Published:Updated:

கனமழை எதிரொலி: சென்னையில் போக்குவரத்து நெரிசல்!

Vikatan Correspondent
கனமழை எதிரொலி: சென்னையில் போக்குவரத்து நெரிசல்!
கனமழை எதிரொலி: சென்னையில் போக்குவரத்து நெரிசல்!
கனமழை எதிரொலி: சென்னையில் போக்குவரத்து நெரிசல்!

சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போது முதற்கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை பலத்த மழை பெய்தது.

இதில் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின. பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 200-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சென்னை மற்றும் திருவள்ளூரில் விட்டுவிட்டு மழை பெய்தது. மேலும், நேற்றும் இன்றும் கனமழை பெய்து வருகிறது. இதனால், நாளை (24-ம் தேதி) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, கோயம்பேடு, தியாகராயநகர், நந்தனம், சைதாப்பேட்டை, தாம்பரம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது.

கன மழை காரணமாக பூந்தமல்லி நெடுஞ்சாலை, புரசைவாக்கம் மில்லர்ஸ் சாலை, வேளச்சேரி, ரித்தர்டன் சாலை, எழும்பூர், சென்ட்ரல், அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், சூளைமேடு, கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் 2 அடிக்கும் மேல் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும், ஆங்காங்கே, ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் பழுதாகி நிற்கிறது. இதனால், அப்பகுதிகளில் பெரும் போக்குவரத்து நெரசில் ஏற்பட்டுள்ளது. ஒரு பகுதியை கடப்பதற்கு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. இதனால், பயணிகள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.