Published:Updated:

100 கிலோ எடை! - இளவட்டக் கல்லைத் தூக்கி ஆச்சர்யப்பட வைத்த 54 வயது சுசீந்திரம் `இளைஞர்'

சுசீந்திரத்தைச் சேர்ந்த 54 வயதுள்ள கோயில் பணியாளர் முருகன் சுமார் 100 கிலோ எடையுள்ள இளவட்டக் கல்லை சாதாரணமாகத் தூக்கி தோளில் வைத்தபடி கோயிலைச் சுற்றிவந்து வியக்க வைத்திருக்கிறார்.

இளவட்டக்கல்லைத் தூக்கும் முருகன்
இளவட்டக்கல்லைத் தூக்கும் முருகன்

இளவட்டக்கல்லைத் தூக்கினால்தான் இளைஞர்களுக்கு திருமணம் நடக்கும். பண்டைக்காலத்தில் இந்த வழக்கம் இருந்தது. இதனால் அந்தக் கல்லுக்கு மாப்பிள்ளை கல் எனப் பெயர் வந்தது. இன்று இளவட்டக்கல் பெரும்பாலான இடங்களில் காட்சிப் பொருளாக மாறிவிட்டது.

முருகன்
முருகன்

இந்தநிலையில் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தைச் சேர்ந்த 54 வயது கோயில் பணியாளர் முருகன் இளவட்டக் கல்லை சாதாரணமாகத் தூக்கி தோளில் வைத்தபடி கோயிலை சுற்றிவந்து வியக்க வைத்திருக்கிறார்.

ஜம்மு டு கன்னியாகுமரி, 3500 கி.மீ சைக்கிள் பயணம்! - மெர்சல் செய்யும் ஈரோடு இளைஞர்

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் ஊழியராக இருக்கிறார் முருகன். திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழாவுக்காக சுசீந்திரம் கோயில் சுவாமி விக்கிரஹங்களை சுமந்து சென்றார் முருகன். பூஜை முடித்து சுவாமி விக்ரஹங்களுடன் திரும்பி வந்தபோது குழித்துறை மகாதேவர் ஆலயத்தில் இளைப்பாறினர்.

இளவட்டக் கல் தூக்கிய முருகன்
இளவட்டக் கல் தூக்கிய முருகன்

அப்போது அங்கு கிடந்த இளவட்டக் கல்லைத் தூக்கி தனது தோளில் வைத்தபடி விநாயகர் சந்நிதியைச் சுற்றிவந்தார். பின்னர், மாப்பிள்ளைக் கல்லை கழுத்தைச் சுற்றி சாதாரணமாகத் தூக்கி கீழே தூக்கிப்போட்டார்.

சுமார் 100 கிலோ எடை கொண்ட அந்தக் கல்லை முருகன் தூக்குவதை அவருடன் சென்ற சிலர் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பரப்பினர். வாலிபர்கள் தூக்கவே மிகவும் சிரமப்படும் இளவட்டக் கல்லை சாதாரணமாகத் தூக்கி சுற்றிய முருகனுக்கு பாராட்டு குவிந்தவண்ணம் உள்ளது.

முருகன்
முருகன்

இதுகுறித்து முருகன் கூறுகையில், "என் பிள்ளைகளுக்கு திருமணம் ஆகி பேரப்பிள்ளைகள் உள்ளனர். நான் 1984-ம் ஆண்டில் இருந்தே திருவனந்தபுரத்துக்கு பூஜைக்காகச் செல்லும் சுவாமியின் குதிரை வாகனத்தை சுமந்து செல்வேன். அப்போது குழித்துறை கோயிலில் உள்ள இளவட்டக் கல்லைத் தூக்குவேன். கடந்த மூன்று ஆண்டுகளாக அந்தக் கல்லைத் தூக்கவில்லை. இந்த ஆண்டு அந்தக் கல்லைத் தூக்கும்போது இளைஞர்கள் வீடியோ பிடித்து வாட்ஸ் அப்பில் போட்டனர்.

கற்காடு போன்ற பகுதிகளில் உள்ள மாப்பிள்ளைக் கல்லை அடிக்கடி தூக்குவேன். ஆனால், குழித்துறையில் உள்ளது பெரிய கல் என்பதால் தூக்குவது சற்று சிரமமான விஷயம்தான். நான் கோயிலில் கிடைக்கும் உண்டக்கட்டியை விரும்பி சாப்பிடுவேன். யோகா, சூரியநமஸ்காரம், மூச்சுப்பயிற்சி தினமும் செய்வேன். இதுதான் எனது வலிமைக்குக் காரணம்" என்றார்.