Published:Updated:

நாடு கடத்தல்... ஃபோர்ஜரி வேலை... சித்ரவதை... மியான்மரில் சிக்கித்தவிக்கும் 50 தமிழர்கள்!

மியான்மரில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள்
பிரீமியம் ஸ்டோரி
மியான்மரில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள்

விருப்பமே இல்லாமல் இந்த வேலைகளைச் செய்துவருகிறோம். டார்கெட் வைத்து ஒரு நாளைக்கு 15 மணி நேரத்துக்கும் அதிகமாக வேலை வாங்குகிறார்கள்

நாடு கடத்தல்... ஃபோர்ஜரி வேலை... சித்ரவதை... மியான்மரில் சிக்கித்தவிக்கும் 50 தமிழர்கள்!

விருப்பமே இல்லாமல் இந்த வேலைகளைச் செய்துவருகிறோம். டார்கெட் வைத்து ஒரு நாளைக்கு 15 மணி நேரத்துக்கும் அதிகமாக வேலை வாங்குகிறார்கள்

Published:Updated:
மியான்மரில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள்
பிரீமியம் ஸ்டோரி
மியான்மரில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள்

`குவைத் சூப்பர் மார்க்கெட்டில் வேலை’ என்று அழைத்துச் சென்றுவிட்டு, ஒட்டகம் மேய்க்கச் சொன்னதை ஏற்காததால் சுட்டுக் கொல்லப்பட்டார் திருவாரூர் இளைஞர் ஒருவர். அந்தச் சம்பவம் நடந்த ஒரு வாரத்துக்குள் 50 தமிழர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள், `வெளிநாட்டு வேலை’ என்று ஏமாற்றப்பட்டு நாடு கடத்தப்பட்டிருக்கும் செய்தி வெளியாகியிருக்கிறது!

எப்படிச் சிக்கினார்கள்?

வேலையில்லாமல் இருக்கும் படித்த இளைஞர்களைக் குறிவைத்து, `வெளிநாட்டில் வேலை, கைநிறைய சம்பளம்’ என ஆசைகாட்டி, வீழ்த்துவதையே தொழிலாகவைத்திருக்கிறார்கள் சில இடைத்தரகர்கள். அவர்களை நம்பி, கடன் வாங்கியும், சொத்துகளை விற்றும் வெளிநாடு களுக்குப் பறக்கும் இளைஞர்கள் அங்கே வேறு கடினமான வேலைகளில் ஈடுபடுத்தப்படுவது தொடர்கதையாகிவருகிறது. அந்த வேலையைச் செய்ய மறுக்கும் சிலர் கொலை செய்யப்படுவதும்கூட நடைபெறுகிறது. அப்படியானதொரு வலையில் வீழ்ந்து, 50 தமிழர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மியான்மரில் தற்போது சிக்கித் தவிக்கிறார்கள்.

நாடு கடத்தல்... ஃபோர்ஜரி வேலை... சித்ரவதை... மியான்மரில் சிக்கித்தவிக்கும் 50 தமிழர்கள்!

தமிழ்நாடு, டெல்லி, கேரளா போன்ற மாநிலங்களின் ஏஜென்ட்டுகள் மூலம், டேட்டா என்ட்ரி, கஸ்டமர் சர்வீஸ் போன்ற ஐடி பணிகளுக்காகவென்று நூற்றுக்கணக்கான இந்திய இளைஞர்கள் தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கே அவர்களை கம்பெனிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, வேன்களில் ஏற்றிக்கொண்டு எட்டு மணி நேரப் பயணத்தை மேற்கொண்டார்கள் லோக்கல் ஏஜென்ட்டுகள். வண்டி ஓரிடத்தில் நின்றது. இரவான பிறகு மீண்டும் கிளம்பிய வண்டிகள் நீண்டநேரப் பயணத்துக்குப் பிறகு ஓர் ஆற்றைக் கடந்திருக்கின்றன. அப்போது அவர்களின் கைப்பேசிக்கு வந்த குறுஞ்செய்தி அனைவரையும் அதிரச்செய்திருக்கிறது! ஆம், `Welcome to Myanmar’ என்பதுதான் அந்தச் செய்தி.

எந்தத் தகவலும் சொல்லப்படாமல், சட்ட விரோதமாக தாய்லாந்திலிருந்து மியான்மருக்குக் கடத்திவரப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்து பதற்றமடைந்திருக்கின்றனர் அந்த இளைஞர்கள். மேலும், சொன்னபடி டேட்டா என்ட்ரி, கஸ்டமர் சர்வீஸ் போன்ற வேலையைக் கொடுக்காமல், கிரிப்டோகரன்சி, டிஜிட்டல் ஸ்கேமிங் போன்ற இணையவழிக் குற்றங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் மோசடி வேலைகளில் ஈடுபடுத்தப்படவிருப்பதை அறிந்து அதிர்ந்துபோயிருக்கின்றனர்.

அடி, உதை... எலெக்ட்ரிக் ஷாக்!

அதன் பிறகு நடந்த சம்பவங்களை மியான்மரில் சிக்கியிருக்கும் தமிழர்களே நம்மிடம் தொலைபேசி வாயிலாக விவரித்தனர். ``விருப்பமே இல்லாமல் இந்த வேலைகளைச் செய்துவருகிறோம். டார்கெட் வைத்து ஒரு நாளைக்கு 15 மணி நேரத்துக்கும் அதிகமாக வேலை வாங்குகிறார்கள். மறுத்தால் அடி, உதை, எலெக்ட்ரிக் ஷாக் என்று துன்புறுத்து கிறார்கள். இவர்கள் செய்த சித்ரவதையில் தமிழ் இளைஞர் ஒருவரின் மண்டை உடைந்து, பல தையல்கள் போடப்பட்டன. இங்கிருந்து நாங்கள் தப்பிச்செல்ல முடியாதபடி, கேம்பஸைச் சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய மாஃபியா கும்பல், எங்களைத் தீவிரமாகக் கண்காணிக்கிறது. ஏதோ எங்களை விலைக்கு வாங்கிய அடிமைகள் போல நினைத்துக்கொண்டு, ‘நீங்கள் நாடு திரும்ப வேண்டுமென்றால் 5,000 அமெரிக்க டாலர் (4 லட்சம்) கொடுக்க வேண்டும்’ என மிரட்டுகிறார்கள்.

50 தமிழர்களுடன் சுமார் 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இப்படிப் பல்வேறு கம்பெனிகளில் சிக்கியிருக்கிறார்கள். அவர்களின் செல்போன்கள் பிடுங்கப்பட்டிருக்கின்றன. எங்களிடமிருந்து எப்போது பறிக்கப்படும் என்று தெரியவில்லை. எங்கள் நிலை குறித்து இந்தியா, மியான்மர் தூதரகங்களுக்குத் தகவல் அனுப்பியிருக்கிறோம். இந்திய அரசாங்கம் எங்களை எப்படியாவது இங்கிருந்து மீட்டு, உடனடியாக இந்தியாவுக்குக் கொண்டு செல்ல வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் எங்களின் உயிருக்கு ஆபத்து” என்று பதற்றத்துடன் தெரிவித்தனர்.

செஞ்சி மஸ்தான்
செஞ்சி மஸ்தான்

தப்பித்தாலும் சிறை... அபராதம்!

இவர்களைப்போலவே ஏமாற்றப்பட்ட பலர் அங்கிருந்து தப்பி, மியான்மர் ராணுவத்திடம் சிக்கியிருக்கிறார்கள். மூன்று நாள் விசாரணைக்குப் பிறகு அவர்கள் ஆற்றைத் தாண்டி தாய்லாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக எல்லை தாண்டிய குற்றத்துக்காக 10 நாள்களுக்கும் மேலாக தாய்லாந்து சிறையில் வைக்கப் பட்டுள்ளனர். விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்துக்குச் சென்று அபராதம் கட்டினால் மட்டுமே, தூதரகத்தின் உதவியோடு அவர்கள் நாடு திரும்ப முடியும். தப்பித்தாலும் இத்தனை சிக்கல்கள் இருப்பதால்தான், அங்குள்ளவர்கள் காணொளி மூலம் தங்களின் அவலநிலையைப் பதிவுசெய்து அனுப்ப, அது தமிழகக் காட்சி ஊடகம் ஒன்றில் ஒளிபரப்பாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து பதிலளித்துள்ள வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், ``அங்கு சிக்கியிருக்கும் அனைவருமே டூரிஸ்ட் விசாவில் சென்றிருக்கிறார்கள். எனவே, முழு விவரத்தையும் அறிந்துகொண்டு அவர்களைத் தொடர்புகொள்ள சிரமமாக இருக்கிறது. அவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டுக் கொண்டுவர தூதரகத்தின் உதவியுடன் அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டுவருகிறோம்” எனத் தெரிவித்தார்.

“மியான்மரில் சிக்கியிருக்கும் 50 தமிழர்கள் உள்ளிட்ட 300 இந்தியர்களைத் தாய்நாட்டுக்கு அழைத்துவரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும்” என முதலமைச்சர் ஸ்டாலினும் பிரதமர் மோடிக்கு அவசரக் கடிதம் எழுதியிருக்கிறார்.

இந்திய அரசின் ரியாக்‌ஷன்!

தமிழ்நாடு அரசின் கோரிக்கையையடுத்து, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன், ``அங்குள்ள இந்தியர்கள் நிலை குறித்து, மியான்மருக்கான நமது தூதர் வினய் குமாரிடம் பேசினேன். மீட்கும் நடவடிக்கைகள் குறித்து விவரித்த அவர், விரைவில் அனைவரையும் விடுவிக்க அனைத்து முயற்சிகளும் நடைபெற்றுவருவதாகத் தெரிவித்தார்” என ட்விட்டரில் கூறியிருக்கிறார். மியான்மர் இந்தியத் தூதரகமும் இதை உறுதிசெய்திருக்கிறது.

விரைவில் அவர்களை மீட்டுக் கொண்டுவர இரு நாட்டு அரசாங்கங்களும் துரிதமாகச் செயல்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குரலாக இருக்கிறது.