Published:Updated:

`எட்டு மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி-க்கள்!’ - தமிழகத்தில் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

2017-ல் திருப்பூரில் நடைபெற்ற டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் பெண்களை தாக்கிய புகாரில் சிக்கியவர் அப்போதைய திருப்பூர் ஏ.எஸ்.பி-யான ஆர்.பாண்டியராஜன். இவரை இப்போது நீலகிரி எஸ்.பி-யாக அரசு பணியிட மாற்றம் செய்திருக்கிறது.

ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் அறிவிப்பு வெளியாகப் போவதை நேற்றே நமது விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். நாம் கூறியிருந்தபடி, 54 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. ஐ.ஜி அந்தஸ்திலான அதிகாரிகளில் ஆரம்பித்து, ஏ.எஸ்.பி அந்தஸ்திலான அதிகாரிகள் வரை பலரையும் இடமாற்றம் செய்திருக்கிறது அரசு.

சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி-யாக இருந்த அன்பு, திருநெல்வேலி மாநகர ஆணையராக மாற்றப்பட்டிருக்கிறார். அவர் வகித்து வந்த பொறுப்பில், பொருளாதார குற்றப்பிரிவு பிரிவு ஐ.ஜி-யான கணேசமூர்த்தி நியமிக்கப்பட்டிருக்கிறார். சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷ்னரான தேன்மொழி அப்பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு, சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஐ.ஜி-யாக இருந்த வித்யா ஜெயந்த் குல்கர்னி சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷ்னராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

அதிகாரிகள் இடமாற்ற விவரம் கீழே

download

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் கமிஷனரான கண்ணன், சென்னை பெருநகர காவல் தெற்கு பகுதி சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அப்பொறுப்பிலிருந்த தினகரன், மேற்கு மண்டல ஐ.ஜி-யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுதாகர் மதுரை சரக டி.ஜி.ஜி-யாகவும், வி.பாலகிருஷ்ணன் சென்னை பெருநகர காவல்துறையின் கிழக்கு பகுதி இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார், தமிழ்நாடு சிறப்புக் காவல் 13-வது பட்டாலியனுக்கு கமாண்டன்ட்டாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய தூத்துக்குடி எஸ்.பி-யாக மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய திருநெல்வேலி எஸ்.பி-யாக கிருஷ்ணராஜ் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

ஏப்ரல், 2017-ல் திருப்பூரில் நடைபெற்ற டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் பெண்களை தாக்கிய புகாரில் சிக்கியவர் அப்போதைய திருப்பூர் ஏ.எஸ்.பி-யான ஆர்.பாண்டியராஜன். இதைத் தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட பாண்டியராஜனுக்கு, பின்னாளில் கரூர் மாவட்ட எஸ்.பி பொறுப்பு அளிக்கப்பட்டது. கடந்தாண்டு ஜூலையில் அங்கேயிருந்தும் மாற்றப்பட்டு, பொருளாதார குற்ற விசாரணைப்பிரிவின் எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டார். இவரை இப்போது நீலகிரி எஸ்.பி-யாக அரசு பணியிட மாற்றம் செய்திருக்கிறது.

தமிழ்நாடு காவல்துறை
தமிழ்நாடு காவல்துறை

அடையாறு துணை ஆணையராக இருந்து கரூர் எஸ்.பி-யாக நியமிக்கப்பட்ட பகலவன், மீண்டும் சென்னை மாநகரத்துக்குள் வருகிறார். அவருக்குத் திருவல்லிக்கேணி துணை ஆணையர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் சரவணன், பேரூரணி போலீஸ் பயிற்சி பள்ளியின் எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி புதிய துணை ஆணையராக வி.ஆர்.ஸ்ரீநிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த பணியிட மாற்றத்தின்படி, எட்டு மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி-க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல்துறை சட்டம்-ஒழுங்கு பிரிவுக்குள் மட்டும் ஒன்பது அதிகாரிகள் புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல்துறையின் இரண்டு கூடுதல் ஆணையர்கள், நான்கு இணை ஆணையர்கள், இரண்டு போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர்கள், ஒரு போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் என சென்னை காவல்துறை மொத்தமாகவே மாற்றமடைந்திருக்கிறது.

தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட  ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றமா... பின்னணி என்ன?
அடுத்த கட்டுரைக்கு