேசினோம்.

``வரையாம என்னால ஒருமணிநேரம்கூட இருக்க முடியாது. மாடு, மரம், பாரதியார், வண்ணத்துப்பூச்சி, வீடு, தட்டாம்பூச்சி, கத்தாழைச் செடி, யானை, எலினு எதையாச்சும் வரைஞ்சுட்டே இருப்பேன். எதைப் பார்த்தாலும், அதை ஓவியமா வரைஞ்சுருவேன்.

அக்ஷிதா செய்த புழு, தவளை சிற்பங்கள்
அக்ஷிதா செய்த புழு, தவளை சிற்பங்கள்
நா.ராஜமுருகன்

இத்தனை பேர் நான் வரைஞ்ச ஓவியங்களை வந்து பார்த்துப் பாராட்டியது ரொம்ப சந்தோஷமா இருக்கு'' என்றார் உற்சாகமாக!

எண்ணங்கள் வண்ணங்களாகட்டும்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு